என் மலர்
நீலகிரி
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள சோலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மகன் குமார்(வயது 21). கூலி தொழிலாளி. இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இதற்கிடையில் அவர்களுக்கு இடையே இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் கடந்த 7-ந் தேதி திருமண ஆசை வார்த்தைக்கூறி அந்த சிறுமியை அவர் கடத்தி சென்றார். தொடர்ந்து கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுக்கல் என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, அந்த சிறுமியுடன் குமார் தங்கி இருந்தார். அப்போது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர். அப்போது செல்போன் எண் மூலம் அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவைக்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டனர். மேலும் திருமண ஆசை வார்த்தைக்கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்த குமாரையும் பிடித்தனர். தொடர்ந்த வழக்கு, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கூடலூர் பகுதியில் பருவமழை பெய்யும் காலம் முடிந்து கோடை காலம் நிலவி வருகிறது. மேலும் இரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. வறட்சியான காலநிலையால் வனப்பகுதியில் புற்கள் கருகி காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் காட்டுத்தீயும் அடிக்கடி பரவி வருகிறது.
தொடர்ந்து வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இது மட்டுமின்றி தேயிலைத்தோட்டங்கள் உள்பட விவசாய நிலங்கள் போதிய ஈரப்பதம் இன்றி காய தொடங்கியது. இதனால் பச்சை தேயிலை உள்பட விவசாய பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் என இருவேறு காலநிலையால் விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் தேயிலை தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கூடலூர் பகுதியில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று கூடலூர் மற்றும் முதுமலை, மசினகுடி, பொக்காபுரம் உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது. மேலும் சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் தேயிலை செடிகளில் பசுமை ஏற்பட்டு புதிய இளம் தளிர்கள் முளைத்து வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூலும் அதிகரித்துள்ளது.
மேலும் முதுமலை, கூடலூர் வனப்பகுதியிலும் பரவலாக அடிக்கடி மழை பெய்வதால் வறட்சியால் காய்ந்துபோன புற்கள் முளைத்து வருகிறது. இதனால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பரவலாக பெய்யும் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். மேலும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.
விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அதன்படி விவசாயிகள் வினியோகிக்கும் பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது.
அந்த தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 18, 19-ந் தேதிகளில் விற்பனை எண் 7-க்கான ஏலம் நடைபெற்றது. இதற்கு 14 லட்சத்து 83 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 10 லட்சத்து 75 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 4 லட்சத்து 8 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது.
இந்த ஏலத்தில் 60 சதவீத தேயிலைத்தூள் விற்பனையானது. அதாவது 8 லட்சத்து 86 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இதன் மதிப்பு ரூ.11 கோடியே 65 லட்சம் ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் ரூ.2 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.300, ஆர்தோடகஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.275 என விற்பனையானது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.110 முதல் ரூ.114 வரையும், உயர் வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.203 வரையும் ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.115 முதல் ரூ.117 வரையும், உயர் வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.166 முதல் ரூ.225 வரையும் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை எண் 8-க்கான ஏலம் வருகிற 25, 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த ஏலத்துக்கு 16 லட்சத்து 82 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்காக வருகிறது.
ஊட்டி:
ஊட்டியில் தே.மு.தி.க. சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க.வில் 7 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை, நீலகிரியில் எனது கட்டுப்பாட்டில் நிர்வாக பணிகள் நடைபெறுகிறது. தேர்தலை எவ்வாறு சந்திப்பது, பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.விடம் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
கடந்த முறை 41 தொகுதிகளில் போட்டியிட்டோம். இம்முறையும் 41 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்துவோம். தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இன்னும் பேச அழைக்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி என்பது வதந்தி. அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி.
