என் மலர்
நீலகிரி
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்கள் உள்ளன.
ஊட்டி நகரின் குடிநீர் தேவையை பார்சன்ஸ்வேலி அணை, டைகர் ஹில் அணை, கோரிசோலா அணை, மார்லிமந்து அணை உள்ளிட்ட அணைகள் பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக மலை உச்சியில் வசிக்கும் மக்களுக்கு அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்தது. காலநிலை மாறி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்தது.
போதிய அளவு மழை பெய்ததால் அணைகளில் தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது. 50 அடி உயரம் கொண்ட பார்சன்ஸ்வேலி அணையில் 41 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.
23 அடி உயரம் கொண்ட மார்லிமந்து அணையில் 13.5 அடிக்கும், 39 அடி உயரம் கொண்ட டைகர் ஹில் அணையில் 38.5 அடிக்கும், 31 அடி உயரம் கொண்ட தொட்டபெட்டா அப்பர் அணையில் 23 அடிக்கும் நீர்மட்டம் இருக்கிறது. 35 அடி உயரம் கொண்ட கோரிசோலா அணையில் 11 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. மற்ற அணைகளிலும் தண்ணீர் போதியளவு உள்ளதால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு ஊரடங்கால் கோடை சீசன் ரத்தானது. நடப்பாண்டில் சீசன் நடந்தாலும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. இருப்பினும் கோத்தகிரி மற்றும் அதை சுற்றி உள்ள அரவேனு, கீழ்த்தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கரிக்கையூர், செம்மனாரை, உள்பட ஏராளமான ஆதிவாசி கிராமங்களில் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக காபி சாகுபடி செய்து உள்ளனர். இந்த காபி செடிகளில் ஆண்டிற்கு 2 முறை அறுவடை செய்யலாம்.
இந்த நிலையில் தற்போது அறுவடை காலமாக உள்ளது. இந்த முறை காபி செடிகளில் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் சிவப்பு நிறங்களில் காபி பழங்கள் செடிகளில் கொத்து கொத்தாக பழுத்து தொங்குகின்றன. எனவே விவசாயிகள் காபி பழங்களை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து காபி சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பரவலாக மழை பெய்து வந்ததால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு உள்ளது. காபி பழங்களை ஆண்டுக்கு 2 முறை அறுவடை செய்யலாம். அறுவடை சீசனில் 20 நாட்களுக்கு ஒரு முறை செடியில் காய்த்து உள்ள பழங்களை அறுவடை செய்ய வேண்டும். நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு செடியில் அதிகபட்சமாக 8 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். ஒரு கிலோ காபி பழங்கள் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.
இந்த பழங்களை வாங்கி செல்லும் வியாபாரிகள் அதன் தோலை நீக்கி உலர வைத்து காபி கொட்டைகளாக மாற்றி வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் காபி பொடி தயாரிக்கும்போது ஒரு கிலோ காபி பொடிக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விலை கிடைக்கும். தற்போது காபி விளைச்சல் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டி நகரில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்களில் உள்ள புல்வெளிகளில் அதிகாலையில் பச்சை நிறமே தெரியாத அளவுக்கு வெள்ளை கம்பளம் விரித்தாற்போல உறைபனி படர்ந்து காணப்படுகிறது.
