என் மலர்
மதுரை
- மதுரையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
- அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடந்தன.
மதுரை
கிறிஸ்தவ பண்டிகை களில் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர். இது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று முதல் தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்கள் பிப்ரவரி 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் தவக்காலத்தை தொடங்கினர். இந்த நிகழ்வு ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவுடன் நிறைவுக்கு வந்தது.
இதையொட்டி நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் திருப்பலி மற்றும் ஆராத னைகள் நடத்தப்பட்டன. மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.
அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞானஒளிவு புரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல்நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தத்தை லூர்து, உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றினர்.
செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம். எல்லீஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவால யங்களிலும் திருப்பலி நடத்தப்பட்டது. சி.எஸ்.ஐ மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராத னைகள் நடந்தன.
இவற்றில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பம்- குடும்பமாக கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் 'குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று பங்குத்தந்தை அறிவித்ததும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்றது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வாக அமைந்தது.
- அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
- அனுமதியின்றி பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 100 வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்தனர்.
மதுரை
மதுரை-நத்தம் சாைலயில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பா.ஜ.க. நிர்வாகிகள் பறக்கும் பாலத்தில் வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக பா.ஜ.க. சார்பில் போலீசாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதையும் மீறி பா.ஜ.க. நிர்வாகிகள் வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார், விதிமீறலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.1,500 வீதம் அபராதம் விதித்தனர்.
- போலீஸ் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
- 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மதுரை
மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் 59 மனுக்கள் பெறப்பட்டதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமயநல்லூரில் 122 மனுக்கள் பெறப்பட்டதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பேரையூர், மேலூரில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
- வைக்கோல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
- சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம்
பி.வாகைகுளத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 27). இவரது மனைவி அனிதா. அதே பகுதியைச் சேர்ந்தவர் அனிதாவின் பெரியப்பா கணேசன். இவர்களிடையே சொத்து பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனிதா வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு நேற்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது.
இதில் அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதமானது. சொத்து பிரச்சனையை மனதில் வைத்து தனது பெரியப்பா கணேசன் வைகோலுக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.
மதுரை
மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு வண்டியூரை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது.
ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமாரின் பேஸ்புக் பக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து பரப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து மனைவி யின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- தேரோட்டத்தால் கிரிவலப்பாதை, கோவில் வீதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தினமும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், வெள்ளிபூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அட்சதை தூவி சுவாமியை வழிபட்டனர். பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டனர்.
இரவில் 16 கால் மண்டபம் அருகே பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. தெய்வானையுடன் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். திருமணத்தை நடத்தி வைத்து அது சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பிறகு சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் அங்கிருந்து விடைபெற்று இருபிடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானைக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் வெள்ளை வீசியதை தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சிறிய தேரில் விநாயக பெருமான் புறப்பட்டார். அதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டது.
தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரிய தேர் கிரிவலப்பாதையில் ஆடி அசைந்து வந்தது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. கிரிவலப் பாதையில் வழிநெடுங்கிளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிரிவலப்பாதையில் தேர் தங்கு தடையின்றி செல்ல வசதியாக சாலைகள் சீரமைக்கப்பட்டிருந்தன. சாலையோர ஆக்கிரமிப்புகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதனால் கிரிவலப்பாதையில் தேரை பக்தர்கள் எளிதாக இழுத்து சென்றனர். தேரோட்டத்தால் கிரிவலப்பாதை, கோவில் வீதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தன. மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் தலைமையில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் மற்றும் கிரிவலப்பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் வாகனத்தில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி பெருவிழா தீர்த்தவாரியுடன் நாளை நிறைவடைகிறது.
- தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- சிறப்பு அழைப்பாளர்களா மணிமாறன் கலந்து கொண்டார்.
