என் மலர்
மதுரை
- தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை.
- பல்வேறு தேர்தல் வியூகங்களை அ.தி.மு.க. உருவாக்கி வருகிறது.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதும் கூட, உண்மையை உலகத்திற்கு சொல்லாமல் உண்மையை மூடி மறைப்பதில் கவனம் செலுத்துகிறார்.
தமிழகம் முழுவதும் நடந்து வரும் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்று தனது பாணியில் பேசி விளம்பரம் தேடுகிறார். இந்த விளம்பர ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் தன் பிறந்தநாளில் கூட பிறரை வசைபாடுவதை தன்னுடைய கடமை என்று நினைக்கிறார்.
அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தில் 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதில் முறையாக உறுப்பினர் சீட்டுகளை கொடுக்க வேண்டும் என்ற எடப்பாடியார் வழிகாட்டுதல்படி மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கையும், தொண்டர்களுக்கு புது எழுச்சியும் உருவாகியுள்ளது. வாக்குச்சாவடி வாரியாக இன்றைக்கு கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவதற்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை அ.தி.மு.க. உருவாக்கி வருகிறது.
தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு செல்வாக்கு இல்லை தனது சொந்தக்காலில் நிற்க முடியாமல் கூட்டணி என்ற பொய்க்கால் குதிரை போல் இன்றைக்கு ஸ்டாலின் நிற்கிறார். பொய்க்கால் குதிரையில் உயரமாக இருப்பர், உண்மை ஆராய்ந்து பார்த்தால் அப்போதுதான் தெரியும்.
உதயநிதி ஸ்டாலின் அ.தி.மு.க. வலிமையைப் பற்றி பேசவும், கள ஆய்வு குறித்து விமர்சனம் செய்வதற்கும், தன்னுடைய பிறந்தநாள் விழாவிலே ஒரு அநாகரிகமான பேச்சை அரங்கேற்றியுள்ளார்.
82 மாவட்டங்களிலே எல்லோரும் ஒரே மாதிரி கருத்து சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது செட்டப் செய்து சூட்டிங் போல இருக்கும். அது எதார்த்த கள நிலவரமாக இருக்காது. சில மாவட்டங்களில் கருத்து மோதல் விவாதம் சூடான கருத்துக்களை சுவையாக எடுத்து வைக்கப்படுகிறது.
கலவரம் நடப்பதை போலவும், மக்களிடத்திலே ஒரு பொய் செய்தியை கொண்டு செல்வதில் உதயநிதி ஸ்டாலின் காட்டுகிற அக்கறை என்பது அ.தி.மு.க.வை பார்த்து எப்படி அச்சப்பட்டு பயந்து இருக்கிறார் என்பது தான் அவருடைய பிறந்தநாள் பேச்சு உள்ளது.
அ.தி.மு.க.வை வலிமையோடு, எழுச்சியோடு எடப்பாடியார் வழி நடத்திவெற்றி நடைபோட்டு வருகிறார். இதை பொறுக்க முடியாமல் உதயநிதி பேச்சு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோவில் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டு வருகிறது.
- நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ள பகுதியில் அளவீடு செய்ய சம்பந்தபட்ட நபர்களுக்கு நோட்டீசு வழங்க வேண்டும்.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வெற்றி விநாயகா கோவில் தலைவர் ஜெயக்கொடி, ஐகோர்ட்டு கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை திருநகர், சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் மிகவும் பிரபலமானது. 1969-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்ட இந்த கோவிலில் நாள்தோறும் பலரும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இக்கோவில் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேமத்தன் குளம் அருகில் அமைந்துள்ள, இக்கோவிலின் ஒரு பகுதி நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, அதை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. அதிகாரிகள் முறையான சர்வே எதையும் மேற்கொள்ளாமல் ஆக்கிரமிப்பு எனக்கூறி கோவிலின் ஒரு பகுதியை அகற்றக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி திருநகர் பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றுமாறு நிலையூர் பொதுப்பணித்துறை பொறியாளர் அளித்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், நீர்நிலை ஆக்கிரமிப்பு உள்ள பகுதியில் அளவீடு செய்ய சம்பந்தபட்ட நபர்களுக்கு நோட்டீசு வழங்க வேண்டும்.
பின்னர் பொதுப்பணித் துறையின் நிலையூர் பகுதி பொறியாளர் முறையாக அளவீடு செய்து நீர்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் அது எவ்விதமான ஆக்கிரமிப்பு இருந்தாலும் அதனை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
- மழை காரணமாக கான்கிரீட் கட்டுமானம் தொடர்ந்து ஈரப்பதத்தோடு இருந்தது.