ஊட்டி நகரில் இருக்கும் தொடர் உறைபனி தாக்கத்தை விட அடர்ந்த வனப்பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளது. அவலாஞ்சி, அப்பர்பவானி, போர்த்திமந்து உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
அவலாஞ்சியில் கடந்த 27-ந் தேதி மைனஸ் 4 டிகிரி செல்சியசாக பதிவானது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று மைனஸ் 2 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. அங்குள்ள வனப்பகுதிகளை ஒட்டிய அணைகளில் இருந்து மின் உற்பத்திக்காக அருகில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பதிவாகும் வெப்பநிலையை கணக்கிட கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. அணையின் கரையோரம், புல்வெளிகளில் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு பொதுமக்கள் வசிக்கவில்லை. கடும் குளிருக்கு மத்தியிலும் மின் ஊழியர்கள் மின் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியசாகவும் பதிவானது. தொடர் உறைபனியால் புல்வெளிகள் கருகும் நிலை உள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் புல்வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அலங்கார செடிகள் நிழல் வலை கொண்டு மூடப்படுகிறது. மலர் செடிகள் கோத்தாரி செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உறைபனி காரணமாக அதிகாலையில் இருசக்கர வாகனங்களை இயக்குபவர்களின் கைகள் விறைத்து விடுகிறது. குளிர் தாங்க முடியாமல் கைகளை சூடேற்றிய பின்னர் இயக்குகின்றனர். மேலும் பலர் கையுறைகளை அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர். நடைபயிற்சி செல்கிறவர்கள் கம்பளி ஆடைகள், தொப்பி அணிந்து செல்கிறார்கள். இவ்வாறு கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இதனை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோடை சீசன் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
எனினும் இந்த ஆண்டு கோடை சீசன் நடைபெற உள்ளது. இதையொட்டி சுற்றுலா தலங்களை தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்காவை கோடை சீசனுக்காக தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.
முதற்கட்டமாக சுற்றுலா பயணிகளை கவர 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. அதனை பணியாளர்கள் முறையாக பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயற்கை எழில் சூழ வனப்பகுதியின் மேடான பகுதியில் சிம்ஸ் பூங்கா அமைந்து உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. அவர்களின் வசதிக்காக தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து ஏரிக்கரை வழியாக குழந்தைகள விளையாட்டு பிரிவு வரை செல்ல வசதியாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முழு வீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, குன்னூர் சிம்ஸ் பூங்கா மேடான பகுதியில் உள்ளது. அங்கு செல்லும் வழியில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த படிக்கட்டுகளில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சென்று வர சிரமம் இருந்தது. இதனால் அவர்கள் சிம்ஸ் பூங்காவை கண்டு களிப்பதை தவிர்க்கும் நிலை காணப்பட்டது.
இந்த பிரச்சினையை தீர்க்க பல லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியிலேயே சென்று, பூங்காவை கண்டு ரசிக்கலாம். வயதானவர்களும் நடந்து செல்ல வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டாவில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தேயிலை பூங்கா செயல்பட்டு வருகிறது. இது 10½ ஏக்கர் பரப்பளவில் பூங்கா இயற்கை எழில் மிகுந்த சூழலில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இங்கு நீலகிரியின் முக்கிய பொருளாதாரமாக விளங்கும் தேயிலை விவசாயத்தை பிரபலப்படுத்தும் வகையில் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நடைபாதை வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று தேயிலை செடிகளை பார்வையிடவும், அதன் நடுவே உள்ள நிழற்குடைகளில் ஓய்வெடுக்கவும் வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் தேயிலை தோட்டத்தின் நடுவே புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.
அங்கு பச்சை தேயிலை பறிப்பது, எவ்வாறு கிரீன் டீ உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்கின்றனர். மேலும் அங்கு உற்பத்தி செய்யப்படும் கிரீன் டீயை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. தேயிலை பூங்காவுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெற உள்ளது. இதையொட்டி பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் நிழற்குடைகளை சுற்றிலும் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஏற்கனவே நர்சரியில் வளர்த்து பராமரிக்கப்பட்ட மலர் செடிகளை பணியாளர்கள் நடவு செய்து வருகின்றனர். மேரிகோல்டு, டெல்பீனியம், சால்வியா, ஆஸ்டர், கேலண்டுலா, பால்சம், டெய்சி, டையான்தஸ், பேன்சி டீலக்ஸ், வெர்பினா உள்பட 25 ரகங்களை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
தொடர் உறைபனி காரணமாக மலர் மற்றும் அலங்கார செடிகள் பாதிக்காமல் இருக்க கோத்தாரி செடிகளை கொண்டு பாதுகாக்கப்படுகிறது. தற்போது நடவு செய்யப்படும் செடிகளில் வருகிற ஏப்ரல் மாதம் பூக்கள் பூக்க தொடங்கும். அவை அப்போது வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவர இருக்கிறது.
