என் மலர்tooltip icon

    நீலகிரி

    காதில் தீ வைக்கப்பட்டதால் யானை பலியான சம்பவம் வனநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை காயத்துடன் அவதிப்பட்டு வந்தது. யானைக்கு கால்நடை டாக்டர்கள் பழங்களில் மருந்து, மாத்திரைகள் வைத்து சிகிச்சை அளித்தனர்.

    உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானை அவ்வப்போது குடியிருப்பு, சாலைகளில் மணிக்கணக்கில் நின்றது. இதனால் குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் யானையின் உடல் நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. யானை காதின் ஒரு பகுதி அழுகி அறுந்து விழுந்தது. வேதனை தாங்கமுடியாமல் யானை அங்குள்ள தண்ணீருக்குள் நின்று அலறியது.

    யானையின் உடல்நிலை மோசமானதை அறிந்த கால்நடை டாக்டர்கள் சுகுமாரன், ராஜேஷ்குமார் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தி கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றி தெப்பக்காடு முகாமுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றனர்.

    ஆனால் முகாமுக்கு செல்வதற்குள் யானை லாரியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காயத்துக்கு சிகிச்சை அளித்தபோது யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சிகிச்சை முடிந்த பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட முடிவு செய்திருந்தோம். ஆனால் யானை அங்குள்ள குடியிருப்பு மற்றும் சாலைகளுக்கு அடிக்கடி சென்றது.

    இதனால் ஆத்திரமடைந்த சமூகவிரோதிகள் சிலர் தீ பந்தம் கொளுத்தி யானை மீது எறிந்துள்ளனர். தீ பந்தம் யானையின் தலையில் பட்டு எரிந்துள்ளது. அப்போது யானை காதின் ஒரு பகுதி எரிந்து கருகியுள்ளது. கருகிய காதின் ஒரு பகுதி அழுகி அறுந்து விழுந்துள்ளது. அதில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் யானை பலவீனம் அடைந்து பலியாகி உள்ளதாக கூறினர்.

    யானைக்கு தீ வைத்த சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுமலை புலிகள் காப்பாக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறினார்.

    தீயில் கருகி யானை பலியான சம்பவம் வனநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மோட்டார் சைக்கிள் வாங்க முடியாததால் விரக்தியடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சின்னான் (வயது 22). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    மேலும் தன்னால் மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியவில்லையே என்று மனவேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 1-ந் தேதி மதுபானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சின்னான் இறந்தார். இதுகுறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உறைபனியால் கருகாமல் இருக்க ஊட்டி பூங்காக்களில் மலர் செடிகளை பாதுகாக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    ஊட்டி:

    மலைப்பிரதேசமான ஊட்டியில் உறைபனி தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. குறிப்பாக அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் கடும் குளிர் காணப்படுகிறது. உறைபனி தாக்கத்தால் மலர் செடிகள், அலங்கார செடிகள், காய்கறி பயிர்கள் கருகுவதை தடுக்கவும், பாதுகாப்பாக வைக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை ஒட்டி மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி நடந்து வருகின்றது. சிறிய குட்டைகளை சுற்றி மற்றும் மலர் பாத்திகளில் நடவு செய்யும் மலர் நாற்றுகள் உறைபனியால் பாதிக்காமல் இருக்க சுற்றிலும் கோத்தாரி செடிகள் ஊன்றப்படுகிறது. இதன் மூலம் மலர் நாற்றுகளுக்கு பகலில் நிழல் கிடைக்கும். பூந்தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட டெல்பீனியம், சால்வியா உள்ளிட்ட மலர் செடிகள் கோத்தாரி செடிகள் கொண்டு சுற்றிலும் மூடப்பட்டு இருக்கிறது.

    இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பூங்கா முன்பகுதியில் உள்ள அலங்கார செடிகள் நிழல் வலை கொண்டு மூடப்படுகிறது. பகல் நேரங்களில் புல்வெளிகள் மற்றும் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குறிப்பாக அதிகாலையில் புற்களில் காணப்படும் உறைபனியால் கருகுவதை தவிர்க்க ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

    அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபாதையின் இருபுறங்களிலும் உள்ள அலங்கார செடிகள் கருகாமல் இருக்க கோத்தாரி செடிகள் கொண்டு மூடப்பட்டு உள்ளது. தேயிலை பூங்காவில் மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் நிழல் வலைகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கும் நிழல் வலைகள் போடப்பட்டு இருக்கிறது.

    கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

    உறைபனி தாக்கத்தால் மலர் செடிகள் மற்றும் பயிர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 16.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 6.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. சில இடங்களில் நீர் பனியும், உறைபனியும் காணப்பட்டது.
    10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து நீலகிரியில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். அவர்கள் தெர்மல் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
    ஊட்டி:

    கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 218 பள்ளிகள் 10 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன.

