search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உண்ணாவிரத போராட்டத்தில் திராவிடமணி எம்.எல்.ஏ. பேசிய காட்சி.
    X
    உண்ணாவிரத போராட்டத்தில் திராவிடமணி எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

    சேரம்பாடியில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம்

    சேரம்பாடியில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, கண்ணம்பள்ளி, சப்பந்தோடு, புஞ்சைகொல்லி, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் குடியிருப்புகளையும் இடித்து சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில் பொதுமக்களையும் தாக்கி கொன்று விடுகின்றன.

    சமீபத்தில் சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளியை சேர்ந்த நாகமுத்து, கொளப்பள்ளியை சேர்ந்த கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தராஜ், அவருடைய மகன் பிரசாந்த் ஆகியோரை காட்டுயானைகள் தாக்கி கொன்றன.

    இந்த நிலையில் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி சேரம்பாடியில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி கலந்துகொண்டு பேசினார். போராட்டத்தின்போது காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும், காட்டுயானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் சேரம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.
    Next Story
    ×