என் மலர்tooltip icon

    நீலகிரி

    சேரம்பாடியில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, கண்ணம்பள்ளி, சப்பந்தோடு, புஞ்சைகொல்லி, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் குடியிருப்புகளையும் இடித்து சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில் பொதுமக்களையும் தாக்கி கொன்று விடுகின்றன.

    சமீபத்தில் சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளியை சேர்ந்த நாகமுத்து, கொளப்பள்ளியை சேர்ந்த கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தராஜ், அவருடைய மகன் பிரசாந்த் ஆகியோரை காட்டுயானைகள் தாக்கி கொன்றன.

    இந்த நிலையில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி சேரம்பாடியில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி கலந்துகொண்டு பேசினார். போராட்டத்தின்போது காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும், காட்டுயானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் சேரம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.
    தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாத்தலங்கள் உள்ளது. மேலும் மலை மாவட்டம் என்பதால் இயற்கை காட்சிகளை காணவும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் நீலகிரி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    மேலும் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் களை கட்டியது. பின்னர் விடுமுறை முடிவடைந்த நிலையில் பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டது. இதனால் நீலகிரியில் முகாமிட்டிருந்த சுற்றுலாப்பயணிகள் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் வார விடுமுறை, குடியரசு தினம், தைப்பூச நாட்களில் பொதுவிடுமுறை என தொடர் விடுமுறை வருகிறது.

    இதனால் தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து குளு குளு காலநிலை மற்றும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலா கழக மண்டல பொது மேலாளர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை ஊட்டி படகு இல்லத்துக்கு 77 ஆயிரத்து 815 பேர் வந்து சென்றுள்ளனர். இதில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 28 ஆயிரத்து 64 பேர் வந்துள்ளனர். தற்போது குடியரசு தினம் உள்ளிட்ட சில நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். மேலும் சுற்றுலா தலங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைக்க அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராட்சத பாறைகள் உடைத்து அகற்றப்பட்டதால் கூடலூர் தவளமலை பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கூடலூர்:

    கூடலூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட தவளைமலை என்ற இடத்தில் ராட்சத பாறைகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதிலும் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை துறையின் உயர் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ராட்சத பாறைகளின் ஒரு பகுதியை உடைத்து அகற்ற முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தவளைமலை பகுதியில் உள்ள ராட்சத பாறைகளை உடைத்து அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வந்தது.

    இதனால் குறுகலாக காணப்பட்ட நிலையில் தற்போது சாலை அகலமாக உள்ளது. இதைத்தொடர்ந்து ராட்சத பாறைகள் உடைத்து அகற்றிய இடங்களில் 100 மீட்டர் தூரத்துக்கு புதியதாக சாலை அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் கூறும்போது, தவளமலை பகுதியில் ராட்சத பாறைகள் இருந்ததால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் சாலை குறுகலாக இருந்தது.

    தற்போது ராட்சத பாறைகள் உடைக்கப்பட்டதால் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.
    குன்னூர் அருகே தொடர் மழையால் ரேலியா அணை நிரம்பியது. உபரிநீர் வீணாகுவதை தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    குன்னூர்:

    குன்னூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த கொள்ளளவு 43.7 அடி உயரம் ஆகும். இந்த அணையில் இருந்து குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக அணை நிரம்பி வழிந்தது. பின்னர் அங்கிருந்து குடிநீருக்கு தண்ணீர் எடுக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.

    இந்த நிலையில் குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதையடுத்து அணை நிரம்பியது. இதனால் உபரிநீர் மதகு வழியாக வழிந்து ஆற்றில் வீணாக கலக்கிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது,தற்போது அணை நிரம்பி உபரிநீர் ஆற்றில் வீணாக செல்கிறது. இதை தடுத்து ஆங்காங்கே தடுப்பணை கட்டி அதில் இருந்து குடிநீர் எடுத்து வினியோகம் செய்ய கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அணையில் தண்ணீர் முழுவதும் இருக்கும் போதாவது 3 நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.
    கோத்தகிரி அருகே காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே அரவேனு பேட்டலாடா பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் நிர்மலா(வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அந்த வாலிபர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த துக்கத்தில் நிர்மலா மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, நிர்மலா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னூர் நகராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    குன்னூர்:

    குன்னூர் நகரின் முக்கிய பகுதியான மவுண்ட் ரோட்டில் நடைபாதையை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், அங்கு கடை வைக்க அனுமதி கொடுத்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குன்னூர் நகர பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் வி.பி. தெருவில் நடந்தது.