4 ஆண்டுகளுக்கு பின் சசிகலா தமிழகம் வந்துள்ளார். அவர் ஒரு பெண் என்பதால் தான் வரவேற்கிறோம். மற்றபடி அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, மலை சரிவான பகுதியில் இயற்கை எழில் சூழ பரந்து விரிந்து உள்ளது. பூங்காவில் புல்வெளி தோட்டம் அழகிய கலையோடு அமைக்கப்பட்டு இருக்கிறது. மலர்கள் கொட்டுவது போன்று அமைக்கப்பட்ட மலர் அருவி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. சங்கன் கார்டன் திறந்த அரங்கு போல் அமைந்து உள்ளது. இத்தாலியன் பூங்கா 15-ம் நூற்றாண்டில் ரோம் மற்றும் பிளாரன்ஸ் நகரில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட பூங்காக்களை போல் அமைந்து இருக்கிறது.
பிரம்மை சங்கா வளைந்து, நெளிந்து செல்லும் சிக்கலான பாதைகளை கொண்டது. சாம்பிராணி செடிகளை சுவர் போல் செய்து வடிவமைத்து, உள்ளே சென்றால் எந்த வழியாக வெளியே வரவேண்டும் என்பதுகூட தெரியாத வகையில் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கிறது.
இதற்கிடையே வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெற இருக்கிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகளில் 6 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. மண்ணை பதப்படுத்தி உரமிட்டு பணியாளர்கள் நடவு செய்து வருகின்றனர்.
ஆர்கிட், சைக்ளோமன், ரெனன்குலஸ், டியூபெரஸ் பிகோனியா, கெளஞ்சியா, ரெக்ஸ், கிரைசாந்திமம், கேக்டஸ், ஜினியா, சால்வியா, பிட்டோனியா, மேரிகோல்டு உள்பட 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நர்சரி, கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக 2 லட்சம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
உறைபனியால் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நர்சரியில் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். நடவு செய்யப்பட்ட செடிகளில் ஏப்ரல் மாதத்தில் மலர்கள் பூக்கத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப் பாதையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு நடந்த கார் விபத்தில் சென்னையை சேர்ந்த 5 பலி பலியானார்கள். ஒரு வாரத்துக்கு பின்னரே கொடூர விபத்து குறித்து தெரியவந்தது.
இதுபெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இதைனையடுத்து அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கல்லட்டி பாதையில் வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வாகனங்களுக்கு தடைவிதித்தார்.
மசினகுடி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று கடந்த 8-ந்தேதி முதல் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
சாலை திறக்கப்பட்ட முதல் நாளே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கார் விபத்துக்குள்ளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 19-ந்தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு கார் விபத்துக்குள்ளானது.
நேற்றும் கேரளாவில் இருந்து ஊட்டி வந்த கார் 21-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அடுத்தடுத்த நடந்த விபத்துக்களை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உடனடி நடவடிக்கையில் இறங்கினார்.
இது குறித்து எஸ்.பி. பாண்டியராஜன் உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வெளி மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்கள் ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு செல்ல 23-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) வரை தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் உரிய ஆய்வுகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும்.
வெளி மாநில வாகனங்களை இந்தசாலையில் தொடர்ந்து இயக்க அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் முடிவடைந்ததை அடுத்து கூடலூர், பந்தலூர் பகுதியில் வறண்ட கால நிலை நிலவி வருகிறது.
இதேபோல் ஊட்டியில் உறைபனியின் தாக்கமும், குன்னூர், கோத்தகிரியில் இயல்பான கால நிலையும் நிலவி வந்தது.
கடந்த சில வாரங்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை நேரங்களில் உறைபனியும், இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்கள் குளிராலும், உறைபனியின் தாக்கத்தாலும் அவதிப்பட்டு வந்தனர்.
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலையில் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இரவு 11 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது.
விடிய, விடிய பெய்த கனமழைக்கு கோத்தகிரி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை, கோடநாடு செல்லும் சாலை உள்பட பல இடங்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் கோத்தகிரியை சுற்றியுள்ள கட்டபெட்டு, தேவர் சோலை, கீழ்கோத்தகிரி, கோடநாடு உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அருவங்காடு, ஓட்டுபட்டறை போன்ற பகுதிகளிலும் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது.
