என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கணக்கில் காட்டப்படாத ரூ.20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.

    சோதனை சாவடிகள் வழியாக மாவட்டத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பின்பே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. சோதனையின்போது, வாகனத்தின் எண், வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் விவரங்களையும் போலீசார் சேகரிக்கின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை முன்னிட்டு அமைக்கப்பட்ட நினைவுத்தூணும், ஜெ.ஜெ. தூணும், ஊட்டி மத்திய பஸ்நிலையத்தில் உள்ள ராஜீவ்காந்தி சிலையும் துணியால் மூடப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கணக்கில் காட்டப்படாத ரூ.20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 9 பறக்கும் படைகள், 9 நிலைக்குழுக்கள், 3 வீடியோ தணிக்கை குழுக்கள், 3 கணக்கு தணிக்கை குழுக்கள் மற்றும் 3 தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு குழுக்கள் அடங்கும்.

    மாவட்டத்தில் இரு நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இரு இடங்களில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் விதி மீறல்கள் குறித்து சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச்சாவடிகளில் 112 வாக்குச்சாவடிகளில் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.

    வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 4138 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூளுக்கு தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    குன்னூர்:

    குன்னூரில் உள்ள ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைன் மூலம் தேயிலைத்தூள் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். அதன்படி விற்பனை எண் 8-க்கான ஏலம் கடந்த 25, 26-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 16 லட்சத்து 82 ஆயிரம் கிலோ தேயிலைத்துள் வந்தது. அதில் 12 லட்சத்து 42 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 40 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

    ஏலத்தில் 9 லட்சத்து 86 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.12 கோடியே 34 லட்சம். இது 59 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.6 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.301, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.289 என இருந்தது.

    சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.110 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.204 வரை, டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.106 முதல் ரூ.113 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.156 முதல் ரூ.228 வரை ஏலம் போனது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-9) வருகிற 4, 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது. கடந்த 3 வாரமாக தேயிலைத்தூளுக்கு தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனியை சேர்ந்தவர் சந்திரமோகன். இவருடைய மனைவி சந்தானலட்சுமி(வயது 42). இவர் நேற்று காலை 7 மணியளவில் தனது வீட்டில் சேகரமான குப்பைகளை வெளியே உள்ள தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கு புதர் மறைவில் நின்றிருந்த காட்டெருமை திடீரென வெளியே வந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்தானலட்சுமி, அவரது வீட்டுக்குள் தப்பி செல்ல முயன்றார். எனினும் துரத்தி வந்த காட்டெருமை அவரை முட்டி தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் காட்டெருமையை வனப்பகுதியை நோக்கி விரட்டியடித்தனர். தொடர்ந்து சந்தான லட்சுமியை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் வீரமணி ஆகியோர் நேரில் சென்று, அவரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் கன்னிகாதேவி காலனிக்கு சென்று மீண்டும் காட்டெருமை ஊருக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
    கூடலூர்-கேரள எல்லையில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.19¼ லட்சம் பறிமுதல் செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    கூடலூர்:

    தமிழகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்ட வயல், நம்பியார்குன்னு, கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடிகளில் போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கூடலூர் அருகே கேரள எல்லையான நாடுகாணி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு காய்கறி முட்டைகள் ஏற்றி வருவதற்காக சென்ற சரக்கு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததாக ரதீஷ் என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், ரம்ஷீத் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சமும், துசீன் என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சமும், சாகீப் என்பவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 46 ஆயிரமும், அசீஸ் என்பவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 41 ஆயிரத்து 800-ம், முகமதுவிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.19 லட்சத்து 22 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது.
    வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

    ஊட்டி:

    சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தி.மு.க. கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல் வருகிற சட்டசபை தேர்த லின்போதும் தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும்

    அ.தி.மு.க. என்ன கைங்கரியம் செய்தாலும் மக்கள் மத்தியில் செல்லுபடியாகாது. 10 வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும் கீழ்த்தட்டு மக்களுக்கு எவ்வித நலத்திட்டங்களையும் செய்ய வில்லை.

