என் மலர்
செய்திகள்

ஊட்டியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை படத்தில் காணலாம்
ஊட்டியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க புதிய கட்டிடம் - நவீன லாக்கர் வசதியுடன் தயாராகிறது
ஊட்டியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இது நவீன லாக்கர் வசதியுடன் தயாராகிறது.
ஊட்டி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகள் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. மேலும் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, அவற்றை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை நடத்த முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரியில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறைக்கு பூட்டு போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அலுவலக அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு என்று தனியாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நுழைவுவாயில் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கு கட்டுமான பணி தொடங்கியது. கொரோனா பாதிப்பால் கட்டுமான தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. தொடர்ந்து பணி நடந்து, தற்போது முடியும் தருவாயில் உள்ளது. சாய்வு தளத்துடன், மழைநீர் செல்லும் வகையில் துளைகளுடன் கூடிய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்துக்கு என மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த அறையில் நவீன முறையில் லாக்கர் வசதி ஏற்படுத்தப்படுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. நீலகிரியில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 3 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 1,514 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,153 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1,244 வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள் உள்ளது.
முதல் கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து முடிந்தது. பழுதுகள் கண்டறியப்பட்ட எந்திரங்கள் சரிசெய்வதற்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story