search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவலாஞ்சி வனப்பகுதியில் புல்வெளியின் மீது உறைபனி படர்ந்து காணப்படுவதை காணலாம்
    X
    அவலாஞ்சி வனப்பகுதியில் புல்வெளியின் மீது உறைபனி படர்ந்து காணப்படுவதை காணலாம்

    அவலாஞ்சியில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை- கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி

    ஊட்டியில் தொடர்ந்து உறைபனி கொட்டுகிறது. அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியசாக பதிவானது. கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டி நகரில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்களில் உள்ள புல்வெளிகளில் அதிகாலையில் பச்சை நிறமே தெரியாத அளவுக்கு வெள்ளை கம்பளம் விரித்தாற்போல உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

    ஊட்டி நகரில் இருக்கும் தொடர் உறைபனி தாக்கத்தை விட அடர்ந்த வனப்பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளது. அவலாஞ்சி, அப்பர்பவானி, போர்த்திமந்து உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கும் கீழ் பதிவாகி உள்ளது.

    அவலாஞ்சியில் கடந்த 27-ந் தேதி மைனஸ் 4 டிகிரி செல்சியசாக பதிவானது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று மைனஸ் 2 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. அங்குள்ள வனப்பகுதிகளை ஒட்டிய அணைகளில் இருந்து மின் உற்பத்திக்காக அருகில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பதிவாகும் வெப்பநிலையை கணக்கிட கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. அணையின் கரையோரம், புல்வெளிகளில் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்கு பொதுமக்கள் வசிக்கவில்லை. கடும் குளிருக்கு மத்தியிலும் மின் ஊழியர்கள் மின் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 3.7 டிகிரி செல்சியசாகவும் பதிவானது. தொடர் உறைபனியால் புல்வெளிகள் கருகும் நிலை உள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் புல்வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அலங்கார செடிகள் நிழல் வலை கொண்டு மூடப்படுகிறது. மலர் செடிகள் கோத்தாரி செடிகள் கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    உறைபனி காரணமாக அதிகாலையில் இருசக்கர வாகனங்களை இயக்குபவர்களின் கைகள் விறைத்து விடுகிறது. குளிர் தாங்க முடியாமல் கைகளை சூடேற்றிய பின்னர் இயக்குகின்றனர். மேலும் பலர் கையுறைகளை அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர். நடைபயிற்சி செல்கிறவர்கள் கம்பளி ஆடைகள், தொப்பி அணிந்து செல்கிறார்கள். இவ்வாறு கடுங்குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    Next Story
    ×