- கான்கிரீட் தளம் திடீரென சரிந்து விழுந்தது.
மதுரை:
மதுரை மாநகரின் கோரிப்பாளையம் பகுதியில் நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரூ.190 கோடியில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
இந்த மேம்பாலம் தமுக்கம் மைதானம் முன்பு இருந்து தொடங்கி கோரிப்பாளையம் வழியாக ஏ.வி. மேம்பாலத்துக்கு இணையாக மீனாட்சி கல்லூரி வழியாக சிம்மக்கல் வரை 2 கி.மீ. தொலைவுக்கு செல்கிறது. இந்த பாலத்தில் செல்லூரை நோக்கி செல்லும் பாலம் ஸ்டேஷன் சாலையில் மட்டும் ஒரு இணைப்பு பாலம் கட்டப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை பெய்த நிலையில் பாலம் கட்டுமான வேலைகள் பாதித்தன. இருப்பினும் தொழிலாளர் பாலத்திற்கான கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மழை காரணமாக கான்கிரீட் கட்டுமானம் தொடர்ந்து ஈரப்பதத்தோடு இருந்தது. இந்த நிலையில் அந்த கான்கிரீட் தளம் திடீரென சரிந்து விழுந்தது.
கான்கீரிட் கட்டுமானத் தோடு இரும்பு சாரங்களும் சாய்ந்து கீழே விழுந்தது. இதில் தொழிலாளர்கள் திருச்சி துறையூரை சேர்ந்த பழனி, அய்யங்காளை, காளி, ஜெய்சன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிய அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேம்பால கட்டுமானத்தின்போது கான்கிரீட் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் பறக்கும் பாலம் கட்டுமான பணியின்போது நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் சிக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.
- மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார்.
- முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர்.
மதுரை:
மதுரை அரசு மீனாட்சி கலைக் கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க அவரது வழிகாட்டுதலின்படி அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பல வகை தொழில் நுட்ப கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான 2024-25 ஆண்டுக்கான பணி மாறுதல் திணை வழியாக ஒளிவு மறைவு அற்ற பொது கலந்தாய்வு நடத்த உத்தரவு விடப்பட்டது.
அதன் அடிப்படையில் இணைய வழியாக மனு செய்த 377 ஆசிரியர்களின் மனுக்களில் தகுதி உடைய 198 நபர்களுக்கு பணி மாறுதல் ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் 285 நபர்களின் மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய 93 பணியிடங்களுக்கு பணி மாறுதல் ஆணையும் இன்று வழங்கப்பட்டது.
இதுவரை இல்லாத நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத்த்தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரால் எந்த அளவுக்கு இடர்பாடுகள் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார். அத்துடன் அந்த விஷயத்தில் முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து எங்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர். அந்த பணியும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
- டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்தது. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது.
வானிலை சீராகாத நிலையில் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக,தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
- அமைச்சர்கள் முன்னிலையில் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வுக்கூட்டம் இன்று காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் கள ஆய்வுக்குழு நிர்வாகிகளாக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் பேசிய நத்தம் விசுவநாதன், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் வளர்ச்சி பணிகள் குறித்து தொண்டர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.
தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை பார்த்துக்கொள்ளும். எனவே ஆக்கப்பூர்வமான கருத்துகளை நிர்வாகிகள், தொண்டர்கள் கூறலாம் என்றார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற மதுரை பைக்காரா செழியன், ராமச்சந்திரன், முனிச்சாலை சரவணன் உள்ளிட்டோர் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து மேடையை நோக்கி முன்னேறி சென்றனர்.
அவர்கள், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுபற்றி நாங்கள் பேசவேண்டும். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் தொய்விலும், அதிருப்தியிலும் உள்ளனர் என்று தொடர்ந்து பேசினர்.
அத்துடன் அவர்கள் மேடையில் ஏறினர். உடனே மேடையில் இருந்தவர்கள் அவர்களை கீழே தள்ளி விட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.
இதில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது. அவர்கள் சரமாரியாக கைகளால் தாக்கிக் கொண்டனர்.
உடனே மைக்கில் குறுக்கிட்டு பேசிய நத்தம் விசுவநாதன், அமைதியாக இருங்கள், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் மலர பணியாற்றுங்கள் என்றார்.
