என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 28). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். பரமேஸ்வரி நேற்று சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பின்னால் நின்றிருந்த ஒரு வாலிபர் திடீரென பரமேஸ்வரி வைத்திருந்த கைப்பையை பறித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றார். கைப்பையில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரி சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் புதிய பஸ் நிலையம் பின்புறத்தில் சந்தேகப் படும்படியாக நின்றிருந்த கார்த்தி (25) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் பரமேஸ்வரியிடம் பணத்தை பறித்து சென்றவர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.
இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மீன்பிடி சீசன் கடந்த 1-ந் தேதி தொடங்கியால் அங்கு ஏராளமான மீனவர்கள் வந்து மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த வாணகிரியை சேர்ந்த மீனவர்களும் கோடியக்கரைக்கு வந்துள்ளனர். நேற்று வாணகிரியை சேர்ந்த மீனவர்கள் 20 படகுகளில் சென்று மீன் பிடித்தனர். அவர்கள் இன்று காலையில் கரைக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படையினர் ஒரு படகில் வந்தனர். அவர்கள் வாணகிரியை சேர்ந்த 3 படகுகளில் ஏறி மீனவர் மிரட்டி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மீன்களை அள்ளி கொண்டு அவர்களை விரட்டி விட்டனர். இதனால் அந்த படகுகளில் சென்ற தமிழ்மணி (வயது 24), தீபன் (20), அருள்மணி (25), தேன்ராஜ் (24), ராஜேஷ், சுப்பிரமணியன், ராஜீ, பாலகிருஷ்ணன், பாரதி, வேல்முருகன், சஞசய், சக்திவேல், சுரேஷ், மகேந்திரன், வினியரசன் ஆகிய 15 மீனவர்களும் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
கோடியக்கரை பகுதியில் கடந்த சில நாட்களில் 3 முறை கடற்கொள்ளையர்கள் வந்து மீனவர்களை தாக்கி அவர்களது மீன்பிடி வலைகளை அறுத்து சென்றனர்.
இந்த பரபரப்பு அடங்கும் முன்பு இலங்கை கடற்படையினர் 3 படகுகளில் மீன்களை அள்ளி சென்ற சம்பவம் மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடற்படையினர் கேட்டதும் மீனவர்கள் மீன்களை கொடுத்ததால் அவர்களை தாக்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கோடியக்கரையில் சீசனுக்கு மீன் பிடிக்கவந்த மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இலங்கை கடற்படை, கடற்கொள்ளையர்கள், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுத்து மீன்படிக்க செல்லும் மீனவர்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். #TNFishermen
நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த ஊர்க்குடியை சேர்ந்த ரெங்கையன் மகன் ஜெகதீஸ் (வயது 30). விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று மஞ்ச வாய்க்காலில் உள்ள பவானி என்பவர் வீட்டில் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். மாலையில் அவர் சைக்கிளை எடுக்க வந்த போது அவரது சைக்கிள் செயின் துண்டாகி இருந்தது. எனவே சைக்கிளை தள்ளிகொண்டு சென்றார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் இளையராஜா என்பவர் “சைக்கிளை ஏன் தள்ளி கொண்டு செல்கிறீர்கள்” என்று கேட்டார். அப்போது சைக்கிள் செயின் அறுந்து விட்டதாக ஜெகதீஸ் கூறினார். அவரிடம் ஊர்க்குடியை சேர்ந்த “சந்திரசேகரன் மகன் முரளி உங்கள் சைக்கிளை எடுத்து ஓட்டினார். இதனால் தான் சைக்கிள் செயின் அறுந்துள்ளது” என்று இளையராஜா கூறினார்.
இதைத்தொடர்ந்து ஜெகதீஸ் முரளியிடம் “எனது சைக்கிளை ஏன் எடுத்து ஓட்டினாய்” என்று கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெகதீஸ் ஸ்குருடிரைவரை எடுத்து முரளி நெஞ்சில் பலமாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி பலியான முரளியின் அண்ணன் மோகன்தாஸ் பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர்.
