என் மலர்
நீலகிரி
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளை அதிகப்படுத்துதல் மற்றும் வாக்குச் சாவடிகளை இடமாற்றுதல் தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 683 வாக்குச்சாவடிகள் இருந்தன. கொரோனா கட்டுப்பாட்டின் காரணத்தினால் ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் புதிதாக 206 துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 14 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 903 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றும் போது என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக 100 மீட்டருக்குள் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊட்டி உதவி-கலெக்டர் மோனிகாரானா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முகம்மது குதுரதுல்லா (பொறுப்பு), தேர்தல் தனி வட்டாட்சியர் புஷ்பாதேவி உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 1½ மாதத்துக்கு முன்பு அடுத்தடுத்து 3 பேரை ஒற்றை கொம்பன் யானை அடித்துக்கொன்றது. யானை மோதலில் ஒரு தந்தம் முறிந்ததால் அதற்கு ஒற்றை கொம்பன் என்று களப்பணியாளர்களும், சங்கர் என்று வனத்துறையினரும் பெயரிட்டுள்ளனர்.
3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்த அப்போதே வனத்துறை முயன்றனர்.யானையை கண்டறிய ட்ரோன் கேமிராக்களும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒற்றை கொம்பன் யானை மற்ற யானைகளுடன் கலந்து மாயமாகிவிட்டது.
சில நாட்களுக்கு பின்னர் அந்த யானை கேரள மாநிலம் நிலம்பூரில் சுற்றித்திரிவதாக ஆதிவாசி மக்கள் கூறினர். இதனையடுத்து தமிழக- கேரள வனத்துறையினர் இணைந்து ஒற்றை கொம்பன் யானையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் ஒற்றை கொம்பன் யானை மீண்டும் நீலகிரி மாவட்டம் சேரம்பாடிக்கு திரும்பியது. ஒற்றை கொம்பன் திரும்பயதால் அந்த பகுதி மக்கள் வெளியே வராமல் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதனையடுத்து யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர் 5 கும்கிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அட்டகாசம் செய்யும் யானைகளை பிடிக்கும் பணியில் அனுபவமும், திறமையும் வாய்ந்த உதவிவனப் பாதுகாவலர்கள் தினேஷ், ராஜேஷ் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை மண்டல முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் கூறும்போது, 5 கும்கிகளுடன் காட்டுயானையை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முழுமையான ஆய்வுக்கு பின்னர் நாளை (7-ந்தேதி) மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி நடக்கும். பிடிபட்ட யானை முகாமில் அடைத்து பராமரிக்கப்படும். பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என்று கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. மேலும் பல்வேறு வகையான அலங்கார மற்றும் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பூங்காவில் படகு இல்லம் அருகே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகிறது. நீல நிறத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் அதன் அருகே நின்று செல்பி எடுத்து கொள்கின்றனர்.
குறிஞ்சி செடிகளில் 17 வகைகளை சேர்ந்த செடிகள் மிதமான காலநிலை நிலவும் நீலகிரி வனப்பகுதிகளில் காணப்படுகின்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்டெபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற குறிஞ்சி வகை பூக்கத் தொடங்கி உள்ளது. மேலும் சிம்ஸ் பூங்கா நர்சரியில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாக ஊருக்குள் சுற்றி வந்த ஆண் காட்டு யானையை பிடித்து முதுமலையில் வைத்து பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இருப்பினும் யானையின் உடல் நலனை கருத்தில் கொண்டு மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்க வனத்துறையினர் நூதன முறையை கையாண்டனர்.
