என் மலர்tooltip icon

    நீலகிரி

    கடந்த 1 வாரத்துக்கு முன்பு கூடலூர் பகுதியில் கோடை மழை பெய்தது. சரியான பருவத்தில் மழை பெய்ததால் காபி செடிகள் பூத்துள்ளது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு இணையாக கூடலூர் பகுதியில் பல ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிர்கள் விளைகிறது. இதேபோல் கேரளாவின் வயநாடு, கர்நாடகா பகுதியில் காபி விளைவிக்கப்படுகிறது. அரபிக்கா, ரொபஸ்டா என 2 ரகங்கள் உள்ளது. கூடலூர் பகுதியில் ஆண்டுக்கு 2 முறை காபி அறுவடை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காபி அறுவடை சீசன் தொடங்கியது.

    ஆனால் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் பனிப்பொழிவு மிகவும் தாமதமாக காணப்பட்டது. இதனால் அறுவடை சீசன் முடிவடைவதற்கு முன்பாகவே காபி செடிகள் அடுத்த விளைச்சலுக்காக பூக்கத் தொடங்கியது. மேலும் காபி பழங்களை பறிக்கும்போது பூக்களும் உதிர்ந்து வந்தது. இதனால் விளைச்சல் பாதிக்கும் நிலை காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூடலூர் பகுதியில் கோடை மழை பரவலாக பெய்தது.

    இதனால் தேயிலை, காபி தோட்டங்களில் போதிய ஈரப்பதம் உண்டானது. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து காபி தோட்டங்களில் உள்ள செடிகள் பூத்து காணப்படுகிறது. மேலும் பூக்களின் மணம் கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் வீசுகிறது. சரியான பருவத்தில் காபி செடிகள் பூத்து உள்ளதாக காபி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடும் பனிப்பொழிவால் 20 சதவீத அளவுக்கு காபி செடிகள் பூத்து இருந்தது. ஆனால் அறுவடை சீசன் என்பதாலும், மழை பெய்யாததாலும் பூக்கள் காய்ந்து கருகி விட்டது. கடந்த 1 வாரத்துக்கு முன்பு கூடலூர் பகுதியில் கோடை மழை பெய்தது. சரியான பருவத்தில் மழை பெய்ததால் காபி செடிகள் பூத்துள்ளது. மழை பெய்து நிலத்தில் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே பூக்கள் காயாக மாறி விளைச்சல் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கல்லட்டி மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் தடுப்பில் மோதிய விபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா வந்த தனியார் நிறுவன மேலாளர் பலியானார்.
    ஊட்டி:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 34). இவர் தனியார் மாலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே அவர் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தார். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக தலைகுந்தா பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு செல்ல அனுமதி இல்லை. இதையடுத்து அவர் அங்குள்ள ஒர்க்ஷாப்பில் தனது காரை பழுது பார்ப்பதற்காக நிறுத்தினார்.

    மெக்கானிக் காரில் பிரேக் குறைவாக உள்ளது என்று தெரிவித்து சரி செய்தார். தொடர்ந்து அந்த மெக்கானிக் வெளிமாநில வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நான் உங்களது காரை கல்லட்டி வழியாக சீகூர் வரை ஓட்டி வருகிறேன். எனது மோட்டார் சைக்கிளை நீங்கள் ஓட்டி வாருங்கள் என்று கூறி உள்ளார். இதனை ஏற்ற நவீன்குமார் தனது குடும்பத்தினரை காரில் ஏற்றி மெக்கானிக் உடன் அனுப்பி விட்டு, பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    கல்லட்டி மலைப் பாதையை கடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட நவீன்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் சுற்றுலா வந்த இடத்தில் இப்படி நடந்து விட்டதே என்று கதறி அழுதனர். புதுமந்து போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் கல்லட்டி மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளது. கருஞ்சிறுத்தையை பிடிக்கும் வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியே விட வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி 60 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மலை மாவட்டமாகும் இங்கு சிறுத்தை, கரடி, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

    இந்நிலையில் குன்னூர் வண்டிசோலை மற்றும் அளக்கரை சாலையில் எமகுண்டு குடியிருப்பு உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.நேற்று நள்ளிரவு ஊருக்குள் புகுந்து ஒரு கருஞ்சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் என்பவரது நாயை கவ்விச்சென்றது.

    இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த காண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்து உறைந்துபோன பொதுமக்கள் கட்டப்பெட்டு வனத்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இது எமகுண்டு காலனி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் இதற்கு முன்பு தமிழக அரசு கொடுத்து விலையில்லா ஆடுகளை கருஞ்சிறுத்தை கவ்விச்சென்றது.

    இது குறித்து வனத்துறைக்கு தெரிவித்தோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாடியுள்ளது. அடுத்தடுத்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    இதனையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளது. கருஞ்சிறுத்தையை பிடிக்கும் வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியே விட வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    3 சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிடங்கு திறக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு கிடங்கில் சீல் அகற்றப்பட்டது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்துக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. தற்போது 1,508 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,140 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 1,197 வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள் என மொத்தம் 3,845 எந்திரங்கள் உள்ளன. 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் போதுமான அளவில் எந்திரங்கள் இருக்கிறது. எந்திரங்களை முதல் கட்டமாக சரிபார்க்கும் பணி நடந்து முடிந்தது.

    தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிப்பது, தாங்கள் வாக்களித்த சின்னத்தில் வாக்கு பதிவாகி உள்ளதா என்பதை சரிபார்க்கும் வசதி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயிற்சிக்காகவும் 45 எந்திரங்கள் வெளியே எடுக்கப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 15 எந்திரங்கள் என தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    வேட்புமனு தாக்கல் கடைசி நாளன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாதுகாப்பு அறையில் வைத்துக் கொள்ளலாம். மீண்டும் இந்த எந்திரங்கள் சரிபார்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    குன்னூர் அருகே கருஞ்சிறுத்தை குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்வி சென்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    குன்னூர்:

    குன்னூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் வண்டிசோலை மற்றும் அளக்கரை சாலையில் எம்குண்டு குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் 150 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை சுற்றி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு எமகுண்டு குடியிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் இருந்தது. இதுகுறித்து கட்டபெட்டு வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு கட்டிருந்த நாய் திடீரென மாயமானது. அதனை எங்கும் தேடியும் காணவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த நாயின் உரிமையாளர் அந்த பகுதியில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது கருஞ்சிறுத்தை குடியிருப்புக்குள் உலா வந்ததும், பின்னர் அந்த கருஞ்சிறுத்தை நாயை கவ்வி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிக்குள் கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனித-வனவிலங்குள் மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவாக வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு, கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
    ஊருக்குள் புகுந்த காட்டு யானையை பிடித்து மசினகுடி பகுதியில் மரக்கூண்டில் அடைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் உள்ள பொக்காபுரம், வாழைத்தோட்டம், மாவனல்லா, தொட்டிலிங்க் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானை (ரிவால்டோ) வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. மேலும் விவசாய பயிர்களை தின்றும் சேதப்படுத்தி வருகிறது.

    இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். சில நேரங்களில் மசினகுடி-ஊட்டி சாலையில் உலா வந்து வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த காட்டு யானை மீது தீப்பந்தம் வீசியதால், காயமடைந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல மசினகுடி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என வனத்துறையினர் எண்ணினர். மேலும் அந்த யானைக்கு சுவாச பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து நூதன முறையில் பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

    தொடர்ந்து காட்டு யானையை பிடிக்கும் பணியை தற்காலிகமாக வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் காட்டு யானையை மசினகுடியில் இருந்து முதுமலைக்கு அழைத்து செல்வது கடினமான காரியம் என்பவதால், அந்த பகுதியிலேயே புதிதாக மரக்கூண்டு அமைத்து யானையை பிடித்து அடைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து சிங்காரா வனத்துறையினர் கூறும்போது, மசினகுடியில் முகாமிட்டு வரும் காட்டு யானைக்கு பொதுமக்கள் ரிவால்டோ எனப் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். ஊருக்குள் முகாமிட்டு பழகிவிட்டதால் வனத்துக்குள் செல்வதில்லை.

    இதனால் பாதுகாப்பு கருதி காட்டு யானையை நூதன முறையில் முதுமலைக்கு அழைத்துச் சென்று பிடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவு நிறைவேறவில்லை. இதனால் காட்டு யானை முகாமிடும் பகுதியில் மரக்கூண்டு (கரால்) அமைத்து அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி சில தினங்களில் தொடங்கப்படும். பின்னர் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி போன்ற வழிமுறைகளை வாக்காளர்கள் கடைப்பிடித்து வாக்களிக்கும் பொருட்டு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணைய அறிவுரைப்படி நீலகிரியில் 683 வாக்குச்சாவடிகளில் இருந்து 868 வாக்குச்சாவடிகளாக உயர்ந்து உள்ளது.

    வழக்கமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு நபர் வாக்காளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் மேற்கொள்ளவும், மற்றொரு நபர் வாக்காளர்களுக்கு கையுறை மற்றும் கிருமிநாசினி வழங்குவதற்காகவும் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி ஆசிரியர்கள் 2,600 பேர், கல்லூரி பேராசிரியர்கள் 250 பேர் மற்றும் அரசு ஊழியர்கள் என மொத்தம் 4,167 பேர் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிற வாரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 4,167 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்துவதற்கான தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. இதற்காக 15 மையங்கள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சீசனையொட்டி குன்னூர் காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளங்களை அதிக அளவு கொண்டுள்ளதால் மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்கள்.

    குறிப்பாக முதல் சீசன் என்று அழைக்கப்படும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கும். இந்த சமயத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.

    முதல் சீசனை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள பூங்காகளில் முதல் சீசனுக்காக புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. சீசன் சமயத்தில் இந்த மலர் நாற்றுக்கவில் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்ணை கவரும் வகையில் பூத்துகுலுங்கும்.

    குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இயற்கை சூழலில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் தொடங்குகிறது. இதனால் பூங்காவில் புதிய மலர் நாற்றுக்களை நடவு செய்ய நிலம் தயார் செய்யப்பட்டது. இதன்படி 1 லட்சத்து 50 ஆயிரம் மலர்நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் சால்வியா, டேலியா, மெரிகோல்ட், வில்லியம் உள்பட 30 வகையான மலர் நாற்றுக்கள் இடம் பெற்றுள்ளன. இது மட்டுமின்றி மலர் விதைகளும் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.
    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட  கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 3 வீடியோ பதிவு குழுக்கள், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 3 தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள், 3 தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள் என்று மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.20 லட்சத்தை 73 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

    தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் சி விஜில் என்ற செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம். மாவட்டத்தில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 112 வாக்குசாவடிகள் பதற்றமானவை ஆகும்.

    மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுடன் இணைந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊட்டியில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பரிசு பொருட்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். வாகனங்களில் சோதனை செய்யும்போது அந்த காட்சி வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி அருகே நஞ்சநாடு கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் அ.தி.மு.க. படம் பொறித்த துணிப்பைகள் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த 400 துணிப்பைகளை பறிமுதல் செய்தனர்.

    அதுபோன்று ஊட்டியில் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அ.தி.மு.க. பிரமுகரின் வாகனம் வந்தது. அந்த வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது, நிற்காமல் சென்றது.

    உடனே அதை பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் தொட்டப்பெட்டா பகுதியில் அந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தி அதற்குள் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வாகனத்துக்குள் 437 வேட்டி-சேலைகள் மற்றும் சில்வர் தட்டுகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் இருந்தன. உடனே அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து பறக்கும்படை அதிகாரிகள் கூறும்போது, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக எடுத்துச்செல்லக்கூடாது. எந்த பொருட்களையும் கொண்டு செல்லும்போது அதற்கான ஆவணங்களை கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும் என்றனர்.
    முதுமலை வனப்பகுதியில் வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    கூடலூர்:

    முதுமலை வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, மான், புலி, சிறுத்தைப்புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் காரணமாக இந்த வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் மரங்களில் இலைகள் உதிர்ந்து வருவதுடன், புற்களும் கருகிவிட்டன.

    இதன் காரணமாக பசுந்தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தீவனங்களை சாப்பிடும் காட்டு யானை, மான், காட்டெருமை ள்ளிட்ட வனவிலங்குகளுக்கு போதிய அளவுக்கு தீவனங்கள் கிடைப்பது இல்லை.

    குறிப்பாக காட்டு யானை ஒரு நாளுக்கு 250 கிலோ பசுந்தீவனங்களை சாப்பிடும் பழக்கம் கொண்டது. ஆனால் இங்கு ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக பசுந்தீவனங்கள் கிடைக்காததால் காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக தீவனங்கள் கிடைக்கும் இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.

    குறிப்பாக முதுமலை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் காட்டு யானைகள் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் இங்குள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. அதுபோன்று பிற வனவிலங்குகளும் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.

    இதன் காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப்புற மக்கள் காட்டு யானைகளை ஈர்க்கக்கூடிய வாழை, பாக்கு, பலா உள்ளிட்ட விவசாய பயிர்களை பயிரிட வேண்டாம். தற்போது வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.
    கோடை சீசனுக்காக கோத்தகிரி நேரு பூங்காவை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா சுற்றுலா மையங்களில் முக்கியமானதாக உள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் ஆகியவை உள்ளன.

    இந்தப் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.

    இந்த நிலையில் கோடை சீசன் தொடங்குவதையொட்டி, நேரு பூங்காவில் புதிய மலர் நாற்றுக்களை நடுவதற்காக, கடந்த 2 வாரங்களுக்கு முன் நிலத்தை பதப்படுத்தி, பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்காவில் இருந்து இயற்கை உரம் கொண்டுவரப்பட்டு போடப்பட்டது.

    மேலும் பூங்காவில் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நட முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 5 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டன. தற்போது கோத்தகிரி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் நடப்பட்ட மலர் நாற்றுகளை பாதுகாப்பதற்காக தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதுடன், புல் தரைகளை வெட்டி சமப்படுத்தி பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, இந்த ஆண்டு முதல் பூங்காவிற்கு தேவையான நாற்றுகளை தயாரிக்க பூங்காவிலேயே, நர்சரி அமைத்து மலர் நாற்றுகளை தயார் செய்து உள்ளோம்.

    கோடை சீசனுக்காக மலர் நாற்றுகளை பூங்காவில் நடவு செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு வாரத்திற்குள் அனைத்து மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுவிடும். வரும் கோடை சீசனுக்குள் பூங்கா முழுமையாக தயாராகி காண்போர் மனதை கவரும் வகையில் மலர்கள் பூத்து குலுங்கும் என்றனர்.
    ×