
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பகலில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. ஆனால் இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக வறட்சி ஏற்பட்டு, வனப்பகுதி பசுமையை இழந்து வருகிறது. மரங்களில் இலைகள் உதிர்ந்து வருவதால் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் அவை இடம் பெயர்ந்து வருகிறது. இதில் காட்டுயானைகள், காட்டெருமைகள் உணவு தேடி ஊருக்குள் அதிகளவில் வருகிறது. ஆனால் சாதுவான குணம் கொண்ட மான்கள் மட்டும் முதுமலை சாலையோரம் உள்ள காய்ந்த புற்களை மேய்வதை காண முடிகிறது.
இந்த நிலையில் அந்த சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி மான்களுக்கு உணவு வழங்குகின்றனர். இந்த வழக்கத்தை பழகிவிட்ட மான்களும், அவர்களை எதிர்பார்த்து சாலையோரம் காத்து நிற்பது தொடர்கிறது.
வனவிலங்குகளுக்கு உணவு அளித்தல், வன சட்டத்தின்படி குற்றமாக கருதப்படுகிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வரம்பு மீறுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
முதுமலையில் வறட்சியால் மான்கள், காட்டெருமைகள், காட்டு யானைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவு வழங்கக்கூடாது. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு உடல்நலன் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.