    2019-ம் ஆண்டு தேர்தலின்போது இந்தியா முழுவதும் தேர்தலில் ஒரு சூழல் நிலவியது. ஆனால் தமிழகத்தில் மட்டும் வேறுவிதமான சூழல் நிலவியது. புதுச்சேரியை பொறுத்தவரை பாரதீய ஜனதா, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்து உள்ளது. இது பாரதீய ஜனதாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே கோவா, மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இதுபோன்று ஆட்சியை கவிழ்த்து பாரதீய ஜனதா ஆட்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவைக்கு பிரதமர் மோடி வரும்போது அங்கு காங்கிரஸ் முதல்-அமைச்சர் இருக்க கூடாது என்பதற்காக அங்கு நடந்து வந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலின்போது புதுவையில் பொதுமக்கள் கண்டிப்பாக பாரதீய ஜனதாவை நிராகரிப்பார்கள்.

    கூட்டுறவு கடன் தள்ளுபடியை பொறுத்தவரை ஏமாற்று வேலை. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 3 தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீலகிரி மாவட்ட வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளை பிரிப்பது, வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது ஆகிய பணிகள் நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 171 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 14 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது 868 வாக்குச்சாவடிகளாக உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் இன்னும் பல பள்ளிகள் திறக்கப்படாமல் மூடிய நிலையில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளில் தண்ணீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்து, அதனை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, அதன் அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா பரவலை தடுக்க வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்காக கிருமிநாசினி வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு நபர் நியமிக்கப்படுகிறார்.

    மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் முதலில் 7 மேஜைகள் போடுவதற்கு வழிவகை இருந்தது.

    தற்போது இடவசதி இருந்தால் 14 மேஜைகள் போட்டுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக மேஜைகள் அமைக்க ஆய்வு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலி பிளவர், நூல்கோல், மேரக்காய், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். அதில் கடந்த சில மாதங்களாக கேரட் கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

    இதனால் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, கட்டப்பெட்டு, வ.உ.சி. நகர், காவிலோரை, கூக்கல்தொரை, மசக்கல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கேரட் பயிரிட்டனர். தற்போது கேரட் நன்கு விளைந்து அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் அறுவடை செய்த கேரட்டுகளை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கேரட்டுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைத்ததால், ஏராளமான விவசாயிகள் கேரட் பயிரிட்டனர். ஆனால் தற்போது வரத்து அதிகரித்ததால், விலை வீழ்ச்சி அடைந்து, கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அறுவடை செய்த கேரட்டுகளை விளைநிலங்களில் இருந்து மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லும் சரக்கு வாகன வாடகை கூலிக்கு கூட வருமானம் கிடைக்கவில்லை. இதனால் கேரட்டுகளை கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கி வருகிறோம். இதனால் எங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அரசு தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    கொரோனா இல்லை சான்றிதழ் மற்றும் இ-பதிவு செய்திருந்தால் அவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து கொண்டு நீலகிரிக்குள் அனுமதிக்கின்றனர். அப்படி எந்தவித ஆவணமும் இல்லாமல் வருபவர்களின் வாகனங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    கொரோனா தொற்று குறைவு மற்றும் தளர்வுகள் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியது.அதன்படி கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றுடன் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்தார்.

    இதையடுத்து தமிழக- கேரளா எல்லையான நாடுகாணி, தாளூர், பாட்ட வயல், சோலாடி, தமிழக- கர்நாடகா எல்லையான கக்கநல்லா உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கொரோனா மையம் அமைத்துள்ளனர்.