இருந்தபோதிலும் கூட்ட அரங்கில் பரபரப்பு சற்றும் குறையவில்லை. தொடர்ந்து கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தங்களிடம் முறையாக கருத்துகள் கேட்கவில்லை என கூச்சலிட்டனர். இதனால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
- காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இளம்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினார்.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை அருகே சந்திரா நகரில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத் தக்க இளம்பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே அவர் தன்னுடன் பள்ளியில் படித்த சித்திக்ராஜா (20) என்பவருடன் நட்பாக பழகி வந்து உள்ளார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாத காலமாக சித்திக் ராஜாவுடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.
இதையடுத்து சித்திக் ராஜா இளம் பெண்ணை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்ச்சியாக அவதூறாக பேசியதோடு, மனரீதியிலான தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனாலும் இளம்பெண் அதனை கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி காலை வழக்கம் போல் ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்கு வந்த இளம் பெண் பணியில் இருந்தார். அப்போது அங்கு தனது நண்பருடன் வந்த சித்திக் ராஜா தன்னை காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த இளம்பெண் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு கூறி எச்சரித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சித்திக் ராஜா, இளம்பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அந்த பெண் தனது இருக்கையில் இருந்து பின்புறமாக தரையில் விழுந்தார்.
இருந்தபோதிலும் கொலை வெறியுடன் தாக்கியபோது, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த இளம் பெண்ணை அருகில் இருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் அந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை பார்த்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய ஒத்தக்கடையைச் சேர்ந்த சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பர் டெம்போ ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணை யின்போது தப்பிக்க முயற்சி செய்த சித்திக்ராஜா தவறி விழுந்தபோது அவருக்கு கை எலும்பு முறிந்தது.
பின்னர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவருக்கு மாவுக் கட்டு போடப்பட்டது. தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான வெற்றி பெற்று உள்ளது.
- தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தெரிவித்தது.
மதுரை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் சார்பில் 24-வது மாநாடு மார்க்சிஸ்டு மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மகாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான வெற்றி பெற்று உள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வாறு நடந்தது என்று பல கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தெரிவித்தது. ஆனால், அதே பா.ஜ.க. தான், மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது போல், இலவசங்களை அறிவித்துள்ளது. மற்றவர்களுக்கு ஒரு நியாயம் பா.ஜ.க.விற்கு ஒரு நியாயம், பா.ஜ.க. தேர்தல் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும்.
வரக்கூடிய பாராளுமன்ற கூட்டம் மோடி அரசாங்கம் மகாராஷ்டிரா வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மோசமான சட்டங்களை இயற்ற பா.ஜ.க. முற்படும். அரசியல் சாசனத்திற்கு சமாதி கட்டுகின்ற ஏற்பாடாக தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இருக்கும். இந்தத் திட்டத்தை எதற்கும் வகையில் நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். பேசி குடியுரிமை சட்ட திட்டத்தை அமலாக்குவது, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற மோசமான திட்டத்தை பா.ஜ.க. அமல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பொருள் விலை குறையும்போது பெட்ரோல் விலையை மோடி அரசு குறைக்க மறுக்கிறது. கடந்த ஒரு வருடமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல், ரஷியா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். சொந்த நாட்டில் மணிப்பூர் கலவர பூமியாக மாறி உள்ளது. அந்த மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்லாமல் இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இவர்களே கலவரத்தை தூண்டிவிட்டு அதை முடித்து வைக்க முடியாமல் அவஸ்தப்படுகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் சென்று இலவசங்களை கொடுக்கக் கூடாது என பா.ஜ.க. வழக்கு போட்டார்கள். மகாராஷ்டிராவில் மாதந்தோறும் மகளிர்க்கு உரிமை தொகை கொடுக்க உள்ளோம் என்று தெரிவிக்கிறார்கள். பா.ஜ.க.விற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கையா? தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளன்று மத்திய அரசு தேர்வை அறிவிக்கிறார்கள். வேண்டுமென்றே பொங்கல் தினத்தில் தேர்வை அறிவித்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் விரோதமான அணுகு முறையாக நாங்கள் இதை பார்க்கிறோம்.
எங்களைப் பொறுத்த வரை கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது. கொள்கைரீதியான திட்டத்தை உருவாக்கி அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிற கூட்டணி அமைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மதுரை அரிட்டாப்பட்டியில் கனிம வளங்களை கொள்ளை அடிக்க திட்டமிட்டிருக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை சாலைகள் பற்றி ஊடகங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகிறது.