சைக்கிளை எடுத்து ஊர்க்குடி வாலிபரை கொலை செய்த சம்பவம் ஊர்க்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டியும், மத்திய அரசை கண்டித்தும் நாகை புதிய பஸ் நிலையம் அருகே காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை சுற்றி கொண்டு, ஒரு பக்கம் பிரதமர் மோடியும், மறுமுனையில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானுமும் கயிரை இறுக்குவது போல் போராட்டம் நடத்தினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்து மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ் நாடு முக்குலத்து புலிகள் அமைப்பினர் நாகை வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து கீழையூர் போலீசார் முக்குலத்து புலிகள் அமைப்பை சேர்ந்த 30 பேரை கைது செய்தனர்.
நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகை மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வேளாங்கண்ணி கீழத்தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது32), ஆரியநாட்டு தெருவை சேர்ந்த சகாயராஜ் (33), கத்தரிப்புலம் பனையடி குத்தகையை சேர்ந்த குமரவேல் (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வேளாங் கண்ணி பஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையம் மறைமலைநகரை சேர்ந்த தாஜிதீன் (36) என்பதும், மோட்டார்சைக்கிளில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக எடுத்து சென்றதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தாஜிதீனை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
உலக சுற்றுலா தலமான வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றியுள்ள கடைகளில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் இருந்து வந்தன.
இந்நிலையில் எஸ்.பி., உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி காவல் சரகத்தில் கடந்த ஒருவார காலமாக தனிப்படை போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலயத்தின் அருகே உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வேளாங்கண்ணி கீழத்தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் மணிகண்டன், கத்திரிப்புலம் பனையடி குத்தகை முருகையன் மகன் குமரவேல், வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் சகாயராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் புறங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து வந்த நாகப்பட்டினம் வெளிப்பாளையம் மறைமலை நகரை சேர்ந்த தாஜீதீன் என்பவரையும் கைது செய்தனர். 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். #Gutkha
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் பெரியகாருகுடி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் கார்த்தி (வயது 22). அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் சக்திவேல்(25), இவர்களது நண்பர் மன்னார்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மிதுன்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மாலை திருக்குவளையில் இருந்து பெரிய காருகுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது கொளப்பாட்டில் இருந்து எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள், லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் கார்த்தி, சக்திவேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மிதுன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த மிதுன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணி அருகே உள்ள முப்பத்திகோட்டகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 டிராக்டர்கள் மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தன. அவற்றை வழிமறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முப்பத்திகோட்டகத்தில் உள்ள வெள்ளையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த கீழ்வேளூர் தாலுகா மோகனூர் கீழத்தெருவை சேர்ந்த ஜோதி மகன் தெட்சிணாமூர்த்தி (வயது32), திருப்பூண்டி வீரன் கோவில் தெருவை சேர்ந்த முத்தலீப் மகன் சாகுல்அமீது (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர், மற்றும் இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கி இலங்கை மீனவர்கள் மீன்களை கடலில் வீசியும், வலைகளை அறுத்தும் சேதப்படுத்தினர்.
தொடர்ந்து இதுபோல் இலங்கை கடற்படையினரும், மீனவர்களும் நடத்தி வரும் தாக்குதலை மத்திய- மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் நாகை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கீழையூர் அருகே விழுந்த மாவடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் இளம்பரிதி.
நேற்று மாலை 3 மணியளவில் இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், மணிமாறன், மற்றும் அக்கரைபேட்டையை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் கோடியக்கரை தென் கிழக்கே நாகை மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக ஒரு விசைப்படகில் இலங்கை மீனவர்கள் சுமார் 10 பேர் வந்தனர். அவர்கள் திடீரென நாகை மீனவர்கள் படகை சுற்றி வளைத்து அதில் ஏறினர்.
பின்னர் மீனவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி படகில் இருந்த மீன்களை கடலில் கொட்டினர். அப்போது மீனவர் ராஜேந்திரனை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. மேலும் மீன்வலைகளை அரிவாளால் அறுத்தும், ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தினர்.
