என் மலர்
நாகப்பட்டினம்
இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், டீசல் விலை உயர்வை கண்டித்தும் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வலியுறுத்தியும் கடந்த 3-ந்தேதியில் இருந்து நாகையில் விசைப்படகு மீனவர்கள் 10 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நாகையில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 10 நாட்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அளிக்கவில்லை என்றால் வருகிற 25-ந்தேதி நாகையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
சீர்காழியை சேர்ந்த சபரிகிரி அய்யப்பா சேவா சங்கத்தின் தலைவரும்,43ஆண்டுகளாக சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப குருசாமியுமான அமர்நாத்சுவாமிகள் கூறியதாவது:-
சீர்காழியிலிருந்து கடந்த 43ஆண்டுகளாக 120பேர் கொண்ட பக்தர்கள் சபரிமலையாத்திரைசென்று அய்யப்பனை தரிசனம் செய்துவருகிறோம்.எங்களது குழுவில் உள்ள அனைத்து அய்யப்ப பக்தர்களும் 48நாட்கள் முறையாக விரதம் இருந்து சபரிமலை செல்கிறோம். ஆனால் அண்மையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது.
இது சபரிமலையில் காலம், காலமான நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. பெண்கள் 48நாட்கள் விரதம் இருந்து சபரிமலை கோயிலுக்கு சென்று வழிபட இயலாது. இந்த தீர்ப்பினால் அய்யப்ப பக்தர்கள் மனவருத்தம் அடைந்துள்ளோம். ஆகையால் இந்த ஆண்டு முதல் சபரிமலைக்கு செல்வதற்கு பதிலாக சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளோம். எங்களது குழுவில் உள்ள 120 அய்யப்ப பக்தர்கள், வரும் கார்த்திகை மாதம் விரதம் மேற்கொண்டு சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று அங்கு நெய் அபிஷேகம் செய்து விரதத்தை முடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
சீர்காழி:
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் கழுமலையாறு உள்ளது. இந்த ஆற்றை நம்பி தில்லைவிடங்கன், திட்டை, திருத்தோணிபுரம், தென்பாதி, சீர்காழி, அகணி, கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, கைவிளாஞ்சேரி உள்ளிட்ட கிராஙம்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் கழுமலையாறு சீர்காழி நகர் பகுதியின் வடிகாலாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் எதிரில் மயிலாடுதுறை சாலையில் கழுமலையாற்றில் இரு புறமும் படித்துறை இருந்து வந்தது. இதனை சீர்காழி, தென்பாதி மற்றும் நகர்வாசிகள் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் பயன் படுத்தி வந்தனர். ஆனால், காலப்போக்கில் படித்துறை முறையாக பராமரிக்கப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு படித்துறை மண்ணை போட்டு மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் கழுமலையாற்றில் உள்ள படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதுநாள் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றி படித்துறையை சீரமைக்காததால் நேற்று கழுமலையாறு பாசன சங்கம் சார்பில் விவசாயிகள் படித்துறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடந்த 10 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்திருந்த படித்துறையை சீரமைத்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் படித்துறையை சீரமைத்து கொடுத்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கீற்று கொட்டகையில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடலோர காவல்படை துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் மும்தாஜ்பேகம் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த கீற்று கொட்டகையை சோதனையிட்டனர். அப்போது அங்கு 15 மூட்டைகளில் 960 கிலோ உரம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், இந்த உர மூட்டைகள் எதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவைகள், தேயிலை தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி உரம் என்பதும், கோடியக்காட்டில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கீற்று கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இதேபோல் கடந்த மே மாதம் வேதாரண்யம் அருகே சிறுதலைகாடு கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
சீர்காழி அருகே சட்டநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமையில் நிர்வாகிகள் ஆடலரசு, ஜீவா, தீபன்ராஜ், ராமமூர்த்தி உள்பட கட்சியினர் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த கொடிக்கம்பத்தை பார்வையிட்டனர்.