இரவில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. தொடர் மழை காரணமாக குன்னூர் பஸ்நிலையம், சந்தை, தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுதவிர தாழ்வான பகுதிகளிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
விடிய, விடிய பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி என்ற இடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தொடர்ந்து 3 மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்தன. அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வரவில்லை. இதனால் பெரும் விபத்தும், வாகன நெரிசலும் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கமும், குளிரும் நிலவி வந்த நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக உறைபனியின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. உறைபனியால் கருகி வந்த தேயிலை செடிகளும் தற்போது பெய்த மழையால் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலை வால்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் அனைத்து தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், கோவை ரெயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது. இதேபோல் அன்னூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
கூடலூர் பகுதியில் உள்ள நாடுகாணி, முண்டக்குன்னு, ஓவேலி, தோட்டமூலா உள்ளிட்ட இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதேபோல் பந்தலூர் தாலுகா சேரம்பாடி பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு வருகிறது.
இங்கு 3 பேரை கொன்ற காட்டு யானையை சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் பிடித்து முதுமலையில் உள்ள மரக்கூண்டில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த யானையை பிடித்தபோது, ஒருசில காட்டு யானைகள் வனத்துறை யினரை துரத்தியது. பின்னர் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. தற்போது அந்த காட்டு யானைகள் சேரம்பாடி பகுதியில் முகாமிட்டு சுற்றி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சேரம்பாடி மில்லத் நகரில் காட்டு யானை ஒன்று குடியிருப்புக்குள் திடீரென்று புகுந்தது. பின்னர் அந்த யானை அங்குள்ள வீடுகளை சுற்றி வந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதுடன், கதவுகளை பூட்டிவிட்டு வீடுகளுக்குள் முடங்கினார்கள்.
பின்னர் அந்த காட்டு யானை அந்தப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானை பிடிபட்டதால் நாங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் தற்போது வேறு ஒரு யானை எங்கள் பகுதியில் முகாமிட்டு வீடுகளை சுற்றி வருகிறது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
அதுபோன்று 3 பேரை கொன்ற காட்டு யானையுடன் நின்ற மற்ற யானைகளும் தொடர்ந்து சேரம்பாடியை சுற்றி வருகிறது. எனவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு இந்த காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி கோத்தகிரி அருகே கரிக்கையூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பாரம்பரிய சத்துணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரியில் பழங்குடியின மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
போஷான் அபியான் திட்டத்தின் (சத்துணவு வழங்கும் திட்டம்) கீழ் நீலகிரி மாவட்டம் முன்னோடி மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 6 மாதங்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் எடை அதிகரித்து பயனடைந்தனர். தற்போது கரிக்கையூர் பகுதியில் உள்ள பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.
அரகோடு மற்றும் ஸ்ரீமதுரை ஊராட்சிகளில் தலா 5 கிராமங்கள் என மொத்தம் 10 கிராமங்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு சத்து அதிகம் உள்ள பொருட்களான 2 கிலோ ராகி மற்றும் தலா ஒருகிலோ தினை, சாமை, கம்பு, நிலக்கடலை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் 664 பேர் பயனடைவார்கள். சுகாதாரத்துறை மூலம் பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிகளின் எடை, ரத்தத்தின் அளவு, குழந்தைகளின் உயரம், எடை போன்றவை தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் சத்தான உணவு பொருட்கள் இடம்பெற்ற கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கலெக்டர் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேனாடு, அரகோடு, ஜக்கனாரை ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக, உணவு தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர தொடங்கி உள்ளது.
அதுபோன்று மாயாறு ஆற்றுக்கு தண்ணீர் குடிக்கவும் வந்து செல்கின்றன. இந்த நிலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ் சாலை மற்றும் முதுமலையில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலை யோரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. அடிக்கடி சாலையை கடந்தும் வருகிறது.
இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள், வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்தல், தொந்தரவு செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுக்க வனத்துறையினரும் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் வரம்பு மீறும் செயல்கள் அதிகரித்து உள்ளன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை சாலையோரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது. வாகனங்களை நிறுத்தி, காட்டுயானைகளை தொந்தரவு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.