    நகர தலைவர் குங்கும்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட மகளிர் அணி பொதுசெயலாளர் கலைவாணி, மாவட்ட துணைத் தலைவர் பாப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குடிநீர், நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும், வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரகுநந்தன், நகர பொதுசெயலாளர்கள் சரவணன், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
    குன்னூர்:

    குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் இங்கு பரவலாக மழை பெய்து வருவதால், இந்த சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதனால் மழை நின்றதும் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அப்போது சாலையின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு விரிசல் அடைந்தது. இதனால் அகலப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது. அத்துடன் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு கான்கிரீட் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 10 நாட்களுக்குள் முடிக்க முடிவு செய்து, அதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சாலை விரிசல் காரணமாக கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்ல அறிவிக்கபட்டு உள்ளது. ஆனால் சில வாகனங்கள் விதிமுறையை மீறி குன்னூர் வழியாக சென்று வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தடையை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    விடாமுயற்சி, தைரியம் இருந்தால் பெண் குழந்தைகள் சாதிக்கலாம் என்று ஸ்மார்ட் பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் பேசினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினவிழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ஸ்மார்ட் பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய பெண் குழந்தைகள் தினம் குறைந்து வரும் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆண்டின் நோக்கமாகும். நீலகிரி மாவட்டத்தில் பாலின விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் அனைத்து தாய்மார்களும் முழுமையாக கண்காணிக்க படுவார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டு உள்ள ஸ்மார்ட் பெண் என்ற திட்டத்துக்காக 12 வயது முதல் 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கு என்று தனித்திறமைகள் உள்ளன. படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கினாலும், விடாமுயற்சி மற்றும் தைரியம் இருந்தால் வாழ்க்கையில் சாதித்து வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது. முன்னதாக தோடர் இன மக்கள் மற்றும் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய நடனத்தை மாணவிகள் அரங்கேற்றினர். விழாவில் ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரபு, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    மசினகுடியில் படுகாயங்களுடன் உயிரிழந்த காட்டு யானைக்கு தீ வைத்து கொடுமைப்படுத்திய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் (வெளி மண்டலம்) மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றி வந்தது. அதற்கு வனத்துறையினர் பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து தொடர்ந்து வழங்கி வந்தனர். இருப்பினும் குணமடையவில்லை.

    இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் அந்த காட்டு யானையை பிடித்து காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குணமாகவில்லை.

    இதற்கிடையே, கடந்த 1 வாரத்துக்கு முன்பு மரவகண்டி நீர்த்தேக்கத்துக்குள் காட்டு யானை தண்ணீருக்குள் நின்றவாறு இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் காட்டு யானையை பார்வையிட்டபோது இடது பக்க காதில் பலத்த தீக்காயம் இருப்பதையும், காதின் சிறிய பகுதி துண்டாகி கீழே விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 19-ம் தேதி காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து சிங்காரா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், காட்டு யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக வெளியானது. மசினகுடி மாவனல்லா பகுதியில் இரவு தனியார் விடுதி அருகே காட்டு யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து காட்டு யானை மீது வீசினர். இதில் வலி தாங்க முடியாமல் காட்டு யானை பயங்கரமாக பிளிறியவாறு அங்கிருந்து ஓடிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் உள்ளிட்ட வனத்துறையின் தனிப்படையினர் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் மசினகுடி தர்கா ரோட்டை சேர்ந்த பிரசாத் (36), மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரேமண்ட் டீன் (28) , ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் பிரசாத், ரேமண்ட் டீன் ஆக 2 பேரை கைது செய்தனர்.

