என் மலர்
மதுரை
- கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக தந்துவிடுகிறேன் என்று ஆனந்தியிடமும், அவரது தங்கை அனுவிடமும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
- ஆனந்தியிடம் வாங்கிய பணத்தில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டனர்.
மதுரை:
மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஆனந்தி (வயது 32). இவரின் தங்கை அனு, பொட்டபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மதன் என்பவரது மனைவி அம்பிகாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் அடிப்படையில் அம்பிகா அடிக்கடி ஆனந்தி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் அம்பிகா பெரிய அளவில் சொந்தமாக தொழில் செய்ய இருப்பதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் ஆனந்தியிடம் தெரிவித்துள்ளார். அதில் முதலீடு செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி ஆனந்தியிடம் கடனாகவும் கேட்டுள்ளார். அவ்வாறு கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக தந்துவிடுகிறேன் என்று ஆனந்தியிடமும், அவரது தங்கை அனுவிடமும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
அதனை நம்பிய ஆனந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு தவணைகளில் ஆனந்தி மற்றும் அவருடைய சகோதரி அனு ஆகியோர் வங்கி கணக்கிலிருந்து அம்பிகா மற்றும் மதன் ஆகியோருக்கு ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் வரை பணம் அனுப்பி உள்ளனர். பின்னர் ஆனந்தியின் வீட்டிற்கு நேரடியாக வந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை அம்பிகாவும் அவரது கணவரும் பெற்றுள்ளனர்.
ஆனந்தியிடம் வாங்கிய பணத்தில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டனர். மீதி பணம் ரூ.15 லட்சத்து 25 ஆயிரத்தை திருப்பி தருமாறு ஆனந்தி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு மதனும் அவரது மனைவி அம்பிகாவும் ஆனந்தி மற்றும் அனுவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆனந்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி எஸ்.எஸ்.காலனி போலீசார் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த அம்பிகா மற்றும் அவரது கணவர் மதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது.
- நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரல் சிக்கி இருந்த அந்தப்பொருளை அகற்றினர்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத பெண் குழந்தைக்கு இருமல், மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 28-ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
4 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த 1-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு இடது நுரையீரலில் மூச்சு குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளது ஸ்கேன் பரிசோதனை மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.
8 மாதமே ஆன சிறிய குழந்தைக்கு நுரையீரலில் சிக்கியுள்ள இரும்பு ஊசி போன்ற பொருளை அகற்றுவதற்கு பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சை செய்வதும், அறுவை சிகிச்சை செய்வதும், மயக்க மருந்து கொடுப்பதும் சிக்கலானது.
ஆகவே குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினால் ஆன அந்தப்பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் சிறிய அளவிலான பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரல் சிக்கி இருந்த அந்தப்பொருளை அகற்றினர்.
அகற்றிய பின் பார்த்தபோது அவை குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி. லைட் என உறுதி செய்யப்பட்டது. இச்சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பூரண நலம் பெற்று நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய மருத்துவக் குழுவைச் சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ராஜேஷ்குமார், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஸ்ரீனிவாசகுமார், கருப்பசாமி, மயக்க மருந்து நிபுணர்கள் சிவக்குமார், பிரமோத் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் பாராட்டினார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சுந்தரேஷ் குமார் கூறுகையில், சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் வைத்து விளையாடும்போது அவற்றை விழுங்கவோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள், குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள சிறு பொருட்களை குழந்தைகளுக்கு விளையாட அனுமதிக்க கூடாது. குழந்தைகளுக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சிறு பொருட்களை விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டால் உடனே மருத்துவமனை அணுகி மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உயிருக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் கூறினார்.
- அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
- மதுரையில் உள்ள அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
இருவர்களுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது. கருத்துக் கணிப்பில் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். கமலா ஹாரிஸ்க்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நாளை அதிபர் தேர்தல் இந்நிலையில், அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற மதுரையில் உள்ள அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
- தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.
- தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.
மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான். எங்கள் கட்சிதான் அதற்கான பதில்.
* கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதை முற்போக்கு சிந்தனையோடு கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
* தமிழை நேசித்தவர் நம்முடைய கேப்டன் என்று எல்லோருக்கும் தெரியும். எத்தனையோ படங்களில் நடித்தாலும் தமிழை தவிர மற்ற எந்த மொழிகளிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தை படைத்தவர் கேப்டன்.
* 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று அத்தனை இடத்திலும் தமிழைப் பற்றி பேசியவர் கேப்டன்.
* தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.
* அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியையும் கற்போம் என்று தான் இளைஞர்களுக்கு கேப்டன் சொன்னார்.
* எனவே நிச்சயமாக தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.
* எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கு திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
* அது இன்றல்ல நேற்றல்ல நூற்றாண்டு காலமாக இருக்கின்ற விஷயம். இனிமேல் அதுபற்றி புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.
- நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அரசியல் கட்சிகள் ஒரே தேர்தலின் போதும் தங்களது கருத்துகளை செயல்படுத்த முடியும்.
மதுரை:
மதுரையில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒரு தேர்தலையும் சந்திக்காத நடிகர் விஜய், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிராக பேசியிருப்பது வியப்பாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு எவ்வளவு செலவாகிறது. இதை குறைப்பது தேசிய கடமை. இதற்காகவே நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஒரே தேர்தலின் போதும் தங்களது கருத்துகளை செயல்படுத்த முடியும்.

தவெக ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு அளிப்பதாக விஜய் பேசியுள்ளார். இதை கட்சிகள் வரவேற்கலாம். மக்கள் மத்தியில் உடனடி வரவேற்பு கிடைக்காது. கூட்டணியில் இருந்தால் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்; அந்த மனநிலையில் திமுக இல்லை. பிற கட்சிகள் அந்த மனநிலையில் இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் பாஜக இதை நடைமுறைப்படுத்தி வருகிறது.
குடும்ப அரசியல் ஒரு கேவலமான நிலையாகும். ஒரு குடும்பத்தை விட்டால் கதியில்லை என்ற நிலைக்கு காங்கிரஸ், திமுக தள்ளப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளும் குடும்ப அரசியல் செய்கின்றன. திமுகவின் குடும்ப அரசியல் குறித்து பேசும் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?. பாஜக ஒருபோதும் குடும்ப அரசியல் செய்யாது. குடும்ப அரசியலுக்கு வரும் தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர்.
- விழா நாட்களில் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.
திருப்பரங்குன்றம்:
தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் முதலாம் படை வீடாக திகழும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதனையொட்டி காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியாருக்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து காலை 9 மணிக்கு கோவில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டினர்.
இந்த விழாவில் மதுரை மட்டுமல்லாது சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினார்கள். காப்பு கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவர். மேலும் காலை, மாலை வேளைகளில் சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவார்கள்.
அதேபோல் விழா நாட்களில் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். வருகிற 7-ந்தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதியிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருளுவார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல்வாங்கும் நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதியும், மறுநாள் 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன் சூரசம்ஹாரமும் நடைபெறும். 8-ந்தேதி காலை சிறிய சட்டத் தேரோட்டமும், மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனமும் நடைபெற உள்ளது.
மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் விழா தொடங்கிய இன்று முதல் 7 நாட்களும் திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். கோவில் சார்பில் பக்தர்களுக்கு தங்க வசதியாக கோவில் வளாகத்தில் மின்விளக்கு, மின்விசிறி, பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி சார்பில் கிரிவலப்பாதை பகுதி, பேருந்து நிலையம், கோவில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புறம் குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணிசெல்வம், பொம்மதேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இதேபோல் ஆறாம் படை வீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சண்முகார்ச்சன, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
இதேபோல் விழா நாட்களில் சுவாமி காமதேனு, யானை, ஆட்டுக்கிடாய், சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 7-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மதியம் 3.45 மணிக்கு வேல்வாங்குதலும், 4 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பட்டு ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும் கோவில் ஸ்தல விருட்சமான நாவல் மரத்தடியில் சுப்பிரமணிய சுவாமி வதம் செய்கிறார்.
8-ந்தேதி திருக்கல்யாணமும், அன்று மாலை ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வெங்கடாசலம், அறநிலையத்துறை இணை இயக்குனர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
- தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை.
பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 2003- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், எனது கணவர் விவாகரத்து கோரி பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எனது கைப்பேசியில் நான் யாரிடமெல்லாம் பேசினேன் என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் அவா் ஒப்படைத்தார். இந்த ஆவணத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என விசாரணை நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற மதுரை நீதிபதி தான் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மனைவி பயன்படுத்திய கைப்பேசி ஆவணங்களை பெற சம்பந்தப்பட்ட கைப்பேசி நிறுவனத்துக்கு இணையதளம் மூலம் கணவர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்போது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எண் (ஓடிபி) வரும். இதைப் பயன்படுத்தி ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
ஆனால், இந்த வழக்கில் மனைவிக்குத் தெரியாமல் அவரது கைப்பேசியை எடுத்து ஓடிபி எண்ணைப் பெற்று ஆவணங்களை கணவர் பதிவிறக்கம் செய்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருமணம் என்பது ஒருவரையொருவா் நம்ப வேண்டும். ஒருவரது தனி உரிமையில் மற்றவர் தலையிடுவது முறையாக இருக்காது. தனது டைரியை கணவா் பார்க்கக் கூடாது என மனைவி நினைப்பது சரியே. இது கைபேசிக்கும் பொருந்தும்.
