search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா லெமன் ஸ்பூன் போட்டியில் கலந்துகொண்டதை காணலாம்
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா லெமன் ஸ்பூன் போட்டியில் கலந்துகொண்டதை காணலாம்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டது. போட்டிகளில் கலந்துகொண்டும், நடனம் ஆடியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் சுற்றுலா விழா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    மண்பானைகளில் வைக்கப்பட்ட பொங்கல் பொங்கிய உடன், கலெக்டர் பூங்கா பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகளோடு பொங்கல் வைத்தார். அப்போது பொங்கலோ, பொங்கல் என்று சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து பூங்காவுக்கு வந்த வெளிமாநில, வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பின்னர் சுற்றுலா பயணிகள் மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு லெமன் ஸ்பூன் போட்டி நடந்தது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆர்வமுடன் கலந்துகொண்டார்.

    தொடர்ந்து பலூனை ஊதி உடைத்தல், பண் சாப்பிடுதல் போட்டி நடந்தது. ஆண்களுக்கு இசை நாற்காலி போட்டி நடத்தப்பட்டது. மழை பெய்ததால் பெண்களுக்கு இசை நாற்காலி போட்டி நடத்தப்படவில்லை. இந்த போட்டிகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் மயிலாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

    தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலா பயணிகள் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடினர். அவர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், மழையில் நனைந்தபடி நடனம் ஆடியது மற்றவர்களை உற்சாகப்படுத்தியது. இதனை சுற்றுலா பயணிகள் பலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட எல்லையோர கிராமங்களான போர்டு காலனி, கூவமூலா, பம்பலகொம்பை, குரும்பர்பாடி, சேலரை, பாம்பரை, நாயகன்பாடி, கடச்சனகொல்லி, வட்டிக்கொல்லி, செருகுன்னு ஆகிய பழங்குடியின கிராமங்களில் போலீசார், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    இதில் பொங்கல், கரும்புகள் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
    Next Story
    ×