என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல் ஒரு வாரம் நீர்ப்பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது.
    • ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். இந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக, அந்த மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மற்றும் பனிக்காலமும் சற்று தாமதமாக தொட ங்கியது.

    கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி முதல் ஒரு வாரம் நீர்ப்பனிப்பொழிவின் தாக்கம் இருந்தது. தொடர்ந்து நவம்பர் 25-ந்தேதிக்கு பிறகு உறைபனிக்காலம் தொடங்கியது. ஆனால் உறைபனி தொடங்கிய ஒரு வாரத்துக்குள் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. பின்னர் பெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக உறைபனி குறைந்தது.

    இந்த நிலையில் ஊட்டியில் டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் உறைபனியின் தாக்கம் மீண்டும் தொடங்கியது. இதன் காரணமாக தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனி படர்ந்து காணப்பட்டது. மேலும் உறைபனி காரணமாக வனங்களில் பசுமை குறைந்து தேயிலை செடிகள் கருகின.

    தை மாதம் தொடங்கிய நிலையில் பனியின் தாக்கம் மெல்ல குறைந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் உறைபனி கொட்ட தொடங்கி உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர் அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. தைமாதம் முடிவடைய உள்ள நிலையில் ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உறைபனி யின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • ரோஜா மலரில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது.
    • குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கொய் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குன்னூர்:

    காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    காதலர் தினத்திற்கு காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு, ரோஜா மலர்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுப்பார்கள். அதிலும் அதிகளவு ரோஜா மலர்களையே வழங்கி தங்கள் காதலை வெளிப்படுத்துவர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விளையக்கூடிய ரோஜா மலரில் நோய் தாக்குதல் மற்றும் விளைச்சல் குறைந்து காணப்படுவதால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் கொய்மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் கொய் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளையும் கொய் மலர்கள் பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக காதலர் தினத்திற்கு ரோஜா மலர்களுக்கு தான் அதிகம் கிராக்கி இருக்கும்.

    ஆனால் இந்த ஆண்டு நீலகிரி கொய் மலர்களுக்கு அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. லில்லியம் ஏசியாடிக் மலர் கொத்து (10 மலர்கள்) ரூ.300-க்கும், ஓரியண்டல் கொத்து ரூ.700-க்கும், கார்னேசன் ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. ஜெர்பரா ஒரு மலர் ரூ.4-க்கு விற்கப்படுகிறது.


    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கொய் மலர்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் ஓசூரில் விளையும் ரோஜா மலரில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது.

    இதன் காரணமாக காதலர்கள் நீலகிரியில் விளையும் கொய் மலர்களான லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா போன்றவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் இருந்து கொய் மலர்கள் தயார் செய்யப்பட்டு, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் இன்னும் தேவை அதிகரிப்பதுடன், விலையும் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
    • பூங்காக்களில் மலர்கள் நடவு செய்யும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தொடங்கி விட்டது.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் இங்கு நிலவக்கூடிய சிதோஷ்ண நிலையை அனுபவித்து, சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து விட்டு செல்வார்கள்.

    குறிப்பாக நீலகிரி மாவட்ட த்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும் இதமான கோடை சீசனை அனுபவிக்க 9 முதல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக மே மாதம் 1-ந் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    இன்னும் சில மாதங்களில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையொட்டி ஊட்டியில் உள்ள பூங்காக்களில் மலர்கள் நடவு செய்யும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தொடங்கி விட்டது.

    இந்த நிலையில், ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில், கோடைசீசனுக்காக பூக்களை கவாத்து செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    கோடைசீசனையொட்டி நடக்க உள்ள ரோஜா கண்காட்சிக்காக பூங்காவில் உள்ள 32 ஆயிரம் ரோஜா செடிகளில், 4,201 ரோஜா ரகங்களை கொண்ட ரோஜா பூங்காவில் கவாத்து பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாதண்ணீரு தொடங்கி வைத்தார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் பூங்கா ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தற்போது கவாத்துபணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வரை ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும். அவ்வாறு பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.

    • எங்களின் மூதாதையர் காலத்தில் இருந்து தவிட்டு பழங்கள் வனப்பகுதியில் காய்த்து வருகிறது.
    • தவிட்டு பழத்தை சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து சோர்வை போக்கும்.