- நகராட்சித்துறை கூடுதல் நிதி ஒதுக்கிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
மதுரை சாலைகள் பற்றி தொடர்ந்து ஊடகங்களில் விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகிறது. இதுவரை வந்ததிலேயே கடுமையான விமர்சனம் இது.
நிதி பற்றாக்குறையால் திணறும் மதுரை மாநகராட்சிக்கு சாலைகளை மேம்படுத்த நகராட்சித்துறை கூடுதல் நிதி ஒதுக்கிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திமுக அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
- திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார்.
மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு திரைப்பட நடிகை. அவரது மகனுக்கு 12 வயது. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் தான் மகனை முழுவதுமாக உடன் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.
திமுக பேசாத பேச்சா.. எல்லோரும் பேசுவதைப் போல் அந்த நடிகையும் பேசிவிட்டார். சரி அந்த விஷயத்திற்குள் நான் செல்லவில்லை.
ஒரு நடிகையை இரண்டு தனிப்படைகளை அமைத்து காவல் துறை பிடித்திருக்கிறார்கள். ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு செய்யும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று வந்து ஒரு வருடங்களுக்கும் மேல் ஆகியும் அவரது தம்பியை காவல்துறையினரால் இன்னும் பிடிக்க முடியவில்லையே. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ் இருக்கும் காவல்துறை. இதற்கு மேல் என்ன கூறுவது.
ஆக மொத்தம் இந்த அரசை மாற்ற வேண்டும் என்று மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
எத்தனை நாட்களுக்கு முன்னால் தேர்தல் பணிகளை ஆரம்பித்தாலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஜெராக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.
- காதல் திருமணம் என்பது இருபாலரும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து கொண்டு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.
மதுரை:
நவநாகரீக வாழ்வில் டிஜிட்டல் மயம் தவிர்க்க முடியாததாகி விட்டது. கடிதங்களில் தொடங்கிய தகவல் தொடர்பு இன்று கையடக்கத்திற்கு வந்து விட்டது. செல்போன் இல்லாத கரங்களே இல்லை, அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல என்பது போல் எங்கு பார்த்தாலும், எந்த நேரமும் ஒவ்வொருவரும் கைகளில் ஏந்தி நிற்கும் செல்போன்களால் குற்றங்களும் கணக்கில் அடங்காமல் போய்விட்டது.
தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக எத்தனையோ விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், துளியும் பிரயோஜனமில்லை என்பதற்கு சான்றாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களே சாட்சி. அதிலும் பருவம் தவறும் மாற்றங்களால் பாலியல் உள்ளிட்ட பிரச்சனைகளும் இந்த சமூகத்தில் புரையோடிப் போன ஒன்றாகவே இருக்கிறது.
அதிலும் திசைமாறிச் செல்லும் இளைஞர்களின் காதல் காவியம் பலரை பாதிப்படைய செய்துள்ளது. கண்டதும் காதல், ஈர்க்கும் வசீகரத்தால் இளம்பெண்களை தன்பால் இழுக்கும் மாய வித்தைகளை கற்றுக் கொண்டு அவர்கள் செய்யும் அட்டூழியங்களால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு நாட்களை காலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதில் காலத்தின் கட்டாயத்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் தங்களையும், குடும்பத்தையும் இழந்து பின்னர் நிற்கதியாக நிற்கும் சம்பவங்களை படித்தும், பார்த்தும், அறிந்தும் மாற்றம் மட்டும் வரவேயில்லை. பாலியல் கவர்ச்சி என்பது கொடூர கொலையில் முடிந்த சம்பவங்கள் ஏராளமாக அரங்கேறியுள்ளன.
சென்னை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த மாணவி சத்யா (20), பரங்கி மலை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் தள்ளிக் கொல்லப்பட்டது தமிழகத்தையே உறைய வைத்தது. தன்னைக் காதலிக்க மறுத்த சத்யாவை ஒருதலையாக காதலித்த சதீஷ் (23) என்ற போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர் முதலில் காதலிக்க வற்புறுத்தி, பின்னர் சரமாரியாக தாக்கியும் உடன்படாததால் ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கொலை செய்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி தன்னைக் காதலிக்க மறுத்த சாப்ட்வேர் என்ஜினீயராக சுவாதியை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து அவரை, ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்பவர் வெட்டிக்கொன்றார். பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல் தன்னை காதலிக்க மறுத்தார் என்ற ஒரே காரணத்துக்காக விழுப்புரத்தை அடுத்த வ.பாளையத்தில் சிறுமி நவீனாவை, செந்தில் என்ற வாலிபர் தீ வைத்து எரித்துக் கொலை செய்தார்.
