என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா–சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாதம் 24-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கரையிருப்பில் வடக்குப் புத்தாறு ஆற்றில் திருமருகல் -மருங்கூர் இடையே ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் கட்டும் பணி கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடி க்காக கடந்த மே மாதம் 24-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் வடக்குப்பு த்தாறு ஆற்றில் தண்ணீர் சாகுபடிக்காக வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வடக்குப்பு த்தாறு ஆற்றில் பாசன வசதி பெறும் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், திட்டச்சேரி, ஆலங்குடிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் முன்னதாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

    மேலும் திருமருகல்-மருங்கூர் இடையே பாலம் கட்டும் பணி தற்போதுதான் துவங்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வந்தால் அவசரத்திற்கு திருமருகல் மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்ல வடக்குப்புத்தாறு ஆற்றை கடந்து செல்ல சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலம் கட்டும் பணிகளை துரிதப்படுத்தி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    வடக்குப்புத்தாறு ஆற்றில் பாசனம் பெறும் நிலங்களுக்கு குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
    • இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னை புளியந்தோப்பை சேர்ந்த மணிரத்தினம், பரமகுரு உள்பட 15 பேர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.

    வேளாங்கண்ணியை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு அக்கரைப்பேட்டை வழியே நாகை செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினர். அப்போது டிக்கெட்டை கண்டக்டர் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

    டிக்கெட்டை ஏன் தூக்கி வீசுகிறீர்கள் என மணிரத்தினம், பரமகுரு மற்றும் அவருடன் வந்தவர்கள் தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிரத்தினம் தரப்பினர் கண்டக்டரை தாக்கியதாக தெரிகிறது.

    இதை பார்த்த பஸ்சில் இருந்த 3 மர்ம நபர்கள் திடீரென மணிரத்தினம், பரமகுருவை கத்தியால் குத்தினர்.

    இதனால் ஓடும் பஸ்சில் பதட்டமான சூழல் நிலவியது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து மற்ற பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து கொண்டு ஓடினர்.

    இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நகர தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.

    வேதாரண்யம் :

    வேதாரண்யத்தில் பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நகர தலைவர் நந்தகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரகுமார், வைரமுத்து, பாலச்சந்திரன் வடக்கு ஒன்றிய தலைவர் இளவேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

    மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் அறிமுக செய்யபட்டனர்.

    பின்பு தேர்தலுக்கு வார்டு கமிட்டி அமைப்பது புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது அனைத்து ஊராட்சிகளிலும் கொடியேற்றுவது என தீர்மானிக்கபட்டது.

    கூட்ட முடிவில் வேதை தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் நன்றியுரை கூறினார்.

    • காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
    • சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் பொரவச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த வர் தியாகராஜன். இவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சொந்த ஊரான பொரவச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்றார்.இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பீரோவில் உள்ள 4 பவுன் மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவற்ஆறை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
    • தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
    • பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பா.ஜ.க. கல்வியாளர் பிரிவு சார்பாக மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.

    மாவட்ட கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார் . மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 250 நபர்களுக்கு பலன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன .பின்னர் பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் வீடுவீடாக மரக்கன்றுகள் வழங்கபட்டது.

    • கோடியக்காடு அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 14-ந் தேதி விசாக பெருவிழா தீர்தவாரி நிகழ்ச்சியும், 15-ந் தேதி மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.

    வேதாரண்யம் :

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காட்டில் அமைந்துள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் அமைந்துள்ளது.

    இந்த சுப்பிரமணிய சுவாமிக்கு வைகாசி மாதம் விசாகப் பெருவிழாவுக்கான கொடியேற்று விழா நடைப்பெற்றது. முன்னதாக சுப்பிமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம செய்யபட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதானை நடைபெற்றது.

    பின்பு பல்லக்கில் முருகன் எழுந்தருளி கோடியக்காடு தியாகராஜ சிவச்சாரியர் தலைமையில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஒத திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, வேதாரண்யஸ்வரர் கோயில் அலுவல்கள், உபயதாரர்கள் உள்ளிட்ட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் வரும் 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 14-ந் தேதி விசாக பெருவிழா தீர்தவாரி நிகழ்ச்சியும், 15-ந் தேதி மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், உபயதார்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

    இதேப்தபோல் செட்டிபுலம், பிராந்தியங்கரை, கத்திரிபுலம், கருப்பம்புலம் ஊராட்சிகளில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். மிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டபட்டது.

    கோடியக்கரை ஊராட்சியில் ரூ. 40.80 லட்சம் மதிப்பீட்டிலும், வாய்மேடு ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறக்கபட்டது.

    நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    திட்டச்சேரி அருகே ராமசாமி பெருமாள் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த கொந்தகையில் ராமசாமி பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் 2-ம் நாளான நேற்று மகாலட்சுமி, நவக்கிரக ஹோமம், யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திட்டச்சேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் குத்துவிளக்கேற்றி ராமசாமி பெருமாள் வழிபட்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தங்கம், வெள்ளிப் பொருட்களும் விற்பனை செய்து வருகிறார்.
    • அடகு கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி-ரூ.45 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    நாகப்பட்டினம்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோதிராம். இவர் நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் கடைத்தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளார். மேலும் இங்கு தங்கம், வெள்ளிப் பொருட்களும் விற்பனை செய்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த மோதிராம் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பதறியடித்து கொண்டு பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.

    கடையின் லாக்கரில் வைத்திருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், கல்லா பெட்டியில் இருந்த ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.35 லட்சம் நகைகள் தப்பியது.

    இது குறித்து மோதிராம் வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    அப்போது கொள்ளையர்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க அங்கு பொருத்தபட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்களையும் திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்று திரும்பி வந்தது. கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×