என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகூர் அருகே வங்கியில் கணினி திருடிய தஞ்சையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் மெயின் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கி கிளை கடந்த 3½ ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கி மேலாளர் டார்வின் வங்கியை மூடி விட்டு சென்றுள்ளார். பின்னர் வங்கியை திறக்க துணை மேலாளர் முத்துபிரசாத் வந்துள்ளார். அப்போது பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், நாகூர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வங்கியில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் வங்கியின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே வந்து கணினி மற்றும் கீ போர்டு ஆகியவற்றை திருடி சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் தடவியல் நிபுணர்கள் ஜெயசீலன், ரமமணி ஆகியோர் தடயங்களை பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து மோப்ப நாய் துலிப் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் மேலவாஞ்சூர் ரவுண்டானா வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி வந்த பஸ்சில் இருந்து கீழே இறங்கிய நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கல்விகுடி மெயின் ரோட்டை சேர்ந்த ஜெகபர் சாதிக் (வயது 32) என்பதும், வங்கியில் கணினி, கீபோர்டு திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜெகபர் சாதிக்கை கைதுசெய்து, அவரிடம் இருந்த கணினி, கீபோர்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஜெகபர் சாதிக் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
    குத்தாலம் அருகே கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
    குத்தாலம்:

    குத்தாலம் பேரூராட்சியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகமாக உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் குத்தாலம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், ஓட்டல்களில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது பல கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் மக்கள் சற்று மனம் மாறி கடைகளுக்கு பைகளை கொண்டு செல்லக்கூடிய நிலையில் குத்தாலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதால் மீண்டும் மக்கள் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.

    எனவே பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் வரி வசூல் தொகை ரூ.2½ லட்சத்தை மோசடி செய்ததாக ஊராட்சி பெண் செயலாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகரையொட்டி திருவாரூர் சாலையில் பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் பல வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் பட்டமங்கலம் ஊராட்சி வருவாய் ஆதாரம் உள்ள ஊராட்சியாக இருந்து வருகிறது.

    இந்த ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தணிக்கை நடந்தது. தணிக்கையின்போது வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட வரி வருவாய் கடந்த ஒரு ஆண்டாக முறையாக ஊராட்சி கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை தணிக்கை துறையினர் மேலும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். ஆய்வில், ஊராட்சியில் போலியாக ரசீது தயார் செய்து வீட்டு வரி, தொழில் வரி வசூல் செய்யப்பட்டு ரூ.2½ லட்சம் வரை மோசடி செய்ததாக அந்த ஊராட்சி செயலாளர் பிரியாவை தற்காலிக பணிநீக்கம் செய்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மேலும் போலி பில் தயார் செய்து வரி வசூல் செய்தது தொடர்பான ஆவணங்கள் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் இது தொடர்பான மேல் நடவடிக்கையை கலெக்டர் மேற்கொள்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கல்யாண சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் தற்போது சம்பா- தாளடி நெல் நாற்று விடுதல் மற்றும் நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் நாகை மாவட்டத்திற்கு தேவையான யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடப்பு மாதத்துக்கு தேவையான மீதி உள்ள உரங்களும் நிறுவனங்களிடமிருந்து பெற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    உர விற்பனை மையம் ஆய்வின் போது உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் இருப்பு வைத்திருப்பது, உரிய அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது, ஒரே நபருக்கு ஒட்டுமொத்தமாக உரங்கள் விற்பனை செய்யப்படுவது போன்றவை கண்டறியப்பட்டால் அவர்களது உர உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது அவசியம் தங்களது ஆதார் அட்டையுடன் சென்று கைரேகை பதிவு செய்து, உரம் பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை பெற்று கொள்ள வேண்டும். உர விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் விலைப்பட்டியல் அடங்கிய விவரப் பலகையை உபயோகிப்பாளர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு பிற தேவையற்ற இடு பொருட்களை கட்டாயத்தின் பேரில் விற்பனை செய்யக்கூடாது. உர மூட்டைகளின் எடை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் குறைபாடுகள் தெரிய வந்தால் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    நாகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் சமூகவலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இதைத்தொடர்ந்து தகுந்த நேரத்தில் தனது(ரஜினி) மன்ற நிர்வாகிகளோடு கலந்து ஆலோசனை செய்து அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் நாகை புதிய, பழைய பஸ் நிலையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய வள்ளலே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் ஏற்பட வா, என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இதனால் நாகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
    கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் கீழ்வேளூர் அருகே வடக்காலத்தூர் பிள்ளையார் குளம் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது52), அத்திப்புலியூரை சேர்ந்த சிற்றரசு (56), பொன்வெளி மடத்தான் தெருவை சேர்ந்தவர் குமார் (35) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. 