பின்னர் கட்சியினர், கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்து சட்டநாதபுரம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3-வது முறையாக சட்டநாதபுரத்தில் உள்ள கட்சி கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்தும், சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொக்கம்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிதம்பரம்-மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் இந்த கொடி கம்பத்தை வெட்டி சாய்த்து பிடுங்கி எறிந்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இன்று காலை அந்த வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்களும் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம கும்பலை கைது செய்ய கோரி திடீரென அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமையில் நிர்வாகிகள் ஆடலரசு, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் விரைந்து வந்தனர். உடனே மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மர்ம கும்பலை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று மறியலை கைவிட்டு விடுதலை சிறுத்தைக் கட்சியினர் கலைந்து சென்றனர்,
இந்த மறியல் போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை மெயின் ரோட்டில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரெயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேன்களாக ராம்குமார், நந்தகோபால், தினேஷ் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். நேற்று காலை என்ஜின் டிரைவர் பிரணவ் காலி பெட்டிகளுடன் கூடிய ரெயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது பாயிண்ட்ஸ் மேன்கள் காட்டிய சிக்னல் சரிவர தெரியவில்லை என என்ஜின் டிரைவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது என்ஜின் டிரைவர் பிரணவுக்கும் பாயிண்ட்ஸ்மேன்கள் ராம்குமார், நந்தகோபால், தினேஷ் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த பிரணவ், நந்தகோபால், தினேஷ், ராம்குமார் ஆகிய 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
இலங்கை கடற் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், விசைப்படகு ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும், சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது.
இதனால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக பகுதிகளிலும், கடுவையாற்று கரையிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் வேலை நிறுத்தத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளம் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சிறப்பு பெற்ற மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்ட மும்மதத்தினரும் வழிபட்டு செல்லும் முக்கிய இடமாக உள்ளது. நாகைக்கு வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
நாகை பழைய பஸ்நிலையத்தில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தோணித்துறை அருகே ரெயில்வே கேட் மேம்பால பகுதி உள்ளது. நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தோணித்துறை சாலை வழியாக அக்கரைப்பேட்டை, கல்லார், தெற்கு பொய்கைநல்லூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு இந்த சாலையை தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்களை சரக்கு வேன், ஆட்டோக்களில் ஏற்றி இந்த வழியாக தான் மீனவர்கள் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கும் போது அக்கரைப்பேட்டை, தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி சாலையை சீரமைப்பதை தாமதப்படுத்தி வருகின்றனர்.
எனவே, தோணித்துறை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பொறையாறு, தரங்கம்பாடி, சங்கரன்பாந்தல், காட்டுச்சேரி, தில்லையாடி, காழியப்பநல்லூர், நல்லாடை, திருவிளையாட்டம், இலுப்பூர், மேமாத்தூர், கீமாத்தூர், திருவிடைக்கழி, விசலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சம்பா நடவு செய்த வயல்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இந்நிலையில் பொறையாறு அருகே சிதம்பரபெருமாள்கோவில்பத்து கிராமம் அருகே செல்லும் வீரசோழனாற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் நேற்று ஆற்றின் தெற்கு கரைபகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் சில இடங்களில் ஆற்று தண்ணீர் அங்குள்ள வயல்களில் புகுந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் சில வீடுகளில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் வந்து நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பவுன்ராஜ் எம்.எல்.ஏ. மேற்கண்ட இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் புகுந்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது எம்.எல்.ஏ., பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், ஆற்றின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் சிதம்பரபெருமாள்கோவில்பத்து கிராமத்துக்கு போலீஸ் பேரிடர் மீட்புக்குழுவினர் சென்று வீரசோழனாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். #tamilnews
நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கொட்டும் மழையிலும் குடைபிடித்தப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சித்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக கல்வி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் அந்துவன்சேரல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜம்ருத் நிஷா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு முறையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும். 5 ஆயிரம் அரசுப்பள்ளிகளை மூடும் செயலை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக நாகை தாசில்தார் அலுவலகம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் புகழேந்தி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட இணை செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆரம்பப்பள்ளி மாநில துணை பொதுச்செயலாளர் அருள்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி தேவதாஸ் நன்றி கூறினார். ஜாக்டோ- ஜியோ தற்செயல்விடுப்பு போராட்டத்தின் காரணமாக கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும்பாலான அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. #tamilnews
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டிப்பது. டீசல் விலையேற்றத்தால் மீன்பிடி தொழில் முற்றிலும் நஷ்டமாகி வருகிறது. அதனால் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வேண்டும். விசைப்படகு ஒன்றிற்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும். சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து விசைப்படகு மீனவர்களும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முதல் நாகை மாவட்டத்தில் அனைத்து விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டத்தால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக கரைகளில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் நாகை கடுவையாற்றுக்கரையில் ஏராளமான விசைப் படகு மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்திவைத்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அந்த ஆர்ப்பாட்டத்திலேயே அடுத்த கட்ட போராட்டத்தினை அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.






