என் மலர்tooltip icon

    செய்திகள்

    சக்கர நாற்காலி செல்லும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    சக்கர நாற்காலி செல்லும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிம்ஸ் பூங்காவில் சக்கர நாற்காலி செல்ல பாதை அமைக்கும் பணி மும்முரம்

    மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சிம்ஸ் பூங்காவில் சக்கர நாற்காலி செல்ல பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இதனை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோடை சீசன் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

    எனினும் இந்த ஆண்டு கோடை சீசன் நடைபெற உள்ளது. இதையொட்டி சுற்றுலா தலங்களை தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி குன்னூரில் முக்கிய சுற்றுலா தலமாக சிம்ஸ் பூங்காவை கோடை சீசனுக்காக தயார்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

    முதற்கட்டமாக சுற்றுலா பயணிகளை கவர 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. அதனை பணியாளர்கள் முறையாக பராமரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இயற்கை எழில் சூழ வனப்பகுதியின் மேடான பகுதியில் சிம்ஸ் பூங்கா அமைந்து உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. அவர்களின் வசதிக்காக தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து ஏரிக்கரை வழியாக குழந்தைகள விளையாட்டு பிரிவு வரை செல்ல வசதியாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முழு வீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறும்போது, குன்னூர் சிம்ஸ் பூங்கா மேடான பகுதியில் உள்ளது. அங்கு செல்லும் வழியில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த படிக்கட்டுகளில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் சென்று வர சிரமம் இருந்தது. இதனால் அவர்கள் சிம்ஸ் பூங்காவை கண்டு களிப்பதை தவிர்க்கும் நிலை காணப்பட்டது.

    இந்த பிரச்சினையை தீர்க்க பல லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியிலேயே சென்று, பூங்காவை கண்டு ரசிக்கலாம். வயதானவர்களும் நடந்து செல்ல வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×