    குன்னூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி வனப்பகுதியில் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரிய வகை தவிட்டு பழங்கள் விளைகின்றன. கோலிக்குண்டு வடிவில் காட்சி அளிக்கும் இந்த பழத்தில் துவர்ப்பு குறைவாகவும், இனிப்பு அதிகமாகவும் இருக்கும்.

    வனப்பகுதிகளில் அதிகமாக காய்த்து தொங்கும் தவிட்டு பழங்களை பழங்குடி மக்கள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு கொடுத்து உபசரிப்பர். மேலும் அந்த பழங்களை நகர பகுதிக்கு கொண்டு சென்று ஒரு கிலோ ரூ.300 முதல் 500 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    மற்ற பகுதிகளில் இந்த பழம் கிடைக்காது என்பதால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் இதனை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    தவிட்டு பழங்களின் சிறப்பம்சம் குறித்து பழங்குடி மக்கள் கூறியதாவது:-

    எங்களின் மூதாதையர் காலத்தில் இருந்து தவிட்டு பழங்கள் வனப்பகுதியில் காய்த்து வருகிறது. இது கடந்த காலங்களில் குரங்குகளுக்கு மட்டுமின்றி பழங்குடி மக்களுக்கும் உணவாக இருந்தது. தவிட்டு பழத்தை சாப்பிட்டால் செரிமானம் அதிகரிப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து சோர்வை போக்கும்.

    இதிகாச வனப்பருவத்தின் பசிதீர்த்த அமுத சொட்டு பழமே இந்த தவிட்டு பழம். இதற்கு புராண கதைகளும் உண்டு. 5 கணவர்களை தேடி கண்டுபிடித்து காட்டும் பழம் தான் 5 அல்லிராணிகள் எனவும் அழைக்கப்படுகிறது.

    குன்னூர் அடுத்த யானை பள்ளம், சடையன் கோம்பை, பம்பள கோம்பை, சின்னாள கொம்பை, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக், பக்கா சூரன் மலை, தைமலை, கோட்டக்கல், சாம்பூர், பால்மரா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் தவிட்டு பழங்கள் அதிக அளவில் உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது நீர்ப்பனியாக மாறி சாரல் மழைபோல பொழிந்து வருகிறது.
    • புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போல காணப்படுகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் நீர்ப்பனி கொட்ட தொடங்கும். பின்னர் நவம்பர் மாதம் 2-வது வாரத்துக்கு மேல் உறைபனிக்காலம் ஆரம்பமாகி விடும்.

    இந்த நேரங்களில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் மிகவும் அதிகமாக காணப்படும்.

    அதன்படி இந்தாண்டு வழக்கம்போல நவம்பர் மாதம் தொடங்கிய நீர்ப்பனி, கடந்த மாதம் இறுதி வாரம் முதல் உறைபனியாக கொட்ட தொடங்கியது. இது தற்போது நீர்ப்பனியாக மாறி சாரல் மழைபோல பொழிந்து வருகிறது.

    இதன்காரணமாக ஊட்டியில் அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர்ச்செடிகள் கண்ணாடி இழை போல காட்சியளிக்கிறது. மேலும் தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, காமராஜர் சாகர் அணை, சூட்டிங்மட்டம், குதிரைப்பந்தய மைதானம், லவ்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போல காணப்படுகின்றன.

    தொடர்ந்து தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்ச்செடிகள் மற்றும் அலங்கார செடிகள் பனியில் பாதிக்காமல் இருப்பதற்காக, அங்கு கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாப்பு அரண் அமைக்கும் பணியில் தோட்டக்கலை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனி அதிகமாக கொட்டி வருவதால், அங்கு பயிரிடப்பட்டு உள்ள தேயிலை செடிகள் மற்றும் மலைக்காய்கறி சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஊட்டியில் பனி கொட்டுவதால் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்து வலம் வருகின்றனர்.

    • மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம்.
    • நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது தெரியவந்தது.

    ஊட்டி:

    பிரபல பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்தநிலையில், அந்த ஓட்டல் மேலாளரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது.

    அதில், 'குன்னூரில் முக்கிய விஷயமாக பணியில் உள்ளேன். நான் இருக்கும் இடத்தில் செல்போன் சிக்னல் பிரச்சினை உள்ளது. எனவே, ஓட்டல் சம்பந்தமான வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என்றும், அந்த பணத்தை நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும்' கூறப்பட்டு இருந்தது.

    வழக்கமாக மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம். அந்த பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி வந்ததால், மேலாளருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.