இதையடுத்து காட்டு யானைக்கு தர்ப்பூசணி, வாழைப்பழம், அன்னாசி, கரும்பு, பசும்தழைகளை வழங்கியவாறு வாழைத்தோட்டத்தில் இருந்து மாவனல்லா, தொட்டிலிங்க், பொக்காபுரம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வனத்துறையினர் அளித்த பழங்களை தின்றவாறு காட்டு யானை நடந்து வந்தது. இதனால் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்ததாக வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக ஆச்சக்கரை பகுதியிலிருந்து மசினகுடி வழியாக முதுமலைக்கு காட்டு யானையை அழைத்துச்செல்லும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அப்போது மன்றாடியார் என்ற இடத்துக்கு காட்டுயானை மாலை 4 மணிக்கு வந்தது. திடீரென யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து திருப்பி சென்றது. இதனைத்தடுக்க வனத்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தது. சிறிது நேரத்தில் காட்டுயானை வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடியது. இதனால் வனத்துறையினரும் காட்டு யானையை பின்தொடர்ந்து ஓடினர். ஆனால் காட்டுயானை வெகுதூரம் சென்றது. இதனால் வனத்துறையினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, பல ஆண்டுகளாக ஊருக்குள் முகாமிட்டு பொதுமக்களுடன் வாழப் பழகிவிட்ட காட்டு யானையை பாதுகாப்பாக பிடிக்க திட்டமிடப்பட்டது. இதனால் பழங்களை வழங்கி முதுமலைக்கு அழைத்துச் செல்லும் பணி நடைபெற்றது. இதில் 50 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்ற நிலையில் காட்டு யானை அந்த வழியாக தப்பி ஓடிவிட்டது. உயரதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கவலையுடன் கூறினர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 1½ மாதத்துக்கு முன்பு அடுத்தடுத்து 3 பேரை ஒற்றை கொம்பன் யானை அடித்துக்கொன்றது.
3 கும்கிகளுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். ட்ரோன் கேமராக்கள் மூலமும் தேடப்பட்டது. ஆனால் ஒற்றை கொம்பன் யானை யானைகளுடன் கலந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. சமீபத்தில் கேரள மாநிலம் நீலம்பூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானையை ஆதிவாசி மக்கள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து தமிழக- கேரள வனத்துறையினர் இணைத்து யானையை கண்காணித்து வந்தனர். சமீபத்தில் நீலகிரியையொட்டியுள்ள கேரள வனப்பகுதிக்குள் நுழைந்ததை கண்டு பிடித்தனர்.
நேற்று ஒற்றை கொம்பன் யானை நீலகிரியில் உள்ள சேரம்பாடிக்கு வந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையால் சங்கர் என்று அழைக்கப்படும் இந்த ஒற்றை கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி முகாமில் அடைக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் வாழைத்தோட்டம், மாவ நல்லா அதன் சுற்றுப்புறப் பகுதியில் பொதுமக்களுடன் 15 ஆண்டாக சகஜமாக பழகி வந்த ஆண் யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டது.
இந்த பகுதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ பந்தம் வீசியதால் வேறு ஒரு யானை பலியானது. இதனையடுத்து இந்த யானைக்கும் இதே கதி ஏற்பட்டுவிடும் என்று அறிந்த வனத்துறையினர் யானையை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
மூச்சுவிட அவதிப்படும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினால் ஆபத்து ஏற்படும் என்று அறிந்த வனத்துறையினர் முதன்முறையாக கும்கி, மயக்க ஊசி, வாகனம் இன்றி ‘ரிவால்டோ யானையை கால்நடையாக தர்பூசணி, கரும்பு உள்ளிட்டவைகளை வழிநெடுக கொடுத்து நேற்று முன்தினம் முதல் அழைத்துசென்று வருகிறார்கள். குரும்பர் பள்ளம் அருகே வந்த யானை ஆற்றில் தண்ணீர் குடித்தது. ஊழியர்கள் அதற்கு மூங்கிலை உணவாக கொடுத்தனர். அதனை தின்ற யானை அங்கேயே ஓய்வெடுத்தது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மூச்சு திணறலால் ‘ரிவால்டோ’ யானை தினமும், 3 கி.மீ., வரை மட்டுமே நடக்கிறது. அதற்கு மேல் களைப்படைந்து உறங்கி விடுகிறது.
பழம் கொடுத்து மெதுவாக தான் அழைத்து செல்ல முடியும். முதுமலைக்கு செல்ல இன்னும் 2 நாட்கள் ஆகும் என்றனர். இதனிடையே தெப்பக்காடு முகாமில் இந்த யானையை பராமரிக்க மரக்கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனப்பகுதியான வாழைத்தோட்டம், மாவநல்லா அதன் சுற்றுப்புறப் பகுதியில் பொதுமக்களுடன் 15 ஆண்டாக ‘ரிவால்டோ‘ என்ற காட்டு ஆண் யானை சகஜமாக பழகி வந்தது. சமீபத்தில் அந்த யானை போக்குவரத்து நிறைந்த சாலைக்கு அடிக்கடி வந்தது.
அதற்கு காயம் அல்லது உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சிங்காரா வனச்சரகர் காந்தன் தனது உயர் அதிகாரிகளுக்குத் தகவலைத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து யானையை கண்காணித்து வந்தனர்.
