என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கவர்னர் 2 நாள் சுற்றுப்பயணமாக நாகைக்கு வருகை தந்துள்ளார்.
    • உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை.

    நாகப்பட்டினம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

    சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கியவர் சாலை மார்க்கமாக வேதாரண்யம் வருகை தந்தார்.

    வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


    பின்னர் அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு சென்ற கவர்னர் இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    இன்று காலை நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.இந்நிலையில் நாகையில் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் அமிர்த ராஜா தலைமையில் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நாகை புத்தூர் மேம்பாலம் அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பேராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • நாகை மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் கலெக்டரும் பங்கேற்கவில்லை.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அருகே உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நினைவு கூரும் புகைப்படங்களை பார்வையிட்டார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    இந்நிலையில் கவர்னர் பங்கேற்றுள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.

    நாகை மீன்வள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் இல்லாத காரணத்தால் கலெக்டரும் பங்கேற்கவில்லை.

    நேற்று வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் கலெக்டர் பங்கேற்கவில்லை.

    முன்னதாக, வேதாரண்யம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர். தமிழக அரசின் நலன் சார்ந்த கோப்புகளில் கையொப்பமிடாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா கைப்பாவையாக கவர்னர் செயல்படுவதை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ராஜாஜி பூங்கா எதிரே கருப்பு கொடி காட்டி கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், கறுப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொருட்கள் கடலில் மூழ்கி நாசமானதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    • 1500 க்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தர்மன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (40), தேவராஜ் (32), செருதூர் மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் (46), தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ் (36) ஆகிய 4 மீனவர்களும் கடந்த 9-ந்தேதி காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    தொடர்ந்து, அவர்கள் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு ஒரு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், அவர்களது கப்பலை கொண்டு தமிழக மீனவர்களின் பைபர் படகில் மோதியதுடன், மீனவர்களை தாக்கி விட்டு சென்றுவிட்டனர்.

    இதனால் பைபர் படகு நிலைகுலைந்து கடலில் தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர். பின்னர் மற்ற மீனவர்களின் படகின் மூலம் கரைக்கு வந்தனர். அவர்களது படகும் மீட்கப்பட்டது. இதில் சுமார் ரூ.6½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் மூழ்கி நாசமானதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதனால் 15 ஆயிரம் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் 1500 க்கு மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இலங்கை கடற்படை தாக்குதல் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி செருதூர் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • கடலோர பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • கிராமங்களில் போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடத்தலை தடுக்கவும் 'சாகர் கவாச் ஆபரேஷன்' என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடலோர பகுதிகளில் 'சாகர் கவாச்' ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    அந்த வகையில், நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பின்னர், கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இன்று காலை தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகையானது நாளை மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

    • பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    • கொடியேற்றத்தின் போது பலுன்கள், புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

    ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தரும் பேராலயம் வேளாங்கண்ணியில் உள்ளது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தளமாக இந்த பேராலயம் விளங்குகிறது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும்.

    அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வேளாங்கண்ணி பேராலய திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் திருக்கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். கொடியேற்றத்தின் போது பலுன்கள், புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து 'ஆவே மரியா' என முழக்கமிட்டு பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    திருவிழாவையொட்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் தேர் பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி பேராலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆரோக்கிய மாதா பெரிய தேர் பவனி செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது.
    • இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது மகன் மணிகண்டபிரபு, அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் ஆகியோருடன் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

    இந்நிலையில் நேற்று மாலை அனைவரும் கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 9 பேர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    தொடர்ந்து, ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.

    அதனை தொடர்ந்து, காயமடைந்த மீனவர்கள் செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு வந்தனர். பின்னர், சக மீனவர்கள் அவர்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீனவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் எங்களுக்கு சுதந்திரமாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்தது. அந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் மீண்டும் நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது சக மீனவர்கள் மத்தியில் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது.
    • தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது.

    நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

    நாகையில் நடக்கும் இந்த கட்சியில் இணையும் நிகழ்ச்சியை பார்க்குபோது, மீனவர்கள் தி.மு.க.வின் மீது நம்பிக்கையோடு உள்ளனர் என்பது தெரிகிறது. முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    யார் கட்சி ஆரம்பித்தாலும் நமக்கு கவலை இல்லை. ஒரு அமாவாசை தாங்கும். அல்லது இரு அமாவாசை தாங்கும். அதற்கு மேல் தாங்காது. ஏற்கனவே இருக்கும் கட்சியைப் பார்த்து புது கட்சி தொடங்குவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல உள்ளது.

    யார் யாரெல்லாம் கட்சி தொடங்கினார்கள். கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது. இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கமே. கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க. இக்கட்சிக்கு வரும்போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்புடன் கடைசி வரை இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகரத்தினம், சஞ்சை (வயது 23), பிரகாஸ் (35), சுதந்திர சுந்தர், சந்துரு (23), ரமேஷ் (47), ஆனந்தவேல், நம்பியார்நகரை சேர்ந்த சிவராஜ் (45), வர்சன் (19), சுமன் (25), புதியகல்லாரை சோந்த ராஜேந்திரன் (45) ஆகிய 11 மீனவர்கள் சாந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 41 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் மேற்படி 11 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

    தொடர்ந்து, அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    கடலில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள், உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிகவினர்.
    • நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளு முற்று ஏற்பட்டது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 20-ந்தேதி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் குவிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அன்று இரவு கொடிக்கம்பத்தை 62 அடி உயர கொடி கம்பத்தை நட்டு வைத்து கொடியேற்ற முயன்றனர்.

    இதையறிந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து கொடிக்கம்பம் நாட்டுவதற்கு அனுமதி வாங்கவில்லை என்று கூறி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அதிகாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியரும், கீழ்வேளூர் ஆய்வாளரும் ஒருதலைபட்சமாக நடந்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். நாகை மற்றும் திருவாரூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

    இதில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.
    • காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதாலும், கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த சுமார் 5,000 மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் வலையில் வாவல், காலா, ஷீலா, திருக்கை, நண்டு இறால், உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது. இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடலுக்குச் சென்று அதிக மீன்களை பிடித்து வரலாம் என்று நினைத்த மீனவர்களுக்கு, கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    சுறைகாற்றின் வேகத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீடுகளில் 2-வது நாளாக முடங்கிப் போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்திய பைபர் படகுகளும் கடற்கரையில் ஓய்வெடுக்கின்றன. காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்கபடுகிறது.
    • இந்த கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என 150 இருக்கைகள் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

    இந்நிலையில், நாகை - இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவைக்கு போதிய பயணிகள் வருகை இல்லாததால் செப்டம்பர் 15ம் தேதி வரையில், வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதா இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது.
    • விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு, ஸ்டிக்கர் ஒட்டி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். 'ஸ்டிக்கர் பாய்ஸ்' என்று பெயர் பெற்றவர்கள் அதிமுகவினர்.

    அம்மா மருந்தகத்தை முதல்வர் மருந்தகம் என்ற பெயர் மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். அம்மா மருந்தகம் வேறு, முதல்வர் மருந்தகம் வேறு. அம்மா மருந்தகம் கூட்டுறவு துறையோடு இயங்கியது. மாநிலம் முழுவதும் அம்மா மருந்தகம் 380 தான் இருந்தது.

    ஆனால் முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது. முதல்வர் மருந்தகம் மூலம் அனைத்து வகையான மருந்துகளும் கிடைப்பதுடன், வேலையில்லா திண்டாட்டமும் குறையும்.

    மேலும் அம்மா சிமெண்டு் திட்டத்தை வலிமை சிமெண்டு திட்டமாக மாற்றி விட்டதாகவும் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலேயே அம்மா சிமெண்ட் திட்டம் கைவிடப்பட்டது. ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் வலிமை சிமெண்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் அதிமுக 3, 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுகவில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதை தவிர்க்கவே ஜெயக்குமார் இதுமாதிரி பேசி வருகிறார்.

    விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர். திமுக எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. கவர்னரை தன் பக்கம் வைத்துக்கொள்ள தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    திமுகவினருக்கு ஒருபோதும் பாஜகவின் துணை தேவையில்லை. அதிமுகவுக்கு வேண்டுமானால் பாஜக எஜமானர்களாக இருக்கலாம். இந்தியாவிலேயே பாஜகவை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×