search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கோத்தகிரி, வால்பாறையில் பலத்த மழை: குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் 3 மரங்கள் முறிந்து விழுந்தன

    வால்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை இதமான கால நிலை நிலவி வருகிறது. திடீர் மழையால் அனைத்து தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் முடிவடைந்ததை அடுத்து கூடலூர், பந்தலூர் பகுதியில் வறண்ட கால நிலை நிலவி வருகிறது.

    இதேபோல் ஊட்டியில் உறைபனியின் தாக்கமும், குன்னூர், கோத்தகிரியில் இயல்பான கால நிலையும் நிலவி வந்தது.

    கடந்த சில வாரங்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை நேரங்களில் உறைபனியும், இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்கள் குளிராலும், உறைபனியின் தாக்கத்தாலும் அவதிப்பட்டு வந்தனர்.

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலையில் இதமான காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இரவு 11 மணியளவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது.

    விடிய, விடிய பெய்த கனமழைக்கு கோத்தகிரி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை, கோடநாடு செல்லும் சாலை உள்பட பல இடங்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் கோத்தகிரியை சுற்றியுள்ள கட்டபெட்டு, தேவர் சோலை, கீழ்கோத்தகிரி, கோடநாடு உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அருவங்காடு, ஓட்டுபட்டறை போன்ற பகுதிகளிலும் நேற்று காலை முதலே மழை பெய்து வருகிறது.

    இரவில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. தொடர் மழை காரணமாக குன்னூர் பஸ்நிலையம், சந்தை, தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுதவிர தாழ்வான பகுதிகளிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    விடிய, விடிய பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி என்ற இடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தொடர்ந்து 3 மரங்கள் முறிந்து நடுரோட்டில் விழுந்தன. அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வரவில்லை. இதனால் பெரும் விபத்தும், வாகன நெரிசலும் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கமும், குளிரும் நிலவி வந்த நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக உறைபனியின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. உறைபனியால் கருகி வந்த தேயிலை செடிகளும் தற்போது பெய்த மழையால் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலை வால்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் அனைத்து தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், பாப்பநாயக்கன் பாளையம், கோவை ரெயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை திடீரென மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான கால நிலை நிலவி வருகிறது. இதேபோல் அன்னூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
    Next Story
    ×