ரிவால்டோவுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரிவால்டோவுக்கு நீண்ட தந்தங்கள் இருப்பதால் கடவாய்ப் பகுதியில் புண் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதுகுறித்து வனத்துறை கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த பகுதியில் தான் காட்டு யானை தீ பந்தம் வீசியதால் பலியானது. இதனையடுத்து இந்த யானைக்கும் அதே கதி ஏற்படலாம் என்று அஞ்சப்பட்டது.
இதனையடுத்து யானையின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்த முதன்மைச் சரணாலய வனப்பாதுகாவலர் சிகிச்சைக்காக ரிவால்டோவை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
அதன்பேரில் கும்கி யானைகள் உதவியின்றி, மயக்க ஊசி செலுத்தப்படாமல், இதுவரை இல்லாத நடைமுறையாக சிங்காரா வனச்சரக அலுவலர் காந்தன் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வன ஊழியர்கள் சாலை வழியாக இந்த காட்டு யானைக்கு பழங்கள் உள்ளிடவற்றைக் கொடுத்து அதை நடக்கவைத்தே அழைத்துச்செல்கின்றனர்.
வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நடந்து மசினகுடி பகுதிக்கு வந்துள்ள இந்த யானையை அங்கு நேற்று தங்கவைத்தனர்.
இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் அதற்குப் பிடித்த பழங்களை வழங்கி சாலை வழியாக இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தங்களுடன் நெருங்கிய பழகிய ரிவால்டோ யானை பிரிந்து செல்வதை ஏற்கமுடியவில்லை. மனம் வேதனையாக உள்ளது என்ற அந்த பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள அ.தி.மு.க நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலாளர் தம்பிராமசாமி என்பவர் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஓட்டியுள்ளார். அதில் சோதனைகளை வென்று சாதனை படைக்க தமிழகம் வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர்கள் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது நீலகிரி மாவட்ட அ.தி.மு.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமம் கோக்கால். இங்கு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டது. இங்கு மது குடித்த பலர் வேலைக்கு செல்லாமல் போதையிலேயே சுற்றித்திரிந்தனர். இதனால் வருமானம் இன்றி குடும்பங்களில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கிராமம் முழுவதும் நிம்மதியின்றி தவித்தனர்.
இதனையடுத்து குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கடும் போராட்டத்துக்கு பின்னர் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. மதுக்குடிக்க போதிய வாய்ப்பு இல்லாததால் நிற்காமல் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் கிராமத்துக்கு வெளியே சிலர் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சில்லிங் முறையில் விற்பனை செய்தனர். இதனால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய கிராம ஆண்கள் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்தனர்.
இதனையடுத்து மதுவிற்கும் வாலிபர்களை பிடிக்க பழங்குடியின பெண்கள் ஒன்று சேர்ந்தனர்.
நேற்று கூட்டமாக சென்ற பெண்கள் மதுவிற்ற 10-க்கும் மேற்பட்ட வாலிபர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு மது விற்ற வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பெண்களின் இந்த செயலுக்கு போலீஸ் சூப்பிண்டு பாராட்டு தெரிவித்தார்.
இது குறித்து அந்த பகுதி பெண்கள் கூறும்போது,
சட்டவிரோத மதுவிற்பனை குறித்து உள்ளூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மதுவே எங்கள் கிராமத்துக்குள் வரக்கூடாது என்று தீர்மானித்த நாங்கள் ஒன்று சேர்ந்து சில்லிங் முறையில் மதுவிற்ற வாலிபர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தோம். இதையும் மீறி இங்கு மது விற்றால் தொடர்ந்து தடுப்போம் என்றனர்.
கிராம பெண்களின் இந்த துணிச்சல் மிக்க செயல் சிங்கப்பெண்களை நினைவுபடுத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் இருந்து கடந்த வாரம் 2 சரக்கு லாரியில் பாக்கு ஏற்றிக்கொண்டு பொன்ராஜ் (வயது 39), நிஷித் (21) ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டனர்.
ஹரியானா அருகே உள்ள ஓட்டலில் கடந்த 30-ந்தேதி இரவு சாப்பிட்டனர். பின்னர் அங்குள்ள அறையில் ஓய்வு எடுத்தனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் 2 பேருக்கும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலியால் அலறித்துடித்த 2 பேரும் மயங்கினர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 2 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. 2 டிரைவர்கள் பலியான சம்பவம் அவர்களது குடும்பம் மற்றும் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து ஹரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உணவில் நஞ்சு கலந்திருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