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், குதிரை பந்தய மைதானம், காந்தல் விளையாட்டு மைதானம், எச்.பி.எப்., தலைகுந்தா, பைக்காரா, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் புல்வெளிகளின் மீது வெள்ளை போர்வையை போர்த்தியது போல உறைபனி படர்ந்து இருந்தது.
இதனால் பச்சை பசேல் என காணப்பட்ட புல்வெளிகள் எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறத்தில் காட்சி அளித்தது.
ஊட்டியில் நேற்று முன்தினம் அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. உறைபனி காரணமாக ஊட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே உறை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கேத்தி பள்ளத்தாக்கு, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி நிலவுவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அங்குள்ள மக்கள் அதிகாலை நேரங்களில் வெளியில் வர முடியாமலும், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் பணிக்கு செல்ல முடியாமலும் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் குடிப்பதற்காக குடங்களில் வைத்திருக்கும் தண்ணீர் கூட கடும் உறைபனியால் உறைந்து போய் காணப்படுகிறது.
இதுதவிர தேயிலை தோட்டங்கள், விளை நிலங்கள், புல் வெளிகள் போன்றவை மீது உறைபனி வெள்ளைக்கம்பளம் விரித்தது போல் காணப்படுகிறது. உறைபனியுடன் சேர்ந்து குளிர் காற்றும் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது.
உறைபனி மற்றும் கடும் குளிரால் பொதுமக்களும், ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாயுள்ளனர். சுற்றுலா பயணிகள் வெளியில் வர முடியாமல் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.
மாவட்டத்தில் நடப்பாண்டு, வழக்கத்திற்கு மாறாக, கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் மழை பெய்தது. இதனால் பனிப்பொழிவு குறைந்து, தேயிலை தோட்டங்களில் அரும்புகள் துளிர்விட்டு, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயிலும் சுட்டெரிப்பதால் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கம் அதிகரித்து மகசூல் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் மேரக்காய் செடிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது நிலவி வரும் கடும் உறைபனி காரணமாக மேரக்காய் செடிகளும், அதில் உள்ள காய்கள் அனைத்தும் கருகி விட்டன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தலைசிறந்த சுற்றுலா நகரமாக உள்ளது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து குதிரை சவாரி நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணி கள் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்து மகிழ்கிறார்கள். சீசன் காலமான ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகுிய காலத்தில் குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்திய பின்னர் அவற்றை கவனிக்காமல் சாலையில் திரிய விடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் சுற்றி திரியும் குதிரைகள், சவாரிக்கு பயன்படுத்தப் படுவது ஆகும். எனவே அனைத்து குதிரைகளை வருகிற 10-ந் தேதிக்குள் அரசு கால்நடை மருத்துவமனையில் பதிவு செய்து சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ.250 செலுத்தி மைக்ரோ சிப் பொறுத்திக்கொள்ள வேண்டும்.
குதிரை சவாரிக்கு மார்வாரி கத்தியவாடி இளம் குதிரை மட்டும் பயன்படுத்த வேண்டும். பந்தய குதிரைகளை பயன்படுத்தும்போது அது வேகமாக செல்லும். இதனால் சவாரி செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பந்தய குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தகூடாது. குதிரை பதிவு செய்யாமல் இருந்தாலோ, பதிவு செய்த குதிரைகளை சாலையில் திரிய விட்டலோ முதற்கட்டமாக ரூ.1000-மும், 2-வது கட்டமாக ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேலும் திரியவிட்டால் அந்த குதிரைகளை பிராணிவதை தடுப்பு சங்கம் பிடித்து செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோத்தகிரி அருகே வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் ரவிராஜா(வயது 46). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் ரவிராஜா தனது மோட்டார் சைக்கிளில் கோத்தகிரி-குன்னூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அய்யப்பன் கோவில் மண்டபம் அருகில் எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரவிராஜா படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே ரவிராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த லோகேஸ்வரன்(29) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