திருமங்கலம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது தொடர்பான கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்குமாவட்ட தி.மு.க செயலாளர் மணிமாறன், வர்த்தகர் அணி செயலாளர் ராமர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் பேசுகையில், அதிக உறுப்பினர்களை சேர்க்கும் ஒன்றியம் மற்றும் ஒன்றிய செயலாளருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பரிசளிக்கப்படும்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. கடந்த விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் தான் கூடுதலாக 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுதந்தோம். வருகிற எம்.பி. தேர்தலில் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு திருமங்கலம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுதரவேண்டும் என்றார்.
தெற்குமாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, துணை செயலாளர்கள் அழகா்சாமி, பால்பாண்டி, ராஜசுலோசனா, பொருளாளர் தேசிங்குராஜன், மாவட்ட பிரதிநிதிகள் ராதாகிருஷ்ணன் ஹரிகரன், பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஊமச்சிகுளத்தில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகிறது.
மதுரை
மதுரை ஊமச்சிகுளத்தில் மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது. இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் மாடுகள் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி ஓட்டம் பிடித்தது.
5 மைல் தூரத்தை பெரிய மாடுகள் தொட்டு, அதன் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதற்கான முதல் பரிசாக ரூ.3 லட்சமும் 2-வது பரிசாக ரூ.2.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.2 லட்சம், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், சாரதிக்கு கொடி பரிசு ரூ.10 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
சிறிய மாடுகளுக்கான பந்தயத்தையும் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். சிறிய மாடுகள் 3 மைல் தூர எல்லையை தொட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சமும் 2-வது பரிசாக ரூ. 1.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சமும், 4-வது பரிசாக ரூ.25 ஆயிரம், சாரதிக்கு கொடி பரிசு ரூ.5 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.5 ஆயிரம் ஆகும்.
போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர்.
- சோழவந்தான் அருகே கிடா முட்டு சண்டை நடந்தது.
- கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவையொட்டி இன்று கிடா முட்டு சண்டை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து கிடாக்கள் குவிந்தன.
கமிட்டித் தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். முத்துப்பாண்டி, பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். அஜித், குண்டுமணி வரவேற்றனர். உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளருமான கதிரவன் தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றதலைவர் கலியுக நாதன், ஆர்.கே.சாமி, இளைஞரணி விக்னேஷ் ஆகியோர் பேசினர். பவித்திரன் நன்றி கூறினார்.
இந்த கிடா முட்டு சண்டையில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து இருந்து 85 கிடாக்கள் கலந்து கொண்டன. கிடாக்களுக்கு கமிட்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. டி.எஸ்.பி. நல்லு தலைமையில் 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மதுரை பறக்கும் பாலத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.
மதுரை
மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.3 கி.மீ நீளத்திற்கு ரூ.751 கோடி மதிப்பில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை (பறக்கும் பாலம்) அமைக்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகவும் நீளமான இந்த உயர்மட்ட சாலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மதுரை பறக்கும் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி பொங்க பாலத்தில் சென்றனர். பலர் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்ததும், பாலத்தில் செல்ல வந்த வாகன ஓட்டிகளை பா.ஜ.க.வினர் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
பின்பு பா.ஜ.க.வினரும் வாகங்களில் பறக்கும் பாலத்தில் சென்றனர். அவர்கள் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை வாகனங்களில் அணிவகுத்து சென்றார்கள். உற்சாகம் பொங்க காணப்பட்ட அவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த பாலத்தில் வாகனத்தில் பயணித்தவர்கள் கூறுகையில், ''இந்த சாலையில் பயணிப்பது புதுவித அனுபவத்தை தருகிறது. இந்த பாலத்தால் வாகன ஓட்டிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மதுரை மாநகரில் போக்குவரது நெருக்கடி குறையும்'' என்றனர்.