    கேரளா, கர்நாடாகவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி அதில் உள்ளவர்களிடம் இ-பதிவு செய்துள்ளீர்களா? கொரோனா இல்லை சான்று வைத்திருக்கிறீர்களா? என ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொரோனா இல்லை சான்றிதழ் மற்றும் இ-பதிவு செய்திருந்தால் அவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து கொண்டு நீலகிரிக்குள் அனுமதிக்கின்றனர். அப்படி எந்தவித ஆவணமும் இல்லாமல் வருபவர்களின் வாகனங்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகளில் கூறுகையில், நீலகிரியை இருப்பிடமாக கொண்டவர்கள், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வருபவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டு அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தொற்று பரிசோதனை சான்று பெறாமல் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரளாவில் இருந்து நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு ‘கொரோனா இல்லை’ என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 15-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த மாநில எல்லையை ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்து இருப்பதால், அங்கிருந்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறும்போது, ‘கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக கேரள சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை எடுத்து, தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் நீலகிரிக்குள் கொண்டு வர வேண்டும். என்றார்.
    குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி பகுதியில் குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டு சுற்றித்திரிந்து வருகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக குரங்குகள் அதிகளவில் உள்ளன. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையில் செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன. இதனால் அவ்வப்போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

    இதனை தடுக்க வனத்துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டும் எவ்வித பயனும் இல்லை. சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி நீலகிரியில் உள்ள பொதுமக்களும் தொடர்ந்து குரங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி பகுதியில் குட்டி இறந்தது தெரியாமல் தாய் குரங்கு அதனை சுமந்து கொண்டு சுற்றித்திரிந்து வருகிறது.

    கூட்டத்தோடு சுற்றி திரியும் அந்த தாய் குரங்கின் பாசப்போராட்டம், பார்ப்போரை கவலை அடைய வைத்துள்ளது. இந்த சிலர் தங்களது செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி வைரலாகி வருகிறது.
    ஆசிரியர் தம்பதிக்கு தொற்று உறுதியானதால், ஊட்டியில் 2 பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் 200 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    ஊரடங்கு தளர்த்தப்பட்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நீலகிரி மாவட்டத்தில் 9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே ஊட்டி மேரிஸ்ஹில் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவரது மனைவி மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவருக்கும் பரிசோதனை செய்ததில் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து 2 பேரும் பள்ளிகளுக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தியதால் சக ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.தொடர்ந்து சுகாதாரத்துறையினர் 2 பள்ளிகளில் முகாமிட்டு ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என 200 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவு இன்னும் வரவில்லை.

    இந்த நிலையில் மாதிரி கொடுத்த மாணவர்களின் செல்போன் எண்களுக்கு மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளதால் வெளியே செல்லக்கூடாது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

    ஆனால், ஒரு அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவ-மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.கொரோனா பரவலை தடுக்க பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக 2 அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மசினகுடி-ஊட்டி சாலையில் ஸ்கூட்டரில் வந்த இளம்பெண்ணை காட்டு யானை வழிமறித்தது. அப்போது அவர் ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஓடியதால் உயிர் தப்பினர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி உள்ளது. வனப்பகுதியையொட்டி இந்த பகுதி உள்ளதால் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு மசினகுடியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் சீகூர் பாலம் பகுதியில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிறுது நேரம் சாலை நடுவில் நின்று இருந்த காட்டு யானை மெதுவாக சாலையை கடக்க முயன்றது. இந்த சமயத்தில் ஊட்டியில் இருந்து மசினகுடி நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. இதனால் காட்டு யானை காரை நோக்கி நடந்தவாறு வந்தது. அப்போது காருக்கு பின்னால் இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தார்.

    அப்போது ஸ்கூட்டரில் வந்த பெண்ணை காட்டு யானை திடீரென வழிமறித்து விரட்ட தொடங்கியது. இதனால் பயந்துபோன அந்த பெண் மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு விட்டு வந்த வழியாக தப்பி ஓடினார். தொடர்ந்து வந்த காட்டு யானை சாலையில் கிடந்த மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து சேதப்படுத்தியது. மேலும் துதிக்கையால் மோட்டார் சைக்கிளை தூக்கி வீசியது.

    இதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் கூச்சலிட்டு சத்தம் போட்டனர். தொடர்ந்து காட்டு யானையும் அங்கிருந்து சென்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து அந்தப் பெண் சேதமடைந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்களின் உதவியுடன் அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கோடைக்காலம் தொடங்க உள்ளதால் கூடலூர், முதுமலை, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். மேலும் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் நின்றிருந்தால் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. அவ்வாறு தொந்தரவு செய்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்களை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×