search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் - தேர்தல் கமி‌ஷன் முடிவு
    X

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் - தேர்தல் கமி‌ஷன் முடிவு

    தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மறைவால் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நவம்பர் மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை பதவிக்காலம் முடிகிறது. இதனால் இந்த 3 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் இப்போதே பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி, தனது ஆட்சியை கடந்த வாரம் கலைத்தது.

    இதனால் தெலுங்கானா மாநிலத்துக்கும் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களையும் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    பல மாநிலங்களில் சட்டசபை தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அந்த தொகுதிகள் நிலவரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள், அந்தந்த மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தமிழ்நாட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாகி உள்ளன.

    இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.


    நவம்பர் மாதம் தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் போது திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நவம்பரில் இடைத்தேர்தல் நடத்த தமிழக அரசு சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.

    சமீபத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், நவம்பரில் இடைத்தேர்தல் நடத்த தமிழக அரசு ஆயத்தமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இரு தொகுதிகளிலும் நவம்பரில் இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகி விட்டது. இந்த இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஓசையின்றி தேர்தல் பிரசார பணிகளை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    டி.டி.வி.தினகரனும் இரு தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை சீரமைத்துள்ளார். தி.மு.க.வும் களத்தில் குதித்துவிட்டால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தல் களம் சூடு பிடித்துவிடும். #ThiruparankundramBypoll
    Next Story
    ×