என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது.
    • பழைய பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி அவை கூடத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், மேலாளர் காதர்கான், சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார், நகர அமைப்பு ஆய்வாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். மன்ற பொருள்களை கணக்கர் ராஜகணேஷ் வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    உறுப்பினர் ரம்யாதன்ராஜ் பேசுகையில், எனது வார்டில் கடந்த ஐந்து மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    கவுன்சிலர் வள்ளிமாரிமுத்து: மேட்டு தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். கவுன்சிலர் வேல்முருகன்: சீர்காழி தீயணைப்புநிலையத்திற்கு தீயணைப்பு வாகனம் எளிதாக சென்று வரும் வகையில் சாலை அமைத்திடவேண்டும்.

    கவுன்சிலர் ராஜசேகர்: நகரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் எரிவாயு தகண மேடை டென்டர் குறித்து உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்யும் நிலை தலைகுணிவாக உள்ளது என்றார். குறைந்த விலையில் ஒப்பந்தப்புள்ளி கோரூபவர்களுக்கு டெண்டர் கொடுப்பதுதான் முறையாகும்.

    கவுன்சிலர் முழுமதி இமயவரம்பன்: எனது வார்டில் பள்ளி கட்டிடம் பழுதாய் உள்ளது. இதை போல் சத்துணவு கூடமும் பழுது அடைந்துள்ளது இதனை சரி செய்ய வேண்டும். பனமங்கலம் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    கவுன்சிலர் சுவாமிநாதன்: பழைய பஸ் நிலையத்தில் கட்டணக் கழிப்பறையில் கழிவு நீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

    கவுன்சிலர் ரமாமணி : முன்பு எரிவாயு தகணமேடை நடத்திவந்தவரிடம் பணியாற்றி தற்போது டென்டர் கோரூம் பாபு கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக சேவை செய்ததால் அவருக்கு டென்டர் விடவேண்டும்.

    நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், சீர்காழி நகராட்சி பகுதியில் பொது நிதியின் மூலம் மின்விளக்குகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் வசதி விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து நகராட்சி கூட்டத்தில் ஈசானிய தெருவில் நகராட்சிக்கு நிர்வாகத்திற்கு கீழ் சேவை அமைப்பால் நடத்தப்பட்டு வரும் எரிவாயு தகணமேடை டென்டர் விடுவது தொடர்பாக நகர்மன்ற உறுப்பினர்கள் இடையே கட்சி பாகுபாடு இல்லாமல் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் நகர்மன்ற தலைவர் மேஜையை சூழ்ந்துக் கொண்டு மேஜையை தட்டி ஆட்சேபனை செய்து விவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த காமராஜர் மக்கள் நலசேவை அறக்கட்டளைக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தலைவர் துர்காபரமேஸ்வரி அறிவித்தார். இதனால் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. டென்டரை நேசக்கரங்கள் அமைப்பிற்கு தரவலியுறுத்தி நகர்மன்ற உறுப்பினர்கள் பாலமுருகன், முழுமதி இமயவரம்பன், ராமு, ராஜேஷ், நித்யாதேவி, வள்ளி, கலைசெல்வி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய 9 உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் முழங்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.

    • பள்ளி நேரங்களில் பிரதான சாலைகள் மிகவும் போக்குவரத்து நெருக்கடியகாவும், நெரிசலாகவும் காணப்படுகிறது.
    • கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைப்பதால் பெரும் இடர்பாடும், விபத்துகளும் நேரிடுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது, சீர்காழி நகரில் பிரதான பகுதிகளான மணிகூண்டு, அரசுமருத்துவமனைசாலை, தென்பாதி பகுதிகளில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அதிகளவு இயங்கி வருகிறது. மேலும் நகரில் அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் பிரதான சாலைகள் மிகவும் போக்குவரத்து நெருக்கடியகாவும், நெரிசலாகவும் இருப்பதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்றுவருவது சிரமமாக உள்ளது. பள்ளி நேரங்களிலும் கனரக வாகனங்களும் நகரில் ஆங்காங்கே சென்று வருவதும், சாலையோரம் நிறுத்தி வைப்பதாலும் பெரும் இடர்பாடும், விபத்துக்களும் நேரிடுகிறது. ஆகையால் பள்ளி நேரங்களில் காலை 8 மணி முதல் 9.30 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் கட்டிட பயன்பாடு மற்றும் இதர வணிக பயன்பாட்டிற்காக வரும் கனர ரக வாகனங்கள் நகர எல்லைக்குள் வருவதை தடை செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • திருநகரியில் நடந்த விழாவில் 350 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நெப்பத்தூர் மீனாட்சி உதவிபெறும் தொடக்கபள்ளி மாணவர்களுக்கு குடைகளை வழங்கினார்.

