என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினமும் 10-க்கும் கீழ் குறைந்து வருகிறது. தொற்று பாதித்தவர்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கொரோனா பாதிப்பு குறைந்ததால் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது. மேலும் முன்னதாக பிற இடங்களில் தினமும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தொற்று கட்டுக்குள் வந்ததால் தினமும் ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கேரளா மாநிலம் வயநாட்டில் கொரோனா பரவி வருகிறது. இதனால் எல்லையில் இருந்து நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் நாடுகாணி, தாளூர் ஆகிய 2 சோதனை சாவடிகளில் நிறுத்தப்படுகிறது. மேலும் அங்கிருந்து வருபவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்யப்படுகிறது. நீலகிரியில் இதுவரை 3 லட்சத்து 24 ஆயிரத்து 890 பேரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டியில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    ஊட்டியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலவும் பனிக்காலம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கியது. தற்போது பனிப்பொழிவு உச்சத்தை எட்டியுள்ளது. அது தற்போது தீவிரமடைந்து ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக குறைந்துள்ளது. இதனால் புல்வெளிகள் பனி படர்ந்து மினி காஷ்மீர்போல் காட்சி அளிக்கிறது.

    குறிப்பாக தலைகுந்தா, காந்தள், அவலாஞ்சி, தலைகுந்தா, அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் அடர்ந்த பனியால் வெண்பட்டு போர்த்தியதுபோன்று புல் வெளிகள் காணப்படுகிறது.

    கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய நீர் மற்றும் மண் ஆய்வு மைய முதன்மை விஞ்ஞானி கூறும்போது,

    45 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் 1976-ம் ஆண்டு இதேபோல் மிக தாமதமாக பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது பிப்ரவரி மாதம் 2.9 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    தற்போது நிலவும் காலநிலை மாற்றத்துக்கு காரணம் கடந்த ஆண்டு நிலையற்ற காலநிலையே ஆகும். இதனால் வரும் மாதங்களில் கோடை மற்றும் பருவ மழை காலங்கள் சற்று தள்ளிப்போகும். இதேபோல வடகிழக்கு பருவமழை குறையவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

    இதேபோன்று தாவரவியல் ஆய்வாளர் கூறும் போது, இந்த கடும்பொழிவால் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் நல்ல விளைச்சலை காணலாம். ஆனால் தேயிலை, உருளைக்கிழங்கு விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். மேலும் மண் வளமும் மாறுபடும். இந்த கடும் பனிப்பொழிவு மார்ச் மாதம் இறுதி வரை நிலவும் என்றார். 45 ஆண்டுகளுக்கு பின்னர் காலம் மாறி பொழியும் உறைபனியால் கோடை மற்றும் பருவமழை தள்ளிப்போகும் அபாயத்தால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கடும் பனிப்பொழிவு குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் கூறும்போது, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். பனியால் உடல் நலம் குறைந்தால் உடனே டாக்டரிடம் சென்று சிகிச்சைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் கடும் உறைபனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீலகிரிக்கு சுற்றுலா வர பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் பெரும்பாலான சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    ஊட்டியில் குப்பைகளை தரம் பிரிக்க வசதியாக உபகரணங்கள் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேகர், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களாகிய எங்களுக்கு தூய்மை பணியில் ஈடுபட கூடை, துடைப்பம், மண்வெட்டி, கொத்து போன்ற உபகரணங்கள் வழங்கவில்லை.

    குப்பைகளை 4 விதமாக பிரித்து எடுக்க ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 4 சாக்குப்பை தேவைப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கூறியும் கிடைக்கவில்லை. உரிய உபகரணங்கள் இல்லாததால் பணி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே உபகரணங்களை வழங்க வேண்டும். மாத சம்பளம் 20-ந் தேதி முதல் 25-ந் தேதிக்குள் கிடைக்கிறது. இதனால் சிரமப்பட்டு வருகிறோம். 1-ந் தேதி முதல் 5-ந் தேதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து சங்க தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-

    நாங்கள் பலமுறை கோரிக்கைகளை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டம் நடத்துவதாக கூறினால் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்து தருகிறேன் என்று சொல்வதால் போராட்டத்தை திரும்ப பெற்றோம். ஆனால் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    கடந்த 2006-ம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்த பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அரியர் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிடைக்கவில்லை. நகராட்சியில் பணிபுரிந்து இறந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஓராண்டு ஆகியும் பணப்பலன் வழங்கப்படவில்லை. வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலையும் கிடைக்கவில்லை. இதை உடனே வழங்க ஆவன செய்ய வேண்டும்.