    அதற்கு பதில் அளித்த மேலாளர், 'ஓட்டலுக்கு சொந்தமான பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.70 லட்சமும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.30 லட்சமும் உள்ளது' என்று தெரிவித்து உள்ளார். முதல் கட்டமாக ரூ.20 லட்சம் உடனடியாக அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் வங்கி கணக்கு விவரங்களுடன் பதில் வந்து உள்ளது.

    இதை நம்பிய மேலாளர், வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி விட்டார். இதையடுத்து நிரந்தர வைப்பு தொகையில் உள்ள ரூ.30 லட்சத்தையும், அதன் பின்னர் மற்ற கணக்குகளில் உள்ள ரூ.50 லட்சத்தையும் அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது.

    இதற்கிடையில் மிதுன் சக்கரவர்த்தி, மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை, உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான், மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டல் மேலாளர் ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிரந்தர வைப்பு தொகையில் இருந்த பணம் மற்றும் மற்ற கணக்குகளில் இருந்த பணத்தையும் அனுப்ப எடுத்த நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தினார். இதனால் ரூ.80 லட்சம் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, எந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர்.

    இதில் நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்று உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • நீலகிரியில் கோடை சீசன் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது.
    • பல்வேறு வகையான மலர்ச்செடிகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசன் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறும். அப்போது விடுமுறை காலம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம்-மாவட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் குன்னூருக்கு திரண்டு வருவர்.

    தொடர்ந்து அவர்கள் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்களில் நடைபெறும் மலர்சீசனை கண்டுகளித்தும், இதர சுற்றுலா தலங்களை பார்வையிட்டும் விடுமுறையை கொண்டாடி செல்வது வழக்கம்,

    அந்த வகையில் நீலகிரியில் கோடை சீசன் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில், அங்கு தற்போது பல்வேறு வகையான மலர்ச்செடிகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இதில் ஒருபகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 5 லட்சம் மலர் செடிகளை நடவுசெய்வதென தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்காக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 35-க்கும் மேற்பட்ட மலர் செடி வகைகள் மற்றும் 130 வகையில் மலர்நாற்றுகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் குன்னூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பிரபு, துணை இயக்குனர் அப்ரேஸ்பேகம், தோட்டக்கலைத்துறை அலுவலர் லட்சுமணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சால்வியா, டேலியா, ஆண்ட்ரினம், பால்சம், பெகோனியா, மேரிகோல்ட், பிரெஞ்ச் மேரிகோல்ட், பேன்சி, காஸ்மாஸ், டேலியா, ஜினியா, லூபின், கேலன்டுல்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
    • சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.

    ஊட்டி:

    சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து தேவையான அளவு விழிப்புணர்வு இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் புதிதாக சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை முகநூல் நேரலை நிகழ்ச்சி மூலமாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் துறை சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். ஓ.டி.பி. உள்ளிட்ட தகவல்களை யாரும் கூற வேண்டாம்.

    அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம். சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்று கூறி வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றி ஏமாற்றுகின்றனர்.

    டிஜிட்டல் கைது என்று கூறி போலீசார் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மேலும் சைபர் குற்றங்கள் மூலமாக பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பாலான மூலிகை செடிகள், பழங்களின் தன்மை குறித்து உள்ளூர்வாசிகளுக்கு சரிவர தெரிவதில்லை.
    • சொடக்கு தக்காளியின் செடியின் இலையை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் வலி, மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் அரிய வகை மலர்கள், மூலிகை செடிகள் மற்றும் மருத்துவ குணம் மிகுந்த பழ வகைகள் அதிகளவில் உள்ளன. இதில் பெரும்பாலான மூலிகை செடிகள், பழங்களின் தன்மை குறித்து உள்ளூர்வாசிகளுக்கு சரிவர தெரிவதில்லை.

    ஆனால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் நீலகிரியில் உள்ள மூலிகை செடிகள் மற்றும் பழங்களை கண்காணித்து அவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக மலையோர சாலைப்பகுதிகளில் மருத்துவ குணம் வாய்ந்த சொடக்கு தக்காளி பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்கி வருகின்றன. இந்தப் பழச்செடிகள் படர்ந்து வளரும் தன்மை கொண்டது. அவற்றின் விதைகள் காற்றின் மூலம் பறந்து சென்று ஆங்காங்கே முளைக்கும் தன்மைவாய்ந்தது.

