என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை மீறியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆர். பாண்டியராஜன் கூறியதவாது:-

    சட்டமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக 180 மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் வர உள்ளனர். முதல்கட்டமாக 90 பேர் அடங்கிய ஒரு குழு வர உள்ளனர்.

    பல்வேறு வகையில் பதட்டமான 51 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்படுவர். 543 துப்பாக்கி உரிமையாளர்கள் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 489 பேர் ஒப்படைத்துள்ளனர். 49 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை தேர்தல் நடத்தை மீறியதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 116 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்து உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பால் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளின் படி சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கட்டாயம் முககவசம் அணிவது, கிருமிநாசினியால் கைகளை சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தொற்று பரவலை தடுக்க 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டது. தற்போது 868 வாக்குச்சாவடிகளாக அதிகரித்து உள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வாக்காளர் ஓட்டு போடுவதற்கு முன்பு கையுறை வழங்கப்படுகிறது. இதற்காக கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். நீலகிரியில் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது,நீலகிரியில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்பட 15 மையங்கள், 7 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 90 சதவீதம் பேருக்கு(6 ஆயிரத்து 300 பேர்) தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்து உள்ளது. மீதம் உள்ளவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தவில்லை.

    தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் செலுத்தப்பட உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு இருப்பு இருக்கிறது என்றனர்.
    கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும்.
    கூடலூர்:

    இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கும் சூழல் காணப்படுகிறது. கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கொரோனாவின் 2-வது அலை தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையொட்டி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி தவிர்த்து கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும் என்ற புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் நீலகிரியில் உள்ள கேரள எல்லையான நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், சுகாதாரத்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது தவிர கொரோனா தொற்று இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளார்களா? என்ற சோதனையும் நடத்தி செய்து வருகின்றனர். அவ்வாறு இ-பாஸ் மற்றும் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் வந்த வழியாக திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கு இ-பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    தற்போது கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். மேலும் வீண் சிரமத்தை தவிர்க்க, இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இங்கிலீஷ் காய்கறிகளையும் பயிரிடுகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் நிலங்களை பதப்படுத்தி விவசாயம் மேற்கொள்ளாமல் தரிசாக விட்டு வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு குறைந்து நல்ல சீதோஷ்ண காலநிலை நிலவி வருவதால், பதப்படுத்தி தயாராக வைத்திருந்த நிலங்களில் இயற்கை உரங்களை இட்டு மீண்டும் விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கோத்தகிரி பாண்டியன் பூங்கா பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் கூறியதாவது:-

    பனிப்பொழிவின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால், கடந்த 2 மாதங்களாக விவசாயம் செய்யாமல் இருந்தோம். தற்போது நல்ல காலநிலை நிலவுவதால், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டி, ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களை வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறோம். தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியை தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்து உள்ளது. அதன்படி வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறவர்களுக்கு இ-பதிவு முறை தொடர்கிறது.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். தற்போது இ-பதிவு நடைமுறையில் உள்ளது.

    அதில் தங்களது விவரங்களை பதிவு செய்து, அனுமதி பெற்றுக்கொள்ளலாம். அதே நடைமுறை தொடரும். இ-பதிவில் தங்களது மாவட்டம், மாநிலம், ஆதார் அடையாள அட்டை எண், எதற்காக வருகிறீர்கள்? போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இ-பதிவு எடுக்காமல் வருகிறவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் பழங்குடியினர்கள், எல்லைகளில் வசிப்பவர்கள், வனத்துறை ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு குரங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நடப்பாண்டிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கூடலூரில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வாகனங்களில் தொகுதி முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    கூடலூர்:

    தமிழகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர். மேலும் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை தொகுதி தேர்தல் அலுவலரும், ஆர்.டி.ஓ.வுமான ராஜ்குமார் நேற்று காலை 11 மணிக்கு கூடலூரில் தொடங்கி வைத்தார். அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் நின்றிருந்த அரசு பஸ்கள் மற்றும் தனியார் ஆட்டோக்கள், ஜீப்புகள் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஓட்டினார். தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், தேவராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் வாகன டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து கூடலூர் தொகுதி தேர்தல் அலுவலரும், ஆர்.டி.ஓ.வுமான ராஜ்குமார் கூறியதாவது:-

    கூடலூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 88 ஆயிரத்து 604 பேர் உள்ளனர். இதில் 92 ஆயிரத்து 108 ஆண்களும், 96 ஆயிரத்து 496 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது தவிர தொகுதி முழுவதும் 280 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் புதிதாக 58 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 49 இடங்கள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. கூடலூர் தொகுதியில் ஆதிவாசி மக்கள், தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதனால் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வாகனங்களில் தொகுதி முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊட்டி, குன்னூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்று கலெக்டர் ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் கொரோனா பாதிப்பு காரணமாக ஆயிரத்து 50-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து, துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரியில் தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 868 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வாக்குச்சாவடிகளை அந்தந்த தொகுதிக்குட்பட்ட வருவாய்த்துறையினர் சென்று பார்வையிட்டு தேர்தல் பணிக்காக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து உள்ளனர்.

    இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித தெரசன்னை தொடக்கப்பள்ளி, ஸ்ரீ ஓம் பிரகாஷ் தொடக்கப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கல்லக்கொரை அரசு உயர்நிலைப்பள்ளி, பாலகொலா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கன்னேரிமந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி, தேவர்சோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் துணை வாக்குச்சாவடிகளில் கழிப்பிடம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்லும் வழி, வாக்குப்பதிவுக்கு பின்பு வெளியேறும் வழியை பார்வையிட்டார். மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம் அமைக்கப்பட்டு உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் நகராட்சி தொடக்கப்பள்ளி, வெலிங்டன் புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி, வெலிங்டன் பாளைய வாரிய உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. அனைவரும் வாக்களிக்கும் பொருட்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், குந்தா தாசில்தார் மகேஸ்வரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    வனவிலங்குகளுக்கு உணவு அளித்தல், வன சட்டத்தின்படி குற்றமாக கருதப்படுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வரம்பு மீறுகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பகலில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. ஆனால் இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக வறட்சி ஏற்பட்டு, வனப்பகுதி பசுமையை இழந்து வருகிறது. மரங்களில் இலைகள் உதிர்ந்து வருவதால் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அவை இடம் பெயர்ந்து வருகிறது. இதில் காட்டுயானைகள், காட்டெருமைகள் உணவு தேடி ஊருக்குள் அதிகளவில் வருகிறது. ஆனால் சாதுவான குணம் கொண்ட மான்கள் மட்டும் முதுமலை சாலையோரம் உள்ள காய்ந்த புற்களை மேய்வதை காண முடிகிறது.

    இந்த நிலையில் அந்த சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி மான்களுக்கு உணவு வழங்குகின்றனர். இந்த வழக்கத்தை பழகிவிட்ட மான்களும், அவர்களை எதிர்பார்த்து சாலையோரம் காத்து நிற்பது தொடர்கிறது.

    வனவிலங்குகளுக்கு உணவு அளித்தல், வன சட்டத்தின்படி குற்றமாக கருதப்படுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வரம்பு மீறுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    முதுமலையில் வறட்சியால் மான்கள், காட்டெருமைகள், காட்டு யானைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவு வழங்கக்கூடாது. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு உடல்நலன் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் சிரட்டை மூலம் கைவினை பொருட்கள் தயாரித்து கிராமப்புற பெண்கள் அசத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    இந்தியாவில் பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அந்த பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் அல்லாமல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கொண்டு பொம்மைகள் தயாரிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தேயிலை தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்து வருகின்றன.

    இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதாவது கூடலூர் பகுதியில் சிரட்டை மூலம் பொம்மைகள் மற்றும் உணவு சமைக்கும்போது பயன்படுத்தப்படும் கரண்டி, ஸ்பூன், குவளை உள்பட கைவினை பொருட்களை கிராமப்புற பெண்கள் செய்து அசத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கூடலூர் பகுதி பெண்கள் கூறியதாவது:-

    சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலனுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் தயாரிப்பதால், அதற்கு வரும் காலங்களில் நல்ல மவுசு ஏற்படும். இதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம். இதற்காக 2 மாத பயிற்சி பெற வேண்டும்.

    இதன் மூலம் சிரட்டையில் இருந்து பல்வேறு கலை நயமிக்க பொருட்களை உருவாக்க முடியும். எனவே கைவினை பொருட்களை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஊட்டி அருகே கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்புக்கூறியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள பைக்காரா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்ற ஆனந்தகுமார்(வயது 48). கூலி தொழிலாளி. திருமணமான இவர், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது ஆனந்தகுமாருக்கும், அதே பகுதியில் கணவரை இழந்து வாழ்ந்து வந்த ஆயிஷா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

    இதற்கிடையில் மற்றொரு நபருடன் ஆயிஷா பழகியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆனந்தகுமார் சம்பவத்தன்று ஆயிஷாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் திடீரென ஆயிஷா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் மளமளவென உடல் முழுவதும் தீ பரவியதால், அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பைக்காரா போலீசார் கொலை வழக்குப்பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்தனர். 

    இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கோவையில் சிகிச்சை பெற்றபோது நீதிபதியிடம் ஆயிஷா மரண வாக்குமூலம் அளித்தார். அவரது முதல் கணவருக்கு 2 குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கள்ளக்காதலியை தீ வைத்து எரித்து கொலை செய்த ஆனந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜராகி வாதாடினார்.
    மஞ்சூர்-கெத்தை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மஞ்சூர்:

    மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளாக உள்ளன. இந்த வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் அடிக்கடி மஞ்சூர்-கோவை சாலையில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டெருமைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன.

    இதுவரை 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காட்டெருமைகள் தாக்கியுள்ளதால் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லுபவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் மஞ்சூரில் இருந்து கோவைக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் மஞ்சூர்-கெத்தை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென குட்டியுடன் 4 காட்டு யானைகள் தனியார் பஸ்சை மறித்தன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

    உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் பஸ்சை பின்நோக்கி இயக்கினார். தொடர்ந்து யானைகள் சாலையை மறித்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பியும், சத்தம் போட்டு காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றனர். இதனால் மஞ்சூர்-கெத்தை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதால் ஊட்டிக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
    ஊட்டி:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக அனைத்து சுற்றுலா தலங்களும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதற்கிடையே மாவட்ட எல்லையை யொட்டி உள்ள கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் எல்லை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும். அப்போதுதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இல்லையென்றால் மாவட்ட எல்லையில் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதனால் கடந்த சில நாட்களாக ஊட்டிக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து இருந்தனர். இதனால் பூங்காவின் புல்வெளி பகுதிகள், கண்ணாடி மாளிகை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.வழக்கமாக புல்வெளிகளில் அமர்ந்து ஓய்வு எடுப்பார்கள். நேற்று சுற்றுலா பயணிகள் இன்றி காட்சி அளித்தது.

    கடந்த 28-ந் தேதி தாவரவியல் பூங்காவுக்கு 4,839 பேர், 1-ந் தேதி 2,587 பேர், நேற்று முன்தினம் 1,981 பேர் வருகை தந்தனர். கடந்த 21-ந் தேதி 11,482 பேர் வந்தனர்.கொரோனா சான்றிதழ் கட்டுப்பாட்டால் சுற்றுலா பயணிகள் வருகை வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பாதியாக குறைந்து உள்ளது. அதேபோல் ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
    ×