search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை மீது அமர்ந்து வனத்துறையினர் பயிற்சி அளித்தபோது எடுத்த படம்.
    X
    யானை மீது அமர்ந்து வனத்துறையினர் பயிற்சி அளித்தபோது எடுத்த படம்.

    முதுமலையில் சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் யானைகளுக்கு வனத்துறையினர் பயிற்சி

    முதுமலையில் சவாரியை தொடங்குவதற்காக சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் வளர்ப்பு யானைகளுக்கு வனத்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
    கூடலூர்:

    கொரோனா குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டதால், அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கை யின் பிறகு நேற்று முன்தினம் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. இதனால் அங்கு வாகன சவாரி தொடங்கப்பட்டது.

    மேலும் வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதித்தல், உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டது. ஆனால் யானை சவாரி நடைபெறவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அப்போது யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் புலிகள் காப்பக பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பல மாதங்களாக மூடிக்கிடந்த விடுதிகளை திறந்து சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    அதுபோல் யானை சவாரிக்கும் எந்த நேரத்திலும் அனுமதி அளிக்கப்படும் என்பதால் சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் வளர்ப்பு யானைகளுக்கு சவாரி ரோந்து செல்வது குறித்த பயிற்சியை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். மேலும் வளர்ப்பு யானைகள் மீது வனத்துறையினர் அமர்ந்து சவாரி செய்கின்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    ஊரடங்குக்கு முன்பு வரை சுற்றுலா பயணிகளின் சவாரிக்காக வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பல மாதங்களாக சவாரி தடை செய்யப்பட்டிருந்ததால் ரோந்து பணிக்கு மட்டுமே வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்பட்டது.

    அத்துடன் சவாரியும் நடக்காததால் தற்போது யானைகளுக்கு சவாரியை பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்ததும், உடனடியாக யானை சவாரி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×