ஒருவரின் தனி உரிமையை மீறி ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டால், விசாரணை நீதிமன்றம் அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த வழக்கில் மனைவியின் மனுவைத் தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பாரதிய சாக்சிய ஆதினிய சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் மின்னணு தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்கும் போது வல்லுநா் சான்றளிக்க வேண்டும். இந்தச் சட்டம், கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது.
ஆனால், தமிழகத்தில் இந்த வல்லுநா்கள் எந்த மாவட்டத்திலும் நியமிக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநா்களை மூன்று மாதங்களில் நியமிக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகச் செயலா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
- ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதாலும், பணிகளின் எண்ணிக்கை குறைவாகி இருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் சக்கரம் கழன்று தடம்புரண்டு ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- அரசியல் கட்சி நடத்துபவர்கள் அந்த கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்று வந்தால் கூட்டணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
- அதிகார பங்கை வைத்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என்பதால் தான்.
மதுரை:
தேவர் ஜெயந்தி முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து புதிதாக மாநாடு நடத்தி இருக்கிறார். தமிழகத்தில் சிறந்த நடிகர்களில் நல்ல நடிகர் அவர். அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர் விஜய் நடத்திய மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள்.
தற்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்து பணியாற்றி வருகிறோம். நடிகர் விஜய் கூட்டணியோ அல்லது அரசாங்கத்தில் பங்கு என்ற கோஷம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது தான்.
அரசியல் கட்சி நடத்துபவர்கள் அந்த கூட்டணியில் ஆட்சியில் பங்கு என்று வந்தால் கூட்டணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். காரணம் அந்த அதிகார பங்கை வைத்து மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும் என்பதால் தான்.
ஆனால் பெரும்பான்மையாக ஒரு கட்சி வெற்றி பெற்றால் கூட்டணி கட்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
ஆனால் ஆந்திராவில் பெரும்பான்மை இருந்தாலும் பவன் கல்யாணத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருக்கிறார்கள். எனவே ஆட்சியில் பங்கு என்பது கட்சி தலைமை எடுக்க வேண்டிய முடிவு. அது வெற்றி பெறும் எண்ணிக்கையை பொறுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது பறக்கும் படை பாலு, வெங்கட்ராமன்,மலர் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பசும்பொன் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.
- பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் தேவர் திருமகனார் பற்றி சொன்னதை பெருமைப்படுத்தி குறிப்பிட்டதை நான் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாக காட்சியளித்தார், தேவர் திருமகனார் என அண்ணா புகழ்ந்துரைத்துள்ளார்.
அதேபோல் கலைஞர் சொன்னது, வீரராக பிறந்தார். வீரராக வாழ்ந்தார். வீரராக மறைந்தார். அவர் மறைந்ததற்கு பிறகும் இன்றைக்கும் வீரராக அவர் போற்றப்படுகிறார் என்று கலைஞர் அவரைப்பற்றி புகழ்ந்து பேசிஇருக்கிறார்.
அத்தகைய தியாகியை போற்றக்கூடிய அரசாக திராவிட முன்னேற்ற கழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் ஒன்றாக தெரியும்.
பசும்பொன் தேவரை பற்றி கழக அரசு செய்திருக்க கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
மதுரை மாநகரில் மாபெரும் வெண்கலசிலை, பசும்பொன் மண்ணில் நினைவில்லம், மேல்நீலித நல்லூர் கமுதி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 3 அரசு கலைக்கல்லூரிகள், மதுரை ஆண்டாள்புரத்தில் முத்துராமலிங்க தேவர் பாலம் என்று பெயரிட்டோம்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர்க்கு கல்வி வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு, கடந்த 2007-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மிக எழுச்சியோடு நாம் கொண்டாடி இருக்கிறோம்.
அப்போது திருமகனார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. விழாவை அடையாளம் காட்டக்கூடிய வகையில், வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. அணையா விளக்கும் நாம் அமைத்துள்ளோம்.
நூலக கட்டிடம், பால்குடம் வைப்பதற்கு மண்டபம் முளைப்பாறி மண்டபம் என்று பசும்பொன் தேவர் திருமகனாருக்கு புகழ்சேர்க்க கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.
இப்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு குருபூஜை நடத்தி இருக்கிறோம்.
பசும்பொன் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.
நேற்று முன்தினம் கூட பசும்பொன் திருமகனார் பிறந்த நாள் விழாவின் போது ஏற்படுகிற கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காகவும், மழை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தெய்வீக திருமகனார் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம்.
இது மாதிரி பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம். எனவே அவரது புகழும் வாழ்க.
கேள்வி: பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. மீனவர்களின் கைது அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே.