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    திருவோணம் அருகே நாட்டு வெடி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு வெடிகள் மற்றும் வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த, நெய்வேலி தென்பாதியை சேர்ந்த செல்வம் (வயது48) , நெய்வேலி வடபாதியை சேர்ந்த முனியன்(58) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சம்சுகுப்தா, சர்புதீன் ஆகிய இருவரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வெடிகள் மற்றும் வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை அருகே நெய்க்குப்பை மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவருடைய மகன் சகாபுதீன் (வயது 38) டிராக்டர் டிரைவரான இவர், விவசாயமும் செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

    இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சகாபுதீன் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து அவரது மனைவி சித்ரா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஏர்வாடி ஊராட்சியில் ஆபத்தான டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    திட்டச்சேரி:

    திருமருகல் அருகே ஏர்வாடி ஊராட்சி விச்சூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் வழியாக குறும்பூர், மருதாவூர், சித்தம்பல் மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் மெயின் சாலை உள்ளது. திருமருகல் ஒன்றியத்தில் மருதாவூர், சித்தம்பல், விச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்து செல்வதற்கும் அந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    குறும்பூர் பகுதியில் இருந்து மருதாவூர் செல்லும் சாலையில் வயல்வெளிகளில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகள் தாழ்வாக காணப்படுகின்றன. இப்பகுதியில் 20- க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. மேலும் குறும்பூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் சேதம் அடைந்து இரும்பு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் உயிர் சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் செல்கின்றனர்.

    தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே வயல்களில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் ஆபத்துகள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் விவசாய பணிகளை செய்ய விவசாயிகள் டிராக்டர், அறுவடை எந்திரம் உள்ளிட்டவைகளை வயலிற்கு கொண்டு செல்லமுடியாமலும் அவதியடைகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான டிரான்ஸ்பார்மர், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மற்றும் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கக்கோரி 3-வதுநாளாக வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் கோடியக்கரைக்கு வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கோடியக்கரைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்வதால் எங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மனு அளித்தனர். அதன் பேரில் வேதாரண்யம் தாசில்தார் முருகு தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுமூகமான தீர்வு ஏற்படவில்லை.

    இதையடுத்து வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், மணியன்தீவு, வாணவன்மகாதேவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிக்க தடைவிதிக்கக்கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 2 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று 3-வதுநாளாக மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மீனவர்கள் தங்களது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகுகளை கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி எலக்ட்ரீசியன் இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி சங்கரன்பந்தல் கீழ தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் கருணாகரன் (வயது27). நேற்றுமுன்தினம் இவரும், அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வினோத்ராஜ் (26) ஆகியோர் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை கருணாகரன் ஓட்டினார். அப்போது கீழையூர் அருகே ஈசனூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, எதிரே நாகையில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் கருணாகரன், வினோத்ராஜ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    மேல்சிகிச்சைக்காக கருணாகரனை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற முத்துப்பேட்டை மார்க்கெட் தெருவைச்சேர்ந்த அப்துல் லத்தீப்பை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு தலை தீபாவளிக்கு ஊருக்கு வர விடுமுறை கிடைக்காததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே வடகரை புலிகண்ட புத்தூரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி சங்கீதா (வயது 25). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து பாபு வேலைக்காக மலேசியா சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு சங்கீதா, பாபுவிடம் செல்போன் மூலம் தலை தீபாவளிக்கு ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். பாபு பணி செய்யும் நிறுவனத்தில் விடுமுறை கிடைக்காததால் தலை தீபாவளி கொண்டாட வர இயலாது என கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்தசங்கீதா நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சங்கீதாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆவதால் உதவி கலெக்டர் மகாராணி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    ×