search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி 2 நாளில் அறிவிப்பு
    X

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி 2 நாளில் அறிவிப்பு

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் எப்போது என்று அறிவிக்கப்படும். #ThiruvarurByelection
    சென்னை:

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். இதனால் திருவாரூர் தொகுதியும் காலியானது.

    இதையடுத்து திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. சட்ட விதிகளின்படி இந்த இரு தொகுதிகளிலும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டனர். ஓட்டுசாவடி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    இன்னும் ஓரிரு நாட்களில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடத்துவது என்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து முடித்துவிட்டனர்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வரப்போகிறது என்பதை அறிந்ததும் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இப்போதே 2 தொகுதிகளிலும் சுவர் பிடிக்கும் வேலைகளில் கட்சி பிரமுகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அ.தி.மு.க.வினர் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலையில் உள்ளனர்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் தோல்வியை தழுவியதால் திருப்பரங்குன்றத்தில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிரத்துடன் அ.தி.மு.க. தலைவர்கள் உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை 11 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 8 தடவை அ.தி.மு.க. வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒரு தடவை அ.தி.மு.க. ஆதரவுடன் விஜயகாந்தின் தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். 2 தடவை மட்டுமே தி.மு.க.வால் அந்த தொகுதியில் வெற்றி பெற முடிந்தது.

    இதனால் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படுகிறது. ஆனால் இந்த தடவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மிக பெரிய சவாலாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவெடுத்துள்ளது. தினகரன் கட்சியின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே முற்றுகையிட்டுள்ளனர்.

    திரும்பிய திசையெல்லாம் அவர்கள் குக்கர் சின்னம் வரைந்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வுக்கு தினகரன் கட்சி சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    தினகரன் கட்சியினர் வேகம் காட்டியதால் தற்போது தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்களும் திருப்பரங்குன்றத்தில் களம் இறங்கி உள்ளனர். எல்லா இடத்திலும் சுவர் பிடிக்கும் வேலை தொடங்கி உள்ளது.

    இது தவிர பூத் கமிட்டி, பிரசார குழு ஆகியவற்றை அமைக்கும் பணிகளையும் முக்கிய கட்சிகள் தொடங்கி உள்ளன. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி கொஞ்சம் கொஞ்சமாக தேர்தல் திருவிழா கோலத்தை நெருங்கி வருகிறது.

    திருப்பரங்குன்றம் மக்களை கவருவதற்காக தினகரன் வருகிற 7-ந்தேதி அங்கு செல்ல உள்ளார். அங்கு நடக்கும் பிரசார கூட்டத்தில் பேச இருக்கிறார்.


    தினகரனின் இந்த வியூகத்தை அறிந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அதற்கு முன்னதாக தங்களது நடவடிக்கைகளை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருப்பரங்குன்றம் சென்று இடைத்தேர்தலை சந்திப்பதற்கான ஆலோசனை நடத்தினார்கள்.

    திருப்பரங்குன்றத்தில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அன்று முதல் தீவிர பிரசாரத்தை தொடங்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு சவால்விடும் வகையில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தவும் தினகரன் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

    இவர்களுக்கிடையே தி.மு.க.வினரும் பணிகளை தொடங்கி உள்ளனர். தி.மு.க. சார்பில் இன்னும் 2 வாரங்களில் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    திருவாரூர் தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 3 கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளரை களம் இறக்க உள்ளது.

    தே.மு.தி.க., பா.ம.க. தனித்து போட்டியிடுமா? அல்லது இடைத்தேர்தலை புறக்கணிக்குமா? என்பது தெரியவில்லை. என்றாலும் இடைத்தேர்தலில் நான்கு, ஐந்து முனை போட்டி ஏற்படுவது உறுதியாகிவிட்டது. #ThiruvarurByelection #ThiruparankundramByelection #ADMK #DMK #EdappadiPalaniswami #TTVDhinakaran
    Next Story
    ×