பதில்: தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத்துறை அமைச்சரிடத்திலும் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம். அவர்களும் அவ்வப்போது, நாங்கள் எழுதக்கூடிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும், இது தொடர்ந்து இருந்துவருகிறது. இதற்கு முடிவு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் கிடையாது.
கேள்வி: கலைஞரால் தொடங்கப்பட்ட தேவர் கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
பதில்: அதற்கு தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இப்போது கூட 12 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.
கேள்வி காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறதே?
பதில்: 2008-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் காவிரி குண்டாறு திட்டத்தின் முதற்கட்டப் பணி கதவனையில் இருந்து துவக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டு காலம் அதை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். கடைசி வருடத்தில் தான் அதை செய்யப்போகிறோம் எனும் அறிவிப்பை வெளியிட்டு தொடர்ந்தார்கள். அதையும் கோவிட் பெருந்தொற்று வந்த காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது 40 சதவீதம் வரை நிலஎடுப்பு பணிகள் முடிந்திருக்கிறது. தொடர்ந்து அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழாவாக கொண்டாடப்பட்டது.
தேவரின் அரசியல் வரலாறு, அரசியல் ஈடுபாடு குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதோடு தேவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், லட்ச்சார்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் ஏராளமான பக்தர்கள், தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பெருநாழி, கமுதி, மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அலகு குத்தியும், காவடி எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஏந்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதேபோல பலர் முடிக்காணிக்கையும் செலுத்தினர்.
இந்த நிலையில், பசும்பொன் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்காக மதுரை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்தராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஜோதிகா அதனை இன்று அதிகாலையில் நிறைவேற்றினார்.
- தகாத உறவால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவிக்கிறது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கரட்டு காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). செங்கல்சூளை காளவாசலில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதிகா (23) என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் உடப்பன் (19). கட்டிட தொழிலாளியான இவர் டைல்ஸ் கல் பதிக்கும் வேலை செய்து வருகிறார். செங்கற்சூளைக்கு கணவருக்கு சாப்பாடு கொடுக்க சென்று வரும்போது உடப்பனை பார்த்துள்ளார். அப்போது முதல் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காலப்போக்கில் அதுவே கள்ளக்காதலாக மாறியது.
இதனால் ஜோதிகா கணவர் வேலைக்கு சென்றதும், பிள்ளைகளை பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்துவிட்டு கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக கணவரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு கள்ளக்காதலனுடன் சல்லாபத்தில் இருந்த ஜோதிகா கணவரையும், குழந்தைகளையும் வெறுக்க தொடங்கினார்.
கண்ணை மறைத்த கள்ளக்காதலால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஜோதிகா தனது இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு உடப்பனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். அதன்பிறகே மனைவியின் தகாத உறவு கணவர் சரவணனுக்கு தெரியவந்தது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மேலான அக்கறையில் ஜோதிகா திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்ளவும் சரவணன் தயாராக இருந்தார்.
அதன்பேரில் இருவீட்டாரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பிடித்து ஒருவழியாக ஜோதிகாவை சமரசம் பேசி அழைத்து வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவர் சரவணனுடன் ஜோதிகாவை சேர்த்து வைத்து குழந்தைகளுக்காக பொறுப்புடன் குடும்பம் நடத்துமாறு ஜோதிகாவுக்கு அறிவுரையும் கூறிச்சென்றனர்.
என்னதான் மனைவி திரும்பி வந்தாலும், கள்ளக்காதலனுடன் அவர் சென்றது சரவணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஜோதிகா மனம் திருந்தி வந்ததாக அவர் கூறினாலும், தொடர்ந்து உடப்பனுடன் தொடர்பில் இருந்து வந்தார். இதனை சரவணன் கடுமையாக கண்டித்துள்ளார். இது ஜோதிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. கணவருடன் குடும்பம் நடத்தும்வரை கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவிக்க முடியாது என்ற நினைத்த ஜோதிகா அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.
இதற்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஜோதிகா அதனை இன்று அதிகாலையில் நிறைவேற்றினார். அதன்படி இன்று அதிகாலையில் ஜோதிகாவின் கள்ளக்காதலன் உடப்பன், தனது நண்பர் ஒருவருடன் சரவணன் வீட்டிற்கு வந்தார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சரவணனை ஜோதிகாவுடன் சேர்ந்து உடப்பன், அவரது நண்பர் 3 பேரும் சரவனின் கழுத்தை அரிவாளால் கொடூரமாக அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடப்பனும், அவரது நண்பரும் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய ஜோதிகாவை கைது செய்தனர்.
மேலும், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலை நடந்த சிறிது நேரத்திலேயே தப்பி ஓடிய உடப்பன் மற்றும் அவரது நண்பர் மதுரை கருப்பாயூரணி, கல்மேட்டை சேர்ந்த சிவா (18) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தகாத உறவால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் தவிக்கிறது.






