என் மலர்
நாகப்பட்டினம்
- தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நகர கூட்டுறவு வங்கி தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது.
விழாவில் 100 மாணவிகளுக்கு சைக்கிள்களை வங்கி தலைவர் அன்பரசு வழங்கினார்.
முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.
- தூய்மையே சேவை சிறப்பு முகாம் திருப்புகலூர் வவ்வாலடியில் தொடங்கியது.
- தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
தூய்மை பாரத இயக்க ஊரகம் விழிப்புணர்வு செயல்பாடுகளின் தூய்மையே சேவை சிறப்பு முகாம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் தொடங்கியது.
இதில் வவ்வாலடி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் ஊராட்சியை தூய்மையாக வைக்க பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முகாமை ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாம் வரும் அக்டோபர் 2-ம் தேதிவரை ஊராட்சி பகுதி முழுவதும் நடக்கிறது.
அதேபோல் பனங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் கொடியசைத்து முகாமை துவக்கி வைத்தார்.
- வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
- அரசு மாதிரிப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
சென்னை சுற்றுச்சூழல் துறையும் நாகப்பட்டினம் மாவட்ட தேசிய பசுமை படையும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் கிரேட் எப் தொண்டு நிறுவனமும் இணைந்து உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
தோப்பு துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திலீப் குமார் தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.
கடற்கரை தினம் கொண்டாடப்படும் காரணம், கடற்கரை தினத்தை ஒட்டி ஐநா சபை வகுத்த நெறிமுறைகள் மக்கும் குப்பை மக்கா குப்பை பிரித்தெடுத்தல் இவற்றை பற்றி தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், பசுமை செயல்பாடுகளை கண்காணிக்கும் அலுவலர் பசுமை டிவைனியா மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கினார்.
சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்க ளுக்கு பச்சை வண்ண த்தொப்பி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தோப்பு த்துறை அரசினர் மேல்நி லைப்பள்ளி தலைமையாசி ரியர் எஸ் கவி நிலவன் தேசிய பசுமை படை ஆசிரியர் வி கண்ணையன், மாவட்ட சூழல் ஒருங்கிணைப்பாளர். இமய சிவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணி வண்ணன், மற்றும் ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக கடற்கரை தூய்மை தினத்தை (ஒவ்வொரு வருடம் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை) முன்னிட்டு உலக ஓசோன் தினத்தை முன்னிட்டும் கலைக்கு ழுவினர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
பின்னர் நகராட்சி தலைவர் புகழேந்தி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று உப்பு சத்தியாகிரக மண்டபத்தை அடைந்தது.
மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர். முடிவில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று கற்பகவிநாயகர் சிவபெருமானுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
- விற்பனைக்கு தயாராக இருந்த இறால்களை மர்மநபர்கள் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் சந்திரபோஸ் எனபவருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் இறால்கள் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் சந்திரபோஸ் தனது இறால் பண்ணைக்கு சென்ற வலைகளை கொண்டு விற்பனைக்கு தயாராக இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான இறால்களை மர்ம நபர்கள் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதுபோல் இப்பகுதியில் அடிக்கடி மின் மோட்டார்கள், மின் ஒயர்கள் உள்ளிட்டவை திருட்டு நடைபெறுவதால் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என இறால் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- முன்னதாக தமிழ்த்துறை தலைவர் குமரேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
- வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி துறை, தமிழ் மாணவர் மன்றம் மூலம் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கினார்.
முன்னதாக தமிழ்த்துறை தலைவர் குமரேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
போட்டிகளுக்கு நடுவர்களாக தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தெட்சணமூர்த்தி, அம்பிகாபதி, தமிழ் துறை பேராசிரியர் மாதவன், பேராசிரியர் பிரபாகரன் மாரிமுத்து, இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழ்துறை பேராசிரியர் குமரேசமூர்த்தி தெரிவித்தார்.
முடிவில் பேராசிரியர் ராஜா நன்றி கூறினார்.
- மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
- நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் 74-வது நினைவு தினம் அவர் பிறந்த ஊரான நாகையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாகை ரெயில்வே நிலையத்திற்கு எதிரே உள்ள மறைமலை அடிகளாரின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் தஞ்சாவூரில் வசிக்கும் மறைமலை அடிகளாரின் மகன் 76 வயதான பச்சையப்பன் , அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதேப்போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அப்போது தமிழை வளர்த்த மறைமலை அடிகளாருக்கு நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், நாம் தமிழர் கட்சி நாகை பாராளுமன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், நாகை தொகுதி செயலாளர் ஆதித்தன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், தமிழர் மீட்சி பாசறை மாவட்ட தலைவர் மதிவாணன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ், பொருளாளர் நாகராஜன், கீழ்வேளூர் தொகுதி தலைவர் அருள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடலில் 13 மைல்கல் தூரம் சென்ற போது படகு திடீரென பழுதானது.
- மீன்பிடிக்க கடலுக்கு வந்தார்களா, அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
இலங்கை தலைமன்னாரை சேர்ந்தவர்கள் நிக்சன் டீலக்ஸ் (வயது 38). சுபத்திரன் (36). இவர்கள் 2 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு படகில் இலங்கையில் இருந்து கடலுக்கு சென்றனர்.
அவர்கள் கடலில் 13 மைல்கல் தூரம் சென்ற போது படகு திடீரென பழுதானது. இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.
பின்னர் காற்றின் வேகத்தினால் அவர்களது படகு இன்று காலை வேதாரண்யம் கோடியக்கரை அருகே சிறுதலைக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலங்கை வாலிபர்கள் நிக்சன் டீலக்ஸ், சுபத்திரன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு வந்தார்களா, அல்லது வேறு காரணமா என பல கோணங்களில் போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை மாற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை நகராட்சி ஆணையர் வெங்கடலெட்சுமணன் தொடங்கி வைத்தார்.
இதில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன், ஆசிரியர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்ற கட்டணமில்லா தொலை பேசி எண். 14420 பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
- திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
- 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி தலைமை தாங்கினார்.
வட்டாச்சியர் ரமேஷ், தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு) கவிதாஸ்,வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர் புனிதா வரவேற்றார்.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை,இலவச வீட்டுமனை பட்டா,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி வழங்கினார்.
இதில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன்,சரவண அய்யப்பன்,வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் நன்றி கூறினார்.
- அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
- மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் அரசு தொடக்கப்பள்ளியில் சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியர் வசந்தா தலைமை தாங்கினார்.
பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலக்ஷ்மி, ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாணவ- மாணவிகளுக்கு சர்வதேச கலாச்சார ஒற்றுமை குறித்து எடுத்து கூறப்பட்டது.
இவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணவர்கள் சிறப்பு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நாகை மாவட்டத்தில் 2 வது நாளாக திருக்குவளை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்குவளை கடைத்தெருவில் இருந்து மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் பேரணியாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து திருக்குவளை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், இந்தியாவில் அதிகரிக்கும் வேலை தட்டுப்பாட்டை கண்டித்தும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், சொந்த லாபங்களுக்கு நாட்டை தனியார்மயமாக்கும் செயலுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.