பிறகு சிறிதுநேரத்தில் இலங்கை மீனவர்கள் தங்களது படகில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதையடுத்து நாகை மீனவர்கள் இன்று அதிகாலை படகில் கரை திரும்பினர். பின்னர் இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவத்தை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். இதனால் மீனவ கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை மீனவர்கள் தாக்குதலில் காயம் அடைந்த இளம்பரிதி, ராஜேந்திரன், காளிதாஸ், மணிமாறன், சக்திவேல் ஆகிய 5 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி நாகை கடலோர காவல் படையினரிடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர்கள் நாகை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேளாங்கண்ணியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அம்மாவை பதவியிலிருந்து இறக்குவதற்கு நான் சதி செய்தேன் என்று அமைச்சர் தங்கமணி பேசுகிறார். அவர் பதட்டமாக இருப்பதால்தான் என்னைப் பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். கருணாநிதியுடன் சேர்ந்து வழக்கில் அம்மாவை சிக்க வைத்துவிட்டேன் என்று சொல்கிறார்.
கருணாநிதி இறந்த பிறகு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட போதுதான் அவரை நேரில் சென்று பார்த்தேனே தவிர, அதற்கு முன்னர் நான் அவரை எங்கும் சந்தித்தது இல்லை.
அமைச்சர் வேலுமணி, தினகரன் புறவழியாக வந்தவர் என்கிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆக உள்ள விஜயபாஸ்கர் போன்றவர்களெல்லாம் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும், மதுரையில் உள்ள அரிஸ்டாட்டில். அதாவது அக்கா பையன் உதயகுமார் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தினகரன் யார் என்று கேட்கிறார்.

அமைச்சர்கள் விஜயபாஸ்கரும், உதயகுமாரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற திராணி உண்டா? துரோகிகள் டெபாசிட் இழப்பது உறுதி.
சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் குறிப்பிட வேண்டும் என்பதற்காக என்னுடைய பெயரையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் நடத்தும் விழாவிற்கு நான் போக வேண்டிய அவசியமில்லை. சொல்லப் போனால் விழா நடைபெறக்கூடிய அன்று நான் சென்னையிலே இல்லை. அழைப்பிதழில் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் நல்லா இருக்காது என்பதற்காக போட்டிருக்கலாம். அதனை வைத்து ஏதாவது அரசியல் செய்யலாம் என்பதற்காக கூட போட்டு இருக்கலாம்.
ஆட்சி செய்த கட்சி, ஆட்சி செய்து கொண்டிருந்த கட்சிகள் மீதெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு ஒன்று பேசுகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அதே நாக்கு வேறு மாதிரி பேசுகிறது. மக்கள் நலனை மறந்துவிட்டு ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று செயல்பட்ட காரணத்தினால்தான் மக்கள் நலனை பேணக்கூடிய கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் என்று தீர்மானித்துள்ளனர்.
இடைத்தேர்தல் வைத்து விடாதீர்கள் என்று ஆளுங்கட்சியினர் டெல்லியில் கேட்பதாக நான் கேள்விப்பட்டேன். இடைத்தேர்தல் கண்டிப்பாக வர வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் மக்கள் மத்தியில் யாருக்கு உண்மையான செல்வாக்கு இருக்கிறது என்பது அப்போது அனைவருக்கும் தெரிந்துவிடும். அதற்கு உதாரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் அமையும்.
கூட்டணி வரவேண்டிய நேரத்தில் கூட்டணி அமைப்போம். கூட்டணி தொடர்பாக பா.ம.க.விடம் இதுவரை நான் பேசவில்லை. யாரோ தகவலை பரப்புகிறார்கள். தி.மு.க. எங்களது பிரதான எதிரிக்கட்சி. அதனால் தி.மு.க.வுடனும், பா.ஜ.க.வுடனும் நாங்கள் கூட்டணிக்கு போக முடியாது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். மற்ற கட்சிகளில் உள்ளவர்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.
வடிவேல் படத்தில் நடிக்காததால் அவர் வேலையை திண்டுக்கல் சீனிவாசன் செய்து கொண்டுள்ளதால் தான் காமெடியாக பேசி வருகிறார். அம்மாவையே கொள்ளையடித்தவர் என்று பேசியவர் கசாப்பு கடைக்காரரான அவரை பற்றியெல்லாம் பேசாதீர்கள்.
இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #Vijayabaskar #Udayakumar
நாகை மாவட்டத்தில் மது மற்றும் சாராயம் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். இதன்பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல இடங்களில் சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 2,225 லிட்டர் புதுச்சேரி சாராயம், 1 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின் பேரில் சாராயம் மற்றும் மது விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.






