search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvarur bypoll"

    திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கும் கட்சிகளுக்கு இது ஏமாற்றம் அளிப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TiruvarurByElection #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென விதிகளின் படி தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. ஆனால் கஜா புயல் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கட்சிகளின் வேண்டுதல்களையும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் களநிலவர அறிக்கையின்படி தேர்தலை ஒத்திவைத்தது வரவேற்கத்தக்கது.

    திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. புயலுக்குப்பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாரண பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன் திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல,அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதுதான் தேவை, ஓட்டெடுப்பு அல்ல,தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.

    சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க காட்டிய வேகத்தை நிவாரண பணிகள் செய்வதற்கு காட்டவில்லை, டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம்.



    ஆனால் மக்கள் நிவாரணம் பெற வேண்டும் என்பதே கள நிலவரம். டெல்லியிலே தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை ஒத்திவைக்க வழக்கு தொடுத்து விட்டு இங்கே கூட்டணி கட்சிக்கு திருவாரூரில் ஆதரவு என்று இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல் எல்லாவற்றுக்கும் பா.ஜனதாவையும் பிரதமர் மோடியையும் குறை சொல்லும் குரல்கள். ஆனால் போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் நம் களப்பணி பாராளுமன்ற தேர்தல் நோக்கி தொடரட்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TiruvarurByElection #TamilisaiSoundararajan
    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என அ.தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection #ADMK
    சென்னை:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. மனு தாக்கலுக்கு 10-ம் தேதி கடைசி நாளாகும்.

    திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் காமராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் வருகிற 17-ம் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    இதற்கிடையே, அ.தி.மு.க. சார்பில் திருவாரூர் தொகுதியில் யார் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் வேட்பாளரை தேர்வு செய்யும் அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அசோகன், பாபா சுப்பிரமணியன் உள்ளிட்ட 52 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு கூடியது. கூட்டம் முடிந்த பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 
    அப்போது அவர்கள் கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுவார். வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அச்சப்படுகிறோம் என்று அர்த்தமா? எத்தனை தேர்தல் வந்தாலும் அவற்றை சந்திக்க அதிமுக அச்சப்படாது என தெரிவித்தனர். #ThiruvarurByElection #ADMK
    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் எப்போது என்று அறிவிக்கப்படும். #ThiruvarurByelection
    சென்னை:

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதியும் காலியானது.

    இதையடுத்து திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. சட்ட விதிகளின்படி இந்த இரு தொகுதிகளிலும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டனர். ஓட்டுசாவடி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    இன்னும் ஓரிரு நாட்களில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடத்துவது என்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து முடித்துவிட்டனர்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வரப்போகிறது என்பதை அறிந்ததும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இப்போதே 2 தொகுதிகளிலும் சுவர் பிடிக்கும் வேலைகளில் கட்சி பிரமுகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அ.தி.மு.க.வினர் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலையில் உள்ளனர்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் தோல்வியை தழுவியதால் திருப்பரங்குன்றத்தில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிரத்துடன் அ.தி.மு.க. தலைவர்கள் உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை 11 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 8 தடவை அ.தி.மு.க. வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒரு தடவை அ.தி.மு.க. ஆதரவுடன் விஜயகாந்தின் தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். 2 தடவை மட்டுமே தி.மு.க.வால் அந்த தொகுதியில் வெற்றி பெற முடிந்தது.

    இதனால் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படுகிறது. ஆனால் இந்த தடவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மிக பெரிய சவாலாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவெடுத்துள்ளது. தினகரன் கட்சியின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே முற்றுகையிட்டுள்ளனர்.

    திரும்பிய திசையெல்லாம் அவர்கள் குக்கர் சின்னம் வரைந்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வுக்கு தினகரன் கட்சி சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    தினகரன் கட்சியினர் வேகம் காட்டியதால் தற்போது தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்களும் திருப்பரங்குன்றத்தில் களம் இறங்கி உள்ளனர். எல்லா இடத்திலும் சுவர் பிடிக்கும் வேலை தொடங்கி உள்ளது.

    இது தவிர பூத் கமிட்டி, பிரசார குழு ஆகியவற்றை அமைக்கும் பணிகளையும் முக்கிய கட்சிகள் தொடங்கி உள்ளன. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல் திருவிழா கோலத்தை நெருங்கி வருகிறது.

    திருப்பரங்குன்றம் மக்களை கவருவதற்காக தினகரன் வருகிற 7-ந்தேதி அங்கு செல்ல உள்ளார். அங்கு நடக்கும் பிரசார கூட்டத்தில் பேச இருக்கிறார்.


    தினகரனின் இந்த வியூகத்தை அறிந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அதற்கு முன்னதாக தங்களது நடவடிக்கைகளை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருப்பரங்குன்றம் சென்று இடைத்தேர்தலை சந்திப்பதற்கான ஆலோசனை நடத்தினார்கள்.

    திருப்பரங்குன்றத்தில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அன்று முதல் தீவிர பிரசாரத்தை தொடங்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு சவால்விடும் வகையில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தவும் தினகரன் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    இவர்களுக்கிடையே தி.மு.க.வினரும் பணிகளை தொடங்கி உள்ளனர். தி.மு.க. சார்பில் இன்னும் 2 வாரங்களில் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    திருவாரூர் தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 3 கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளரை களம் இறக்க உள்ளது.