விருத்தாசலம் அருகே கறிவேப்பிலைக்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி தன்னை காதலிக்க மறுத்ததால் கடந்த 2019-ம் ஆண்டு ஆகாஷ் என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்தார். 2021-ல் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி சுவேதாவை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வைத்து ராமசந்திரன் என்ற வாலிபர் குத்திக்கொலை செய்தார். 2022-ல் காதலிக்க மறுத்த உறவுக்கார பெண்ணும், கல்லூரி மாணவியுமான கீர்த்தனாவை, புதுச்சேரி சந்நியாசிக்குப்பத்தில் முகேஷ் என்ற வாலிபர் வெட்டிக் கொன்றார்.
கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி சோனாலியை அவரது வகுப்பறையில் வைத்து, அதே கல்லூரியில் பயின்ற மாணவர் உதயகுமார் என்பவர் மரக்கட்டையால் அடித்தே கொலை செய்தார். இதற்கு காரணமும் தன்னை காதலிக்க மறுத்ததுதான்.
சற்றே இதுபோன்ற விரும்பத்ததாக சம்பவங்கள் நினைவில் இருந்து மறைந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டிணம் அரசு பள்ளியில் ஆசிரியை ரமணியை, அவரை ஒருதலையாக காதலித்து வந்த மதன்குமார் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். பள்ளியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சக்கரா நகரில், தனியார் ஒருவர் நடத்தி வரும் ஜெராக்ஸ் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்பவர் வேலைபார்த்து வந்தார். குடும்ப வறுமையால் கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்ட லாவண்யா கடந்த நான்கு வருடமாக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் லாவண்யா வேலைக்கு வரும்போதும், பணி முடிந்து வீடு திரும்பும்போது மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சித்திக் ராஜா (வயது 25 ) என்பவர் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல சமயங்களில் லாவண்யாவை வழிமறித்து தன்னை காதலிக்க வற்புறுத்தி உள்ளார்.
ஆனால் அதனை தட்டிக் கழித்த லாவண்யா தனது குடும்ப நிலை குறித்து பக்குவமாக எடுத்துக்கூறியும் அதனை துச்சமாக நினைத்த சித்திக்ராஜா எனக்கு நீதான்... என்ற வசனங்களும் பேசி மயக்க முயன்றுள்ளார். எப்பேற்பட்ட நிலையிலும் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று லாவண்யா தனது முடிவில் தெளிவாக இருந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று லாவண்யா வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேரில் சென்று லாவண்யாவிடம் நீண்ட நேரமாக பேச்சுக் கொடுத்தவாறு இருந்தார். ஆனால் அவர் மசியாததால் ஆத்திரம் அடைந்த சித்திக் ராஜா, சேரில் அமர்ந்திருந்த லாவண்யாவை கைகளால் காட்டுமிராட்டித்தனமாக தாக்கினார்.
இதில் நிலைகுலைந்த லாவண்யா இருக்கையில் இருந்து பின்புறமாக கீழே விழுந்தார். அப்போது குனிந்தவாறு சித்திக்ராஜா தாக்கினார். லாவண்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே சித்திக் ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த லாவண்யா மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான காட்சிகள் அந்த ஜெராக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
காதல் திருமணம் என்பது இருபாலரும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து கொண்டு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. பாலியல் கவர்ச்சியால் ஏற்படும் காதல், விரைவிலேயே கசந்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் எதிர்பார்ப்பு.
- விமானத்தில் அமைச்சர் உள்பட 77 பயணிகள் இருந்தனர்.
- அமைச்சர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர்.
மதுரை:
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதின் வெள்ளிவிழா, வருகிற ஜனவரி 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 31-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் கலந்து கொள்கிறார்.
இதுதொடர்பான முன்னேற்பாடு பணிகளை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை புறப்பட்டார். அந்த விமானத்தில் அமைச்சர் உள்பட 77 பயணிகள் இருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் தூத்துக்குடி விமான நிலையம் அருகே மோசமான வானிலை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் உட்பட 77 பயணிகளும் பத்திரமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர். அமைச்சர் உட்பட 77 பயணிகளுடன் தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக திடீரென மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.