    சீர்காழி:

    விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 60வது மணி விழா பிறந்தநாளையொட்டி திருவெண்காடு பகுதியில் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    விடுதலை கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவனின் மணிவிழா பிறந்தநாளை யொட்டி திருவெண்காடு பகுதியில் கட்சியினர் பல்வேறு நலத்திட்டஉதவி களை வழங்கினர்.

    திருநகரியின் நடந்த விழாவில் 350 பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழச்சிக்கு முன்னாள் நெப்பத்தூர் ஊராட்சி த்தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

    கட்சி நிர்வாகி ஸ்டாலின் வரவேற்றார்.

    இதில் வி.சி.க முன்னாள் மாவட்ட செயலாளர் மா.ஈழவளவன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.

    மேலும் அவர் கீழ நெப்பத்தூர் மேற்கு ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க பட்டன.

    மேலும் நெப்பத்தூர் மீனாட்சி உதவிபெறும் தொடக்கபள்ளி மாணவ ர்களுக்கு குடைகள் ஆகியவற்றை வழங்கினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் பாரதிவளவன், சிவக்குமார், ரகுராஜ் உள்ளிட்டதிரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இதனைதொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப ட்டன.

    • நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் இரவு பகலாக நெல் மூட்டையுடன் இருந்து வருகின்றன.
    • இந்நிலையில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே நிம்மேலி சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 2000 ஏக்கரில் குருவை சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்த சுமார் 3000நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வாகனங்கள் மூலம் கொண்டு வந்து கடந்த 15 நாட்களுக்கு மேலாக விற்பனை செய்வதற்காக அடுக்கி வைத்துள்ளனர்

    ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் இரவு பகலாக நெல் முட்டையுடன் இருந்து வருகின்றன இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து தற்போது மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைக்க தொடங்கிவிட்டன இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளன பல்வேறு சிரமங்களுக்கு இடையே விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து பல நாட்கள் காத்திருந்த நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உரிய காலத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து இருந்தால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் முளைத்திருக்காது விவசாயிகளுக்கு இழப்பும் ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர் உடனடியாக விவசாயிகள் நலம் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகள் விற்பனைக்காக எடுத்து வந்த நெல்முட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெரிவல் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஆணையர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் முருகன் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது,

    கிருஷ்ணன் தே.மு.தி.க :-

    செம்பனார்கோவில் கடைவீதி பகுதிகளில் பள்ளிகள் விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    அதனால் பள்ளிகள் அருகில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர், செவிலியர்கள் யாரும் இருப்பதில்லை.

    சத்தியன் வாய்க்காலில் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் வந்து கொண்டிருப்பதால் அப்குதியில் யாரும் வசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மழை பெய்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் அபாயம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

    உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் சுகாதார பணியை மேற்கொள்ள வேண்டும்.

    சுமதி:-

    பிள்ளைபெ ருமாள் நல்லூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.

    அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும்.

    சங்கரபாணி:-

    சேமங்க லம், ஆலவேளி, கருவாழக்கரை, கஞ்சா நகரம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பயிர்கள் சேதமடைந்து வருகிறது.

    பூவேந்திரன் வடிகால் வாய்க்கால் தூர்வார வேண்டும், மருதூர் நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

    சுப்ரமணியன்:-

    கஞ்சாநகரம் வாய்க்காலி ல் கல்வெட்டு சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும், கன்னிகோயில் தெற்குதெரு சாலை சீரமைக்க வேண்டும்.

    அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.

    மைதிலிமகேந்திரன் அ.தி.மு.க. :-

    மேமாத்தூர் கிராமத்தில் காசான்தட்டை சாலை, மேலத்தெரு, வள்ளுவப்புள்ளி சாலை உட்பட பல சாலைகள் சேதமடைந்துள்ளது.

    அவற்றை சீரமைக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பொதுநிதியில் இருந்து வேலை கொடுக்க வேண்டும்.

    லட்சுமிபதி:-

    திருவிளை யாட்டம் தாமரைகுளம், கலசம்பாடி கிராம சாலைகள், குமாரமங்கலம் சாலை சீரமைக்க வேண்டும்.

    எழில்தாஸ்:-

    டி.மணல்மேடு கிராமத்தில் காலனித்தெரு பகுதியில் உள்ள குளத்தில் மூன்று புறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படடுள்ளது.

    ஆனால் வீடுகள் இருக்கும் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாததால் வீடுகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    தலைவர் நந்தினிஸ்ரீதர்:-

    ஆக்கூர், செம்பனார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒன்றியத்தில் சேதமடைந்த சாலைகள் குறித்து தெரிவித்துள்ளீர்கள் இது குறித்து பொறியாளர்கள் கொண்டு ஆய்வு செய்து புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் தொழில்நுட்ப அலுவலர் பன்னீர்செல்வம், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • முன்பக்க கதவு உடைக்கப்பட்டு தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
    • அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை கைப்பற்றி, அதனடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்மகன் பிரகாஷ்.

    இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மதுமிதா பிரசவத்துக்காக நாகப்பட்டினத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளதால் பிரகாஷின் தந்தை ராமகிருஷ்ணன் அவ்வப்போது வந்து வீட்டை பார்த்து சென்று வந்துள்ளார்.

    கடைசியாக நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் பின்னர் வீட்டை பூட்டி சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் அவர் வந்தபோது வீட்டின் கிரில் கதவு மற்றும் முன்பக்க கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பூஜையறை உடைக்கப்பட்டு உள்ளே மர பீரோவில் வைத்திருந்த 54 சவரன் தங்க நகைகள், 1 ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 21ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியன கொள்ளையடிக்க ப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ராமகிரு ஷ்ணன் குத்தாலம் காவல் நிலையத்தில் கொள்ளை சம்பவம் குறித்து புகார் தெரிவித்தார்.

    உடனடியாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா, டி.ஸ்.பி வசந்தராஜ் மற்றும் குத்தாலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அதன் அடிப்ப டையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ள அவ்வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    • சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்–பதற்கு உலர்ந்த மலர் கூறுகள் வைக்கோல்போன்றவை பயன்படுத்தப்படலாம்.
    • சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் எண்ணை வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா செய்திக்கு றிப்பில் கூறியுளடளதாவது,

    சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.

    நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால்கு றிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்..

    களிமண்ணால் செய்யப்ப ட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும்தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள் வைக்கோல்போன்றவை பயன்படுத்தப்படலாம்.

    மேலும் சிலைகளை பள பளப்பாக மாற்றுவதற்கு மரங்களின்இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்தகண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது.

    மாற்றாக சுற்றுச்சூழலுக்குந்த நீர் சார்ந்த மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள்மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும்தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறை களின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு கலெக்டர், எஸ்.பி, மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல்பொ றியாளர் ஆகியோரை அணுகலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நிறைவடைந்து கடந்த திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • கடங்கள் புறப்பட்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த அகிலாண்டேஸ்வரி உடனடியாக அண்டநாத சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பணிகள் நிறைவடைந்து திங்கட்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    விழா அன்று நான்காம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு விமான கோபுர கலசம், சுவாமி, அம்மன் சன்னதிகள் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்.

    கும்பாபிஷேக விழாவில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி டாக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • ஐ.டி பைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதை ெதாடர்ந்தும் பலமுறை சிறுகசிறுக மொத்தமாக ரூ.1,12,780 கட்டியுள்ளார்.
    • 100-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது36).

    மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக பாண்டிச்சேரியை சேர்ந்த சுந்தரபாண்டியன் என்று கூறி செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.2 லட்சம் தனிநபர் கடன் (லோன்) தருவதாக கூறியுள்ளார்.

    லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸி ங்குக்கு இன்ஸியல் தொகை யாக ரூ.8000-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார்.

    மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7340 அனுப்ப சொல்லியுள்ளார்.

    இதை த்தொடர்ந்து, பல செல்பேசி எண்களில் இருந்துபலர் மணிகண்டனைதொடர்பு கொண்டு கேட்டதையடுத்து, லோன் தொகை கிடைத்துவி டும் என்ற நம்பிக்கையில் பல தவணைகளாகமொத்தம் ரூ.67,880-ஐ வங்கிக்க ணக்கில் செலுத்தியுள்ளார்.

    ஆனால், மணிகண்டனுக்கு லோன் கிடைக்கவில்லை.

    இதுவரை கொடுத்த பணத்தை திரும்பத் தரும்படி கேட்டதற்கு மணிகண்டன் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பதால், அதனை கேன்சல் செய்ய வேண்டும் என்றால் மேலும் ரூ.10,000 கட்ட வேண்டும் என கேட்டு வாங்கியுள்ளனர்.

    அதன்பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஐ.டி பைல் செய்வதற்காக ரூ.11,700 மற்றும் அதைத்தொடர்ந்தும் பலமுறை சிறுகசிறுக மொத்தமாக ரூ.1,12,780 கட்டியுள்ளார்.