    இதனை சிறுவர்கள் செடியில் இருந்து பறித்து நெற்றியில் வைத்து உடைக்கும்போது சொடக்கு போடுவது போல் சத்தம் கேட்கும். இதனால்தான் அந்த பழத்துக்கு சொடக்கு தக்காளி என்று பெயர் வந்தது. கோலிக்குண்டு அளவில் விளையும் சொடக்கு தக்காளி உடல் வலி நிவாரணியாகவும், உடல்களில் உள்ள சிறு கட்டிகளை அகற்றும் மருந்தாகவும் உள்ளது. இதனை சாப்பிட்டால் சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். புற்றுநோயைத் தடுக்கும் முக்கிய மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சொடக்கு தக்காளியின் செடியின் இலையை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் வலி, மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனை கொடுக்கும். நீலகிரி மாவட்டத்தில் விளையும் சொடக்கு தக்காளி தற்போது ஆன்லைன் மூலம் கிலோ ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிகளுக்கு நடுவே வளர்ந்து நிற்கும் கீரை வகைகளை சேகரிக்கும் ஒரு சிலர் இந்த பழத்தை பறித்து டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    எனவே உள்ளூர்வாசிகள் இனிமேலாவது மருத்துவ குணம் நிறைந்த சொடக்கு தக்காளி பழத்தை பயன்படுத்த வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மதுவை குடித்து விட்டு, காலிபாட்டிலை சாலையோரம் வீசி செல்கிறார்கள்.
    • விலங்குகளுக்கு ஆபத்து என வன ஆர்வலர்கள் கவலை.

    ஊட்டி:

    சுற்றுலா தலமான நீலகிரிக்கு தினந்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நீலகிரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை சாலையோரம் வீசி செல்கின்றனர். இன்னும் சில சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வாங்கி வந்த மதுவை குடித்து விட்டு, காலிபாட்டிலை சாலையோரம் வீசி செல்கிறார்கள்.

    முதுமலை, மசினகுடி, மாவநல்லா, குன்னூர், மேட்டுப்பாளையம்,கோத்தகிரி பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் அதிகளவில் கிடக்கிறது.

    இதனால் வனவிலங்குகளின் கால்களில் காயங்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் முதுமலை வனப்பகுதியில் வனத்தை விட்டு வெளியே தாயுடன் வந்த குட்டி யானை சாலையோரத்தில் சுற்றி திரிந்தது.

    அப்போது குட்டி யானை சாலையோரம் கிடந்த மதுபாட்டிலை தனது துதிக்கையால் எடுத்து வாயிலுக்குள் திணிக்க முயற்சிக்கிறது. இதனை அவ்வழியாக சென்றவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சாலையோரம் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.
    • கடந்த 3 நாட்களாக புலியின் நடமாட்டம் காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரை சுற்றிய வனப்பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வனப்பகுதி குறைந்து வருவதால் ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் கால்நடைகளை அடித்து கொன்றும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி விட்டும் செல்கின்றன. இதனால் அந்த பகுதிகளில் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு புலி மஞ்சூர்-ஊட்டி சாலைக்கு வந்தது. பின்னர் அங்குள்ள மின்வாரியம் அலுவலகம் பாக்குறை அருகே சுற்றி திரிந்தது. இதனை அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

    மஞ்சூர் பாக்குறை மின்வாரிய அலுவலகம் அருகே, கடந்த 3 நாட்களாக புலியின் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் நாங்கள் பீதியில் உள்ளோம். மேலும் மஞ்சூர்-ஊட்டி ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

    எனவே மஞ்சூர் பகுதியில் இரவுநேரங்களில் சுற்றித்திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் அந்த புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கோத்தகிரியில் உள்ள ஒரு கிணற்றில் கரடிகள் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளன.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் ஒரு ஏணி வைத்தனர்.

    ஊட்டியில் கடந்த சில நாட்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    ஊட்டி மட்டுமில்லாமல் குன்னூர் கோத்தகிரியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கோத்தகிரியில் உள்ள ஜக்கனாரை அடுத்த தும்பூர் குக்கிராமத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் கரடிகள் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளன.

    இது தொடர்பாக தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றுக்குள் ஒரு ஏணி வைத்தனர். பின்னர் அந்த ஏணியை பிடித்து மேலே ஏறி வந்த கரடிகள் வனப்பகுதிக்குள் ஓடின

    கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் ஏணியை பிடித்து மேலே ஏறி வரும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    ×