search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் புல்வெளியில் உறைபனி படர்ந்து இருந்த காட்சி.
    X
    ஊட்டியில் புல்வெளியில் உறைபனி படர்ந்து இருந்த காட்சி.

    ஊட்டியில் ஜீரோ டிகிரி செல்சியஸ்: கடும் உறைபனி பொழிவு- பொதுமக்கள் அவதி

    ஊட்டியில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    ஊட்டியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலவும் பனிக்காலம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கியது. தற்போது பனிப்பொழிவு உச்சத்தை எட்டியுள்ளது. அது தற்போது தீவிரமடைந்து ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக குறைந்துள்ளது. இதனால் புல்வெளிகள் பனி படர்ந்து மினி காஷ்மீர்போல் காட்சி அளிக்கிறது.

    குறிப்பாக தலைகுந்தா, காந்தள், அவலாஞ்சி, தலைகுந்தா, அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் அடர்ந்த பனியால் வெண்பட்டு போர்த்தியதுபோன்று புல் வெளிகள் காணப்படுகிறது.

    கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய நீர் மற்றும் மண் ஆய்வு மைய முதன்மை விஞ்ஞானி கூறும்போது,

    45 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் 1976-ம் ஆண்டு இதேபோல் மிக தாமதமாக பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது பிப்ரவரி மாதம் 2.9 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    தற்போது நிலவும் காலநிலை மாற்றத்துக்கு காரணம் கடந்த ஆண்டு நிலையற்ற காலநிலையே ஆகும். இதனால் வரும் மாதங்களில் கோடை மற்றும் பருவ மழை காலங்கள் சற்று தள்ளிப்போகும். இதேபோல வடகிழக்கு பருவமழை குறையவும் வாய்ப்பு உள்ளது என்றார்.

    இதேபோன்று தாவரவியல் ஆய்வாளர் கூறும் போது, இந்த கடும்பொழிவால் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் நல்ல விளைச்சலை காணலாம். ஆனால் தேயிலை, உருளைக்கிழங்கு விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். மேலும் மண் வளமும் மாறுபடும். இந்த கடும் பனிப்பொழிவு மார்ச் மாதம் இறுதி வரை நிலவும் என்றார். 45 ஆண்டுகளுக்கு பின்னர் காலம் மாறி பொழியும் உறைபனியால் கோடை மற்றும் பருவமழை தள்ளிப்போகும் அபாயத்தால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கடும் பனிப்பொழிவு குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் கூறும்போது, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். பனியால் உடல் நலம் குறைந்தால் உடனே டாக்டரிடம் சென்று சிகிச்சைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் கடும் உறைபனியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீலகிரிக்கு சுற்றுலா வர பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் பெரும்பாலான சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    Next Story
    ×