search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் விதிமீறல்"

    • சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
    • தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சிவகங்கை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் இறுதிநேர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, இன்று மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்யச் சென்றார். அப்போது தேர்தல் அதிகாரிகள் அவரிடம் பிரசாரம் செய்வதற்கான அனுமதிக் கடிதம் குறித்து கேட்டனர். அப்போது ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தைக் காட்டினார்.

    தேர்தல் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததால் அவர்களுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் வார்டு வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், தேர்தல் அதிகாரி செந்தில்வேல் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி உள்பட 60 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது.

    அறந்தாங்கி:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதா கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சுயேட்சை சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறார்.

    ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் செல்லும் இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

    ஒரு பெண் ஆரத்தி எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரது தட்டில் ரூ.2000 போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில் ஓ. பன்னீர்செல்வம் ஆரத்தி காட்டிய பெண்ணுக்கு கொடுப்பதற்காக தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறார். அதில் 500 ரூபாய் நோட்டுகளாக வருகிறது. அதில் 4 நோட்டுகளை எடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கொடுக்கிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • வேட்பாளர் வசந்தராஜன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குனியமுத்தூர்:

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். நேற்று காலை பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

    அப்போது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தேர்தல் விதியை மீறி வேட்பாளர் வசந்தராஜன் உள்ளிட்டோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை திரட்டி ஊர்வலமாகச் சென்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் வேட்பாளர் வசந்தராஜன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், அனுமதி குறித்து ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சர்வர் பிரச்சனை காரணமாக அனுமதி இன்னும் கையில் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தனர். ஆயினும் போலீசார் பா.ஜ.க. வேட்பாளர் வசந்தராஜன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன
    • பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது

    இந்தியாவில் உள்ள பலருக்கும் வாட்ஸ்-அப்-இல் மோடியின் கடிதம் என்ற குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தேர்தல் விதி மீறல் என்று காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது

    'விக்சித் பாரத் சம்பார்க்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த வாட்ஸ் அப் செய்தியில், அரசாங்க திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கேட்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற பல திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கேட்பதாக தெரிவித்துள்ளது

    இந்த வாட்ஸ்-அப் செய்திக்கு கேரள மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "வாட்ஸ்-அப் செய்தியில் கருத்து கேட்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளே இருப்பதோ தேர்தல் பரப்புரை. வாட்ஸ்-அப் கொள்கைப்படி, அரசியல் பரப்புரைகளை தடுப்பதாக கூறுகிறது. ஆனால், எப்படி தேர்தல் தொடர்பான பரப்புரைகளை வாட்ஸ்-அப் அனுமதிக்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், இந்த வாட்ஸ்-அப் செய்தி இந்தியர்களை தாண்டி உலகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த பிரசார செய்தி அனுப்பப்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

    ×