    இதுகுறித்து துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறும்போது, காட்டு யானைக்கு தீ வைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒருவரை தேடி வருகிறோம். இதுபோன்று ஈவு, இரக்கம் இல்லாமல் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதற்கிடையில் காட்டுயானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்த தனியார் விடுதிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தனன், ஊராட்சி செயலாளர் கிரண் மற்றும் வனத்துறையினர் சீல் வைத்தனர்.
    நீலகிரியில் தொடர்மழையால் அணைகள் நிரம்பியதால் கோடைக்காலத்திலும் மின்உற்பத்தி பாதிக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 13 நீர்மின் நிலையங்கள் உள்ளன. அதாவது அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். பின்னர் இந்த தண்ணீரின் மூலம் நீர் மின்நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் மொத்த மின்உற்பத்தியில் 10 சதவீதம் மின்சார உற்பத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின்நிலைங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து போதிய மழை பெய்யாததாதல் அணைகளில் நீர்வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான அணைகளில் இருப்பில் உள்ள நீரை கொண்டே மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் மின்உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

    ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் நடப்பு ஜனவரி மாதம் வரை பருவ மழை தொடங்கியதையடுத்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையால் மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் தேக்கங்கள் அனைத்தும் நிரம்பியது. குறிப்பாக மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக உள்ள அணைகள் அனைத்திலும் நீர்மட்டம் உயர்ந்தது.

    இந்த நிலையில் 175 அடி உயரம் கொண்ட எமரால்டு அணைக்கு உட்பட்ட போர்த்தி அணை அதன் எல்லைப் பகுதியான போர்த்தி ஆடா வரை வெள்ளம் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அணையை ரசித்து செல்கின்றனர். குந்தா மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், தற்போது அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், நீர்மின்நிலையங்களில் கோடைக்காலத்திலும் மின்உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படாது என்று தெரிவித்தார்.
    ஊரடங்குக்கு பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு நடந்தது. பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் ஊரடங்குக்கு பின்னர் முதல் முறையாக நேற்று தமிழ் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றது. ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எழில், நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை சாய் பிரியா ஆகியோரை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    கவுதம் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் நடிகையை மோதுவது போல் வருவதும், அதற்கு நடிகை கோபமாக திட்டுவது போலவும் தாவரவியல் பூங்காவில் படமாக்கப்பட்டது. பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் செல்வது மற்றும் நடிகையுடன் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன.

    இந்த பூங்காவுக்கு வந்திருந்த வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் சினிமா படப்பிடிப்பு நடப்பதை கூடி நின்று பார்த்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து திரைப்பட இயக்குனர் எழில் கூறும்போது, ராஜேஷ்குமார் எழுதிய யுத்த சப்தம் என்ற நாவலை தழுவி புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறேன். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கவில்லை. 50 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. நீலகிரியில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளோம் என்றார். படப்பிடிப்பை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதேபோல் நடிகர் சூர்யா தயாரிப்பில் மற்றொரு திரைப்படம் ஊட்டியில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    நீலகிரியில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இது வரைவு வாக்காளர் பட்டியலை விட 2.32 சதவீதம் அதிகம் ஆகும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட சப்-கலெக்டர்கள் ரஞ்சித்சிங், மோனிகா, கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.

    நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 98 ஆயிரத்து 353 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 6 ஆயிரத்து 775 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 138 பேர் உள்ளனர்.

    குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 91 ஆயிரத்து 301 ஆண் வாக்காளர்கள், 99 ஆயிரத்து 999 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 307 பேர் உள்ளனர். கூடலூர் தனி சட்டமன்ற தொகுதியில் 92 ஆயிரத்து 108 ஆண் வாக்காளர்கள், 96 ஆயிரத்து 496 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 604 பேர் இருக்கின்றனர்.

    நீலகிரியில் மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 762 ஆண்கள், 3 லட்சத்து 3 ஆயிரத்து 270 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 49 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பின்பு புதிதாக 6,217 ஆண் வாக்காளர்கள், 7,074 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 13 ஆயிரத்து 296 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 18 வயது முதல் 19 வயதுக்குள் உள்ளோர் ஆவர். இது வரைவு வாக்காளர் பட்டியலை விட 2.32 சதவீதம் அதிகமாகும். பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளை வேட்புமனு தாக்கல் வரை மேற்கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மலா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
    ×