search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    1,780 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை- சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

    பள்ளி, கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,780 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று கல்லூரிகளும் திறக்கப்பட்டு விட்டன. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிகளில் உள்ள கைப்பிடிச்சுவர், படிக்கட்டுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி கூறியதாவது:-

    பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் கொரோனா பரவலை தடுக்க சுகாதார ஆய்வாளர், டாக்டர், பணியாளர்கள் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல் உள்ளதா என்று சோதனை செய்து வருகிறார்கள். இதில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், உடனே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அந்த வகையில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 1,780 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதுபோன்று கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

    மாணவர்களுக்கு காய்ச்சல், சளி இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம். அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் முன்கள பணியாளர்கள் 5,200 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் என்ற இணையதளத்தில் பதிவு செய்தனர்.

    அதில் இதுவரை 4 ஆயிரத்து 89 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடவில்லை. 2-ம் கட்டமாக பதிவு செய்து இருந்த 4 ஆயிரத்து 832 பேரில், இதுவரை 412 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×