    முடிவில் தான் முழுமையாக ஏமாந்ததும், தனது பணம் திரும்பக் கிடைக்காது என்பது தெரிந்த பின்னர் மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் உத்தரவின் பேரில் தனி ப்படை அமைக்க ப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி முடிவில் காட்டுமன்னார் கோவிலில் பதுங்கியிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில்அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையா ர்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெரு வைச் சேர்ந்த சஞ்சய் (22), சித்தார்த்தன் (20), கடலூர் மாவட்டம் காட்டும ன்னா ர்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம் (25) ஆகியோர் என தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து லேப்டாப், ஆன்ட்ராய்டு போன் உள்ளிட்ட 16 செல்போ ன்கள், 28 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

    மேலும், தலைமறைவாகவுள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெ ருவைச் சேர்ந்த அமர்நாத், மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மோசடி யில்பல்வேறு நபர்கள் ஈடுபட்டு ள்ளதாக வும் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிமுகம்இல்லாத நபர்களிடம் தங்கள் ஆவணங்களை கொடு க்கவோ, அறிமுகம் இல்லாத செல்போன் எண்கள் மூலம் லோன் கொடுப்பதாக கூறுவதை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பறிமுதல் செய்த ஆவணங்களை மயிலா டுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தனிப்படை யினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, டி.எஸ்.பி வசந்தராஜ் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • இரட்டைகுளம், நீடூர் பெரியமது ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.
    • அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய ஆணையர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலாளர் ஜெயராமன் வரவேற்றார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசியதாவது:-

    வடவீரபாண்டியன் (காங்.):-

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது.

    பயனாளிகளுக்கு பணம் வழங்காமல் அலைகழிக்க ப்படுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சந்தோஷ்குமார் (அ.தி.மு.க):-

    பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு 2 வருடமாக பணம் வழங்கப்படாமல் உள்ளது.

    நிதி இல்லை என்று கூறுகிறார்கள்.

    எப்போது பணம் கிடைக்கும். பல வீடுகள் லிண்டல் மட்டத்தில் நிற்கிறது.

    மேற்கொண்டு கட்டுமான பணிகள் தொடங்க பணம் கிடைக்காமல் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கினீர்கள்.

    பயனாளிகள் வீடு கட்ட முடியாமல் பாதியிலயே நிறுத்தப்பட்டு இருந்தது. அவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் வீடு கட்டி கொடுத்தோம்.

    பல்லவராயன்பேட்டை, இரட்டைகுளம், நீடூர் பெரியமது ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.

    இதனால் பெண்கள், பள்ளி மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    அனைத்து பஸ் நிறுத்தத்திலும் அரசு பஸ்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காந்தி (தி.மு.க):-

    காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை.

    காளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான ஆம்புலன்ஸ் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை.

    அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பிரித்துகொடுக்க வேண்டும்.

    அரசு வீடுகட்டும் திட்டத்திற்கான ஓர்க் ஆர்டர் பலருக்கு வழங்கப்படாமலேயே இருந்து வருகிறது.

    மோகன் (தி.மு.க):-

    மயிலாடுதுறை நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவக்குமார்:-

    மாப்படுகை கங்கை அம்மன் தெரு, பண்ணைத்தெரு, அழகர் நகர் பகுதிகளில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

    மழைகாலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கும், கொசுவை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளிக்க வேண்டும்.

    ஆணையர் அன்பரசு:

    பொறியியல் துறையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

    அதனை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
    • வாகனத்தின் இருக்கையை திறந்து உள்ளே வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருடு போனது தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வடக்கு மட வளாகத்தை சேர்ந்தவர் ராகேஷ் குமார் (28).

    இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகை அடகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று சீர்காழி பிடாரி வடக்கு வீதி உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தனது இரு சக்கர வாகன இருக்கையின் கீழ் வைத்து கொண்டு புறப்பட்டு வந்துள்ளார்.

    அப்பொழுது சிறிது தூரத்தில் உள்ள மருந்தகம் அருகே உள்ள கடையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

    வெளியில் வந்து பார்த்தபோது வாகனத்தின் இருக்கை திறந்து உள்ளே வைத்திருந்த ரூபாய் இரண்டு லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது.

    இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் ராகேஷ் குமார் புகார் அளித்தார்.

    போலீசார் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்த வந்த பணத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பிரதான சாலையில் துணிகரமாக திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அலுவலக உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர்.
    • பத்து நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்திருந்து தண்ணீர் வடிந்த பிறகு மக்கள் கிராமத்துக்கு திரும்பி சென்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்டேசநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகம் முன்பு நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று வந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கிராமத்துக்கு மின்சாரம் வராததால் கிராமமே இருளில் மூழ்கி கிடந்தது.

    இதனால் அனைவரும் சிரம் அடைந்து வருகின்றோம்.எனவே உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 1 மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அலுவலக உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர்.

    கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் வரத்து வந்தபோது ஆற்றின் கரையோரம் உள்ள நாதல்படுகை திட்டு கிராமத்தில் பத்து நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்து இருந்து தண்ணீர் வடிந்த பிறகு பின்னர் மக்கள் கிராமத்துக்கு திரும்பி சென்றனர்.

    தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பத்து நாட்களாக கிராமத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் தற்போது மீண்டும் மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தண்ணீர் கிராமத்தை சூழ்ந்து இருந்ததால் மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் முதலியவைகளை ஆய்வு செய்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    ×