    முன்னதாக கொரோனா பரவலை தடுக்க பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. ஊட்டி, நஞ்சநாடு, தூனேரி, அணிக்கொரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், கோடப்பமந்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

    ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களது பெயர், வெப்பநிலை உள்ளிட்ட விவரங்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. புதிய பாடப்புத்தகங்களுடன் மாணவர்கள் வரிசையில் காத்திருந்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் பள்ளியில் மாணவர்களுக்கு தெர்மல் பரிசோதனை, முககவசம் அணிந்து உள்ளார்களா என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். எந்த இடத்தில் உட்கார வேண்டும் என்பதற்காக, மேஜையில் பெயர் ஒட்டப்பட்டு இருந்தது.

    அதற்கான இருக்கையில் மட்டும் அமர வேண்டும். அவர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். முதல் 3 நாட்கள் ஆசிரியர்கள் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னரே பாடம் நடத்தப்படுகிறது. அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி வைக்கப்பட்டு உள்ளது.

    மதிய உணவு இடைவேளையின்போது உணவு சாப்பிட்ட பின்னர், முககவசத்தை உடனடியாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நீலகிரியில் ஆசிரியர்கள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 218 பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 9, 636, 12-ம் வகுப்பு மாணவர்கள் 8, 398 என மொத்தம் 18, 034 பேர் உள்ளனர். நேற்று பள்ளிகளுக்கு 95 சதவீதம் பேர் வந்து இருந்தனர். 5 சதவீதம் பேர் வரவில்லை என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் 100 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்திருந்தனர். இதேபோல அரசு பள்ளிகளில் சுமார் 50 சதவீதக்கும் மேற்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர். மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

    பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி தேவாலா உண்டு உறைவிட பள்ளியில் தமிழக அரசு கூறிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறாதா என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். கூடலூர் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 8.30 மணி முதலே மாணவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களை ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்தனர். பின்னர் பதிவேடுகளில் பெயர் விவரங்களை சேகரித்து கொண்டு வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைத்தனர். மேலும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வைத்தனர். இதேபோல் அனைத்துப் பள்ளிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டது.
    நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை உயிரிழந்தது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் (வெளிமண்டலம்) மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக காயத்துடன் 40 வயதான ஆண் காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானையை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த யானையை வனப்பகுதியில் விட்டனர்.

    இந்த நிலையில் மீண்டும் அந்த யானையின் காதில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த யானையை 4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க நேற்று காலை முயன்றனர்.

    அப்போது மருத்துவ குழுவினர் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். உடனே அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தெப்பக்காடு முகாம் அருகே வந்தபோது லாரியில் நின்றிருந்தவாறு காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.
    கட்டுமான பொருட்கள் விற்பனை தொடர்பாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நாடுகாணி சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து கற்கள், எம்-சான்ட் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பின்ஸ் எலியாஸ் என்பவர் தனக்கு சொந்தமான 18 மினி லாரிகளில் கட்டுமான பொருட்களை கொண்டு வந்து சேரம்பாடி, சேரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு (வயது 50), பின்ஸ் எலியாசிடம் கட்டுமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமானால் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பின்ஸ் எலியாஸ் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை பின்ஸ் எலியாசிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டரை சந்தித்து ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.

    அதை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த ரசாயன பவுடர் தடவிய பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
    10,பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்காக நீலகிரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 218 பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    ஊட்டி:

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. 98 சதவீதத்தினர் திறப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    தொடர்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என மொத்தம் 218 பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    ஊரடங்குக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால், தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

    ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பிளீச்சிங் பவுடர், குளோரின் கலந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டும் கல்வி பயிலும் வகையில் மேஜைகள், இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட இடைவெளியில் தரையில் வட்டங்கள் போடப்பட்டு இருக்கிறது.

    பள்ளிக்கு வரும்போது மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்காக கிருமிநாசினி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தொற்று அறிகுறி ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட மாணவர்களை தனியாக ஒரு அறையில் அமர வைக்கவும், பின்னர் சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    வகுப்புகள் தொடங்கிய உடன் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நீர்தேக்க தொட்டிகளை நன்றாக சுத்தம் செய்த பின்னர் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் இன்று முதல் நீலகிரியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தொற்று பரவலை தடுக்க ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, உள்ளூர் மற்றும் வெளியூர் ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் பள்ளிக்கு வரும்போது கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை காண்பிக்க வேண்டும். நீலகிரியில் ஆசிரியர்களிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
    மஞ்சூர் பகுதியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக பச்சை தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இதனை நம்பி சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் பயனடைந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகவும், தேயிலை தோட்டங்களில் உரமிட்டதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் ஓரளவு மகசூல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்சமயம் கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் உள்ள பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். மழை பெய்து மகசூல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகளில் 400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தை புலி, கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்பு மற்றும் அதற்கு பிந்தைய கால கட்டங்களில் வனத்துறையினர் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதேபோல் புலிகள் கணக்கெடுக்கும் பணியிலும் வனத்துறையினர் தனியாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த நவம்பர் மாத இறுதியில் புலிகள் காப்பகத்தின் உள் மண்டல பகுதியான முதுமலை, தெப்பக்காடு, கார்குடி உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஒரு வாரத்துக்கும் மேலாக புலிகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியான சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா உள்ளிட்ட வனச்சரக ங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை வனத்துறையினர் நேற்று தொடங்கினர்.