    ஓய்வுபெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வருங்கால வைப்பு தொகை, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு, ஓய்வூதியம் மற்றும் இதர பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 1,500 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம் என்றார்.

    கோத்தகிரி அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ராம்சந்த் சதுக்கமானது 6 முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதி ஆகும். இங்கு போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும். இதனருகில் ஹோப் பார்க் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வசதிக்காக கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தார்ச்சாலை கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய் வசதியுடன் அமைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் வழிந்தோடி செல்கிறது.

    இதன் காரணமாக தார்ச்சாலை சேதமடைந்து வருவதுடன் கழிவுநீர் சாலையில் வழிந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஹோப் பார்க் மக்கள் கூறும்போது, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் அந்த வழியாக நடந்து செல்வது சிரமமாக உள்ளது. வாகனங்கள் வரும்போது, நடந்து செல்பவர்கள் மீது கழிவுநீர் தெளிக்கப்படும் நிலை காணப்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல், சேதமடைந்த சாலை மட்டும் சீரமைக்கப்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ஊட்டியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இது நவீன லாக்கர் வசதியுடன் தயாராகிறது.
    ஊட்டி:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகள் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. மேலும் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, அவற்றை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை நடத்த முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரியில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறைக்கு பூட்டு போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அலுவலக அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு என்று தனியாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நுழைவுவாயில் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு கட்டுமான பணி தொடங்கியது. கொரோனா பாதிப்பால் கட்டுமான தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. தொடர்ந்து பணி நடந்து, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. சாய்வு தளத்துடன், மழைநீர் செல்லும் வகையில் துளைகளுடன் கூடிய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்துக்கு என மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

    அந்த அறையில் நவீன முறையில் லாக்கர் வசதி ஏற்படுத்தப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. நீலகிரியில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 3 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 1,514 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,153 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1,244 வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள் உள்ளது.

    முதல் கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து முடிந்தது. பழுதுகள் கண்டறியப்பட்ட எந்திரங்கள் சரிசெய்வதற்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துஉள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்தது ஆகும். இங்குள்ள அடர்ந்த வனங்களில் காட்டுயானைகள், புலிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதுதவிர சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் வனவிலங்குகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களும் அதிகளவில் வனப்பகுதியில் வீசப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு பொருட்களோடு பிளாஸ்டிக் பொருட்களையும் தின்னும் அவல நிலையை காண முடிகிறது. இதனால் அவற்றின் உடல் நலன் பாதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை வனம் மற்றும் பொது இடங்களில் வீசக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களால் வனவிலங்குகளின் உடல் நலன் பாதிக்கப்படும். எனவே அதனை ஒழிக்க சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் எச்சரிக்கையுடன் கூறினர்.

    பள்ளி, கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,780 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று கல்லூரிகளும் திறக்கப்பட்டு விட்டன. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் உள்ள கைப்பிடிச்சுவர், படிக்கட்டுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி கூறியதாவது:-

    பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் கொரோனா பரவலை தடுக்க சுகாதார ஆய்வாளர், டாக்டர், பணியாளர்கள் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல் உள்ளதா என்று சோதனை செய்து வருகிறார்கள். இதில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், உடனே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அந்த வகையில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 1,780 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதுபோன்று கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    மாணவர்களுக்கு காய்ச்சல், சளி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம். அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் முன்கள பணியாளர்கள் 5,200 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் என்ற இணையதளத்தில் பதிவு செய்தனர்.