பிரதமர் மோடி மதுரை பறக்கும் பாலம் மட்டுமின்றி மேலும் பல திட்டங்களையும் நேற்று தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து வடுகப்பட்டி பிரிவு வரையிலான ரூ.1,077 கோடி மதிப்பிலான 36 கி.மீ தூர நான்கு வழிச்சாலை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் வாடிப்பட்டி முரளி ராமசாமி, பா.ஜ.க. ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்தி குமாரி, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஊடக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் என்கிற செல்வமாணிக்கம், புறநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை பறக்கும் பாலம் திறக்கப்பட்டதையடுத்து இன்று அங்கு வழக்கமான போக்குவரத்து தொடங்கியது. அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.
- சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மீட்கப்படுவார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
- நூற்றுக்கணக்கான நபர்கள் மதுரை சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர்.
மதுரை
தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் மதுரையும் ஒன்றாகும். தூங்கா நகரம், கோவில் நகரம் என பல பெயர்களைக் கொண்ட மதுரைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படு கிறது.
அதிலும் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளி ட்ட பல கோவில்க ளுக்கு வடமாநில பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறமோ சாலைகளில் திரியும் ஆதரவற்றோர் எண்ணி க்கையும் அதிகமாகவே காணப்படு கிறது.
அப்படி திரியக்கூடிய ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக சாலையோரங்கள் தான். மதுரை மாநகரில் முக்கிய சாலையின் ஓரங்களில் ஆதரவற்ற வர்கள் வசித்து வருகி ன்றனர். அவர்கள் தங்குமிட வசதி மற்றும் நேரத்துக்கு உணவு கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர்.
வயது வித்தியாசமின்றி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான நபர்கள் மதுரை சாலை ஓரங்களில் வசித்து வருகின்றனர். ரெயில் நிலைய முன்பகுதி, பாலம் மற்றும் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவைகளே, அவர்கள் தங்குமிடமாக இருக்கின்றன.
சில வடமாநிலத்தினர் தங்களது குடும்பத்துடன் சாலை ஓரங்களில் வசிக்கின்றனர். அப்படி வசிப்பவர்களில் அதிகமாக முதியோர்கள் உள்ளனர். முதலில் ஏதாவது வேலை செய்து அன்றாடம் தங்களது செலவுக்கு வருமானம் தேடும் முதியவர்கள், அதன்பின் உழைக்க முடியாமல் கையேந்தும் நிலைக்கு சென்று விடுகின்றனர்.
இவர்களில் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் உயிருக்கு போராடி கொண்டி ருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களை அந்த வழியாக செல்லக்கூடிய அரசு அதிகாரிகள் பார்த்த போதிலும், கண்டுகொ ள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் சிலர் இறந்ததும் அனாதை பிணங்களாக எடுத்துச் செல்லப்படு கின்றனர்.
இவர்களும் நமது நாட்டின் குடிமக்கள் என்பதால் அவர்கள் மீது அரசு கவனம் செலுத்தி அவர்களின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி யது அவசிய மாகும். சாலையோரத்தில் தங்கியிருக்கும் சிலருக்கு மட்டுமே ஒருவேளை உணவு கிடைக்கிறது. மற்ற நேரங்களில் அவர்கள் பசியுடன் இருக்கின்றனர்.
மதுரை நகரில் இப்படி தங்கியிருப்பவர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கெடுத்து, அவர்களுக்கு தங்குவதற்கு இட வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
- கோட்டைமேடு பாலன் வரவேற்றார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில், வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு கோடைகால நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். மாநில பேரவை துணைச் செயலாளர் தனராஜ், மாநில இணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, ராமகிருஷ்ணன்.பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன், மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோட்டைமேடு பாலன் வரவேற்றார். இதில் குலசேகரன்கோட்டை பாண்டி, மற்றும் நிர்வாகிகள் அழகர், குழந்தைவேலு, ராமநாதன், நாகமணி, பிச்சை, மலைச்சாமி, வி.எஸ் பாண்டி பிரசன்னா, மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி.உதயகுமார் ஒன்றிய செயலாளர் காளிதாசிடம் வழங்கினார்.






