search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரட்டையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்.
    X
    சிரட்டையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்.

    சிரட்டை மூலம் கைவினை பொருட்கள்- கிராமப்புற பெண்கள் அசத்தல்

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் சிரட்டை மூலம் கைவினை பொருட்கள் தயாரித்து கிராமப்புற பெண்கள் அசத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    இந்தியாவில் பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அந்த பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் அல்லாமல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கொண்டு பொம்மைகள் தயாரிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களை கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தேயிலை தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்து வருகின்றன.

    இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதாவது கூடலூர் பகுதியில் சிரட்டை மூலம் பொம்மைகள் மற்றும் உணவு சமைக்கும்போது பயன்படுத்தப்படும் கரண்டி, ஸ்பூன், குவளை உள்பட கைவினை பொருட்களை கிராமப்புற பெண்கள் செய்து அசத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கூடலூர் பகுதி பெண்கள் கூறியதாவது:-

    சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலனுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை கொண்டு கைவினை பொருட்கள் தயாரிப்பதால், அதற்கு வரும் காலங்களில் நல்ல மவுசு ஏற்படும். இதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம். இதற்காக 2 மாத பயிற்சி பெற வேண்டும்.

    இதன் மூலம் சிரட்டையில் இருந்து பல்வேறு கலை நயமிக்க பொருட்களை உருவாக்க முடியும். எனவே கைவினை பொருட்களை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×