    இதற்காக சிங்காரா, சீகூர், தெங்குமரஹாடா உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 200 இடங்களில் 400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கார வனச்சரகர் காந்தி தலைமையில் சுமார் 100 வன ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் கேமராக்களை பொருத்திய பின்னர் அதில் உருவங்கள் பதிவு ஆகிறதா என வனவிலங்கு போல் நடந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இப்பணி 2 நாட்களில் முடிவடையும் என கூறப்படுகிறது. தொடர்ந்து 1 வாரம் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்யும். அதன் பின்னர் எந்தெந்த இடங்களில் புலி நடமாட்டம் உள்ளது என வனத்துறையினர் ஆராய்ந்து எத்தனை புலிகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளது என கணக்கிட உள்ளனர்.
    ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகையை கொண்டாடினர். இளவட்டக் கல்லை தூக்கி வாலிபர்கள் அசத்தினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. தற்போதும் தங்களது கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களை கடைபிடித்து வருகிறார்கள். நீலகிரியில் தோடர் இன மக்களின் தலைமையிடமாக முத்தநாடுமந்து திகழ்கிறது. அங்கு மாவட்டம் முழுவதும் உள்ள மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் ஒன்றுகூடி ஆண்டுதோறும் மொர்பர்த் என்று அழைக்கப்படும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு ஊட்டி அருகே முத்தநாடுமந்தில் மொர்பர்த் பண்டிகையை நேற்று கொண்டாடினர். இதையொட்டி அவர்கள் விரதம் இருந்து மூன்போ என்ற கோவிலில் வழிபட்டனர். அவர்கள் சந்தன பொட்டு வைத்தும், தங்களது பாரம்பரிய உடை அணிந்தும் இருந்தனர். தொடர்ந்து மூன்போ கோவிலில் இருந்து தோடர் இன மக்கள் ஊர்வலமாக ஒர்யள்வோ என்ற கோவிலுக்கு சென்றனர். அங்கு வேண்டிக் கொண்டபோது தரையை நோக்கி குனிந்து வணங்கினர். பின்னர் தோடர் இன மக்கள் மீண்டும் மூன்போ கோவிலுக்கு சென்று வழிபட்டு, காணிக்கை மற்றும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    அந்த கோவிலை சுற்றி நின்றபடி தங்களது பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். இந்த பண்டிகையில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். இதை அடுத்து தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்ட கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 70 கிலோ எடை கொண்ட கல் மீது வெண்ணெய் பூசப்பட்டு இருந்தது. இந்த கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி, அதனை தோளில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள். வாலிபர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இளவட்ட கல்லை தூக்கினர்.

    இதுகுறித்து தோடர் இன மக்கள் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மந்துகளில் வசிக்கும் தோடர் இன மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மொர்பர்த் பண்டிகையை கொண்டாடினோம். இந்த பண்டிகையில் உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். நல்ல மழை பெய்து விளைச்சல் அதிகமாக வேண்டும். எங்களது வளர்ப்பு எருமைகள் நன்றாக இருக்க வேண்டும். கொரோனா நோயில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று வழிபட்டோம் என்றனர்.
    குன்னூரில் 4-ம் வகுப்பு மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிரேக் மோர் பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் வடமாநில தொழிலாளி ஒருவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி தொழிலாளியும், அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் 4-ம் வகுப்பு படிக்கும் அவர்களது 8 வயது மகள் மட்டும் தனியாக இருந்தார். வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.

    வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோர், சிறுமி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சிறுமியை பல இடங்களிலும தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொலக்கொம்பை போலீசில் தங்கள் மகள் மாயமானது பற்றி புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் சிறுமி பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே சிறுமி மாயமான வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த வட மாநில வாலிபர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளையும், மனைவியையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் சிறுமி மாயமான வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. சிறுமி மாயமாகி 4 வாரங்கள் ஆகியும் அவரது நிலை என்ன? என்று தெரியாமல் இருந்ததால் மாவட்டம் முழுவதும் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது.

    இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள தோட்டங்கள், நீர்நிலைகள் என பல்வேறு இடங்களில் மாணவியை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் தனியார் தோட்டம் ஒன்றில் புதர் மண்டி கிடந்த கிணற்றில் சிறுமி ஒருவரது பிணம் மிதப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் பிணத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

    விசாரணையில் அவர் மாயமான 8 வயது சிறுமி என்பது தெரியவந்தது. அந்த சிறுமியை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் என தெரிகிறது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    கொரோனா விதிமுறைகளை மீறும் விடுதிகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
    ஊட்டி:

    பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவர்கள் தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மீறினால் விடுதிகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ஊட்டிக்கு பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்கள், உணவக உரிமையாளர்களுக்கு கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் விதிமுறைகளை மீறும் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகள், காட்டேஜ்களுக்கு 'சீல்' வைக்கப்படும். உணவகங்களில் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
    ×