    அதில் இதுவரை 4 ஆயிரத்து 89 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடவில்லை. 2-ம் கட்டமாக பதிவு செய்து இருந்த 4 ஆயிரத்து 832 பேரில், இதுவரை 412 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒற்றை கொம்பன் யானை வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இன்று மாலைக்குள் மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கடந்த 1½ மாதத்துக்கு முன்பு ஒற்றை கொம்பன் எனும் காட்டுயானை 3 பேரை அடித்துக்கொன்றது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திபிடிக்க முயன்றபோது அது கேரளா தப்பி விட்டது.தமிழக- கேரள வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர்.

    நிலம்பூர் வனப்பகுதியில் இருந்து யானை கடந்த வாரம் மீண்டும் நீலகிரி மாவட்டம் சப்பந்தோடு குடியிருப்பு அருகே வந்தது.இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து ஒற்றை கொம்பன் யானையை உடனே பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து உதவிவனப் பாதுகாவலர்கள் தினேஷ், ராஜேஷ் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காட்டுயானையை பிடிக்கும் பணியில் இறங்கினர்.

    ஒரே பிரசவத்தில் பிறந்த விஜய், சுஜய் என்ற கும்கிகள் உள்ளபட பொம்மன், ஸ்ரீனிவாஸ், கலீம், முதுமலை ஆகிய 6 கும்கி வரவழைக்கப்பட்டன. மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர்களான சுகுமாறன், மனோகரன், ராஜேஷ்குமார் மற்றும் வன ஊழியர்கள் அடங்கிய குழு கடந்த 4 நாள்களாக தொடர்ந்து முயற்சி செய்தனர்.

    இதனிடையே பிடிபடும் அபயாரணம் யானைகள் முகாமில் கற்பூர மரங்களை கொண்டு கரால் எனும் மரக்கூண்டு தயாரானது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மயக்க ஊசி செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொம்பன் யானை மற்ற காட்டு யானைகளுடன் கலந்து விட்டது. வனத்துறையினர் கண்காணிக்காத இடங்களில் தனியாகவும், வனத்துறை நெருங்கும்போது காட்டுயானைகளுடன் சேர்ந்து கொள்கிறது. இதனால் யானையை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது. புத்தி கூர்மையுள்ள இந்த யானை வனத்துறையினருக்கு சவால் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறது. இதனிடையே காட்டுயானையை உடனே பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் சேரம்பாடி பகுதியில் நடமாடி வந்த யானை காப்பிக்காடு பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இதனையடுத்து அங்கு வனத்துறையினர் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது பத்துலைன் என்ற பகுதிக்கு இடம் மாறிவிட்டது. இதனையடுத்துபத்துலைன் பகுதியில் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள சோலைக்காடுகள் இருக்கும் பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்தனர். மாலை நேரமாகிவிட்டதால் யானையை தேடும் பணி கைவிடப்பட்டது.

    5-வது நாளாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி இன்று காலை தொடர்ந்தது. அடர்ந்த வனப்பகுதிக்கு யானை சென்றுவிட்டால் அது மீண்டும் கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது.கேரளா வனப்பகுதிக்கு சென்றுவிட்டால் அதனை பிடிக்க முடியாது. இதனால் மனித- யானை மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீலகிரி வனப்பகுதியிலேயே யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    அட்டகாசம் செய்த மற்ற காட்டுயானைகள் ஒரே இடத்தில் முகாமிட்டிருக்கும். அதற்கு மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி முகாமில் அடைத்துவிடுவார்கள். ஆனால் ஒற்றை கொம்பன் யானை வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. இன்று மாலைக்குள் மயக்க ஊசி செலுத்தி பிடித்துவிடுவோம் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கொடநாடு எஸ்டேட்டுக்கு வர சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணையின்போது விவாதம் நடைபெற்றது.
    ஊட்டி:

    கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் சயன், மனோஜ் உள்பட 5 பேர் ஆஜர் ஆனார்கள்.

    மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி அருணாசலம் முன்னிலையில் நடந்த இந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், பெங்களூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி உள்ள சசிகலா, விரைவில் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்து தங்க உள்ளதாகவும், அதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே கொடநாடு எஸ்டேட் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என குறிப்பிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வக்கீல் பாலநந்தகுமார், தற்போதைய சூழலில் இந்த பிரச்சினை குறித்து பேச வேண்டியது இல்லை என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    நீலகிரியில் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. தொற்று பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், அரசு மருத்துவமனைகளில் தற்போது 51 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதால் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா பரவாமல் இருக்க பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து தினமும் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் கிலோவுக்கு ரூ.1 உயர்ந்து உள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு விவசாயிகள் தங்கள் தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை சிறு தேயிலை தொழிற்சாலை களுக்கு வழங்கி வருகிறார்கள். அந்த தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பினர் நடத்தும் தேயிலை ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி விற்பனை எண் 5-க்கான ஏலம் நடந்தது. ஏலத்திற்கு மொத்தம் 13 லட்சத்து 64 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது.

    இதில் 9 லட்சத்து 59 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலை தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 90 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. அதன் அளவு 12 லட்சத்து 19 ஆயிரம் கிலோ ஆகும். இதன் ரொக்க மதிப்பு ரூ.16 கோடியே 35 லட்சம் ஆகும்.

    விற்பனையான அனைத்து ரக தேயிலை தூள்களுக்கும் கிலோ ரூ.1 விலையேற்றம் இருந்தது. சி.டி.சி. தேயிலை தூளின் உயர்ந்த பட்ச விலை கிலோ ஒன்று ரூ.301- என்றும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூளின் உயர்த்தபட்ச விலை கிலோ ரூ.256 என்றும் விற்பனையானது.

    சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை 1 கிலோ ரூ.109-ல் இருந்து ரூ.114 என்ற விலையில் ஏலம் சென்றது. விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ரூ.118-ல் இருந்து ரூ.125 என்ற விலையில் ஏலம் சென்றது.

    டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.161-ல் இருந்து ரூ.226 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ரூ.165-ல் இருந்து ரூ.208 என்ற விலையில் ஏலம் சென்றது. அடுத்த ஏலம் வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 15 லட்சத்து 93 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது.
    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடியில் ஆட்கொல்லி யானையை பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் சுற்றிதிரிந்த காட்டு யானை ஒன்று கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஊராட்சி கவுன்சிலர் உள்பட 3 பேரை அடித்து கொன்றது. அந்த யானையை மக்கள் கொம்பன் என பெயரிட்டு அழைத்தனர். இதையடுத்து ஆட்கொல்லி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன. ஆனால் அந்த யானை அங்கிருந்து தப்பி கேரள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

    இதன் காரணமாக அச்சத்தில் இருந்த பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி மீண்டும் கொம்பன் யானை சேரம்பாடி வனப் பகுதிக்குள் நுழைந்தது.

    இதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று காலை, கூடலூர் வன கோட்டத்தை சேர்ந்த வனத்துறையினர் மற்றும் கோவையை சேர்ந்த சிறப்பு குழுவினர், 3 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவினர் யானை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் சப்பந்தோடு, குடியிருப்பையொட்டி யானை நிற்பதை கண்டுபிடித்த வனத்துறையினர் உடனடியாக மயக்க ஊசி செலுத்த மருத்துவர்களிடம் கேட்டு கொண்டனர்.

    ஆனால் அதற்கு சற்று தாமதம் ஆனது. இதனால் வனத்துறையினருக்கும், டாக்டர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. யானை அங்கேயே நின்று வெகு நேரமாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்காததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    அவர்கள் வனத்துறையினரையும், மருத்துவ குழுவினரையும் கண்டித்து சேரம்பாடி சுங்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, இந்த யானை ஏற்கனவே 3 பேரை அடித்து கொன்றுள்ளது. மேலும் இந்த யானையால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக யானை உடனடியாக பிடிக்க வேண்டும் என்றோம். ஆனால் யானை இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பின்னரும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்காமல் அவர்களுக்குள் சண்டை போட்டு கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு இடையேயான சண்டையை மறந்து விரைந்து அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    ×