    தே.மு.தி.க., பா.ம.க. தனித்து போட்டியிடுமா? அல்லது இடைத்தேர்தலை புறக்கணிக்குமா? என்பது தெரியவில்லை. என்றாலும் இடைத்தேர்தலில் நான்கு, ஐந்து முனை போட்டி ஏற்படுவது உறுதியாகிவிட்டது. #ThiruvarurByelection #ThiruparankundramByelection #ADMK #DMK #EdappadiPalaniswami #TTVDhinakaran
    அமைச்சர் விஜயபாஸ்கர், உதயகுமார் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தைரியம் இருக்கிறதா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். #TTVDhinakaran #Vijayabaskar #Udayakumar
    நாகப்பட்டினம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வேளாங்கண்ணியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அம்மாவை பதவியிலிருந்து இறக்குவதற்கு நான் சதி செய்தேன் என்று அமைச்சர் தங்கமணி பேசுகிறார். அவர் பதட்டமாக இருப்பதால்தான் என்னைப் பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். கருணாநிதியுடன் சேர்ந்து வழக்கில் அம்மாவை சிக்க வைத்துவிட்டேன் என்று சொல்கிறார்.

    கருணாநிதி இறந்த பிறகு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட போதுதான் அவரை நேரில் சென்று பார்த்தேனே தவிர, அதற்கு முன்னர் நான் அவரை எங்கும் சந்தித்தது இல்லை.

    அமைச்சர் வேலுமணி, தினகரன் புறவழியாக வந்தவர் என்கிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். ஆக உள்ள விஜயபாஸ்கர் போன்றவர்களெல்லாம் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும், மதுரையில் உள்ள அரிஸ்டாட்டில். அதாவது அக்கா பையன் உதயகுமார் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தினகரன் யார் என்று கேட்கிறார்.

    தி.மு.க.வையும், காங்கிரசையும் கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் என்னை பற்றி வாய்க்கு வந்தபடி ஒருமையில் பேசுகிறார்கள்.


    திருப்பரங்குன்றத்தில் நான் நிற்க வேண்டாம். எங்கள் கட்சி சார்பில் தொண்டர்கள் நிற்பார்கள்.

    அமைச்சர்கள் விஜயபாஸ்கரும், உதயகுமாரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெற திராணி உண்டா? துரோகிகள் டெபாசிட் இழப்பது உறுதி.

    சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் குறிப்பிட வேண்டும் என்பதற்காக என்னுடைய பெயரையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

    இவர்கள் நடத்தும் விழாவிற்கு நான் போக வேண்டிய அவசியமில்லை. சொல்லப் போனால் விழா நடைபெறக்கூடிய அன்று நான் சென்னையிலே இல்லை. அழைப்பிதழில் பெயரை குறிப்பிடாமல் இருந்தால் நல்லா இருக்காது என்பதற்காக போட்டிருக்கலாம். அதனை வைத்து ஏதாவது அரசியல் செய்யலாம் என்பதற்காக கூட போட்டு இருக்கலாம்.

    ஆட்சி செய்த கட்சி, ஆட்சி செய்து கொண்டிருந்த கட்சிகள் மீதெல்லாம் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு ஒன்று பேசுகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு அதே நாக்கு வேறு மாதிரி பேசுகிறது. மக்கள் நலனை மறந்துவிட்டு ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று செயல்பட்ட காரணத்தினால்தான் மக்கள் நலனை பேணக்கூடிய கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் என்று தீர்மானித்துள்ளனர்.

    இடைத்தேர்தல் வைத்து விடாதீர்கள் என்று ஆளுங்கட்சியினர் டெல்லியில் கேட்பதாக நான் கேள்விப்பட்டேன். இடைத்தேர்தல் கண்டிப்பாக வர வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் மக்கள் மத்தியில் யாருக்கு உண்மையான செல்வாக்கு இருக்கிறது என்பது அப்போது அனைவருக்கும் தெரிந்துவிடும். அதற்கு உதாரணமாக திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் அமையும்.

    கூட்டணி வரவேண்டிய நேரத்தில் கூட்டணி அமைப்போம். கூட்டணி தொடர்பாக பா.ம.க.விடம் இதுவரை நான் பேசவில்லை. யாரோ தகவலை பரப்புகிறார்கள். தி.மு.க. எங்களது பிரதான எதிரிக்கட்சி. அதனால் தி.மு.க.வுடனும், பா.ஜ.க.வுடனும் நாங்கள் கூட்டணிக்கு போக முடியாது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். மற்ற கட்சிகளில் உள்ளவர்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

    வடிவேல் படத்தில் நடிக்காததால் அவர் வேலையை திண்டுக்கல் சீனிவாசன் செய்து கொண்டுள்ளதால் தான் காமெடியாக பேசி வருகிறார். அம்மாவையே கொள்ளையடித்தவர் என்று பேசியவர் கசாப்பு கடைக்காரரான அவரை பற்றியெல்லாம் பேசாதீர்கள்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #Vijayabaskar #Udayakumar
    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவால் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை பதவிக்காலம் முடிகிறது. இதனால் இந்த 3 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் இப்போதே பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, தனது ஆட்சியை கடந்த வாரம் கலைத்தது.

    இதனால் தெலுங்கானா மாநிலத்துக்கும் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    பல மாநிலங்களில் சட்டசபை தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அந்த தொகுதிகள் நிலவரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள், அந்தந்த மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாகி உள்ளன.

    இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


    நவம்பர் மாதம் தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நவம்பரில் இடைத்தேர்தல் நடத்த தமிழக அரசு சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

    சமீபத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், நவம்பரில் இடைத்தேர்தல் நடத்த தமிழக அரசு ஆயத்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளிலும் நவம்பரில் இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகி விட்டது. இந்த இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஓசையின்றி தேர்தல் பிரசார பணிகளை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    டி.டி.வி.தினகரனும் இரு தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை சீரமைத்துள்ளார். தி.மு.க.வும் களத்தில் குதித்துவிட்டால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தல் களம் சூடு பிடித்துவிடும். #ThiruparankundramBypoll
    ×