search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறையினர் பயிற்சி"

    • கடந்த 2 ஆண்டுகளாக புலிக்குட்டிக்கு வனத்துறையினர் வேட்டையாட பயிற்சி அளித்து வந்தனர்.
    • விரைவில் அந்த புலியை காட்டில் கொண்டு போய் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் பகுதியில் ஒரு வயது புலிக்குட்டி ஒன்று முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்று படுகாயம் அடைந்தது. அந்த புலியை கடந்த 2021-ம் ஆண்டு 28-ந் தேதி வனத்துறையினர் மீட்டனர்.

    காயத்துடன் காணப்பட்ட அந்த புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் ஆலோசனைப்படி அந்த புலிக்குட்டி வால்பாறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மந்திரிமட்டம் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்ற புலிகளை போல புலிக்குட்டி வேட்டையாட முடியாமல் தவித்தது. இதனால் வேட்டையாட வசதியாக அதற்கு பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதற்காக 13 ஆயிரம் சதுர அடியில், 6 மீட்டர் உயரத்தில் ரூ.75 லட்சம் செலவில் வேலி அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக புலிக்குட்டிக்கு வனத்துறையினர் வேட்டையாட பயிற்சி அளித்து வந்தனர். முயல், பன்றி, ஆடு, கோழி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் கூண்டில் விடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. புலியின் பற்கள் சேதம் அடைந்து இருந்ததால் அதற்கும் சிறப்பு டாக்டர்களை கொண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பல் சீரமைக்கப்பட்டது.

    தொடர் பயிற்சி மற்றும் போதிய உணவு கிடைத்ததால் புலி ஆரோக்கியத்துடன் உள்ளது. தனியாக வேட்டையாடும் திறனையும் பெற்றுள்ளது. இதனால் விரைவில் அந்த புலியை காட்டில் கொண்டு போய் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    சிகிச்சைக்கு பின் புலிக்குட்டி ஆரோக்கியமாக உள்ளது. தற்போது புலிக்கு இரண்டரை வயது ஆகிறது. அதன் உடல் எடை 130 கிலோவாக உயர்ந்துள்ளது. வனப்பகுதியில் புலியை விட்டால் தனியாக வேட்டையாடும் வகையில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    புலி வேட்டையாடும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. தேசிய புலிகள் ஆணையம் உத்தரவுக்கு பின் புலி வனத்தில் விடப்படும். புலியின் செயல்பாடு குறித்து மருத்துவக்குழு வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×