search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிமுதல்
    X
    பணம் பறிமுதல்

    நீலகிரியில் பறக்கும் படை சோதனையில் ரூ.20¾ லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கணக்கில் காட்டப்படாத ரூ.20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.

    சோதனை சாவடிகள் வழியாக மாவட்டத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பின்பே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. சோதனையின்போது, வாகனத்தின் எண், வாகன உரிமையாளரின் பெயர் மற்றும் விவரங்களையும் போலீசார் சேகரிக்கின்றனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை முன்னிட்டு அமைக்கப்பட்ட நினைவுத்தூணும், ஜெ.ஜெ. தூணும், ஊட்டி மத்திய பஸ்நிலையத்தில் உள்ள ராஜீவ்காந்தி சிலையும் துணியால் மூடப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் கணக்கில் காட்டப்படாத ரூ.20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 9 பறக்கும் படைகள், 9 நிலைக்குழுக்கள், 3 வீடியோ தணிக்கை குழுக்கள், 3 கணக்கு தணிக்கை குழுக்கள் மற்றும் 3 தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு குழுக்கள் அடங்கும்.

    மாவட்டத்தில் இரு நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சத்து 73 ஆயிரத்து 800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இரு இடங்களில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் விதி மீறல்கள் குறித்து சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். மாவட்டத்தில் உள்ள 868 வாக்குச்சாவடிகளில் 112 வாக்குச்சாவடிகளில் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது.

    வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 4138 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×