என் மலர்
தமிழ்நாடு
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரால் இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது- அமைச்சர் கோவி செழியன்
- மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார்.
- முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர்.
மதுரை:
மதுரை அரசு மீனாட்சி கலைக் கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க அவரது வழிகாட்டுதலின்படி அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பல வகை தொழில் நுட்ப கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான 2024-25 ஆண்டுக்கான பணி மாறுதல் திணை வழியாக ஒளிவு மறைவு அற்ற பொது கலந்தாய்வு நடத்த உத்தரவு விடப்பட்டது.
அதன் அடிப்படையில் இணைய வழியாக மனு செய்த 377 ஆசிரியர்களின் மனுக்களில் தகுதி உடைய 198 நபர்களுக்கு பணி மாறுதல் ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் 285 நபர்களின் மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய 93 பணியிடங்களுக்கு பணி மாறுதல் ஆணையும் இன்று வழங்கப்பட்டது.
இதுவரை இல்லாத நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத்த்தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரால் எந்த அளவுக்கு இடர்பாடுகள் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார். அத்துடன் அந்த விஷயத்தில் முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து எங்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர். அந்த பணியும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.