search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகள் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டதை காணலாம்.
    X
    ஊட்டி அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகள் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டதை காணலாம்.

    ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் குறிஞ்சி திணைகளின் சிறப்பு இயல்புகள் குறித்து புகைப்பட கண்காட்சி

    பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் குறிஞ்சி திணைகளின் சிறப்பு இயல்புகள் குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சங்க இலக்கியங்களில் குறிஞ்சி திணைகளின் சிறப்பு இயல்புகள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று முதல் தொடங்கியது. கண்காட்சியை ஊட்டி அரசு கலைக் கல்லூரி துணை முதல்வர் எபினேசர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கல்லூரியில் முதுகலை தமிழ் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    குறிஞ்சி திணை என்பது மலையும், மலை சார்ந்த இடமும் ஆகும். நீலகிரி மலைப்பிரதேசம் என்பதால் அதன் சிறப்புகள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. குறிஞ்சி நிலப்பகுதியில் வளரும் சந்தனம், வேங்கை, தேக்கு, அகில், பலா ஆகிய மரங்கள், மூங்கிலரிசி, தினை, நெல் ஆகிய உணவுகள், குறிஞ்சி, காந்தள் மலர்கள், சிவப்பு ஆரக்கிளி, மயில் மற்றும் குறிஞ்சி நிலப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் தொழில், அவர்கள் வழிபட்ட தெய்வம் ஆகியவற்றின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மாணவர்களுக்கு அருங்காட்சியக காப்பாளர் முருகவேல் விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, பாடங்களில் குறிஞ்சி திணை குறித்து புகைப்படங்களுடன் குறிப்புகள் இல்லை. இங்கு கண்காட்சியில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதால், இதன் மூலம் மாணவர்கள் மேலும் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். புகைப்படங்கள் அருகே விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அருங்காட்சியக ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து சென்றனர்.
    Next Story
    ×