என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஊத்தங்கரை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யபப்ட்டனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூர் தாய்கண் வட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சிங்காரப் பேட்டை  போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது காசிராஜன் விவசாய தோட்டப் பகுதியில் ரகசியமாக சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 2 பேரை போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். உடனே அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள பெருமாள் (வயது 67)  சரவணன் (41) ஆகியோர் என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார்  அவர்களிடமிருந்து 10 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரியில் நகை பறித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா கடம்பரஹள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ராதா(வயது 56). இவர் கிருஷ்ணகிரிக்கு வந்திருந்தார். அங்கு ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தனது ஊருக்கு செல்ல நின்றிருந்தார். 

    அப்போது ராதா கையில் வைத்திருந்த பையில் 3 பவுன் தங்க சங்கிலி வைத்திருந்தார். அப்போது அருகில் வந்த 2 பெண்கள் ராதா வைத்திருந்த பையை பிடுங்கி கொண்டு தப்பி ஓட முயன்றனர்.

    இதை கவனித்த ராதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஊத்தங்கரை தாலுகா குட்டனூரை சேர்ந்த வடிவேல் மனைவி மங்கா(45), திருப்பத்தூர் சகாதேவன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ரேணு மனைவி சசிகலா(36) என தெரிய வந்தது. 

    அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். 
    காவேரிபட்டணம் அருகே 2 வயது மகனுடன் வாலிபர் விபத்தில் பலியானார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேவர் குளம் அருகே ஊத்து பள்ளம்  கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி  (வயது 28). இவர் ஓசூரில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும்  வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோகிணி (25). இவர்களது மகன் மிதுன் (2). 

    இந்த நிலையில் நேற்று  பெரியசாமி மனைவி, குழந்தையுடன் மோட் டார் சைக்கிளில் காவே ரிப் பட்டினம் சென்று கொண் டிருந்தனர். தருமபுரி-கிருஷ்ணகிரி  தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம்  மோட் டார் சைக்கிள் மோதியது. 

    இதில் பெரியசாமி மற்றும் முன்னால் அமர்ந்து இருந்த குழந்தை மிதுன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிறிதுநேரத்தில்  சம்பவ இடத்திலேயே குழந்தை மிதுன் பரிதாபமாக இறந்தான்.

    பலத்த காயமடைந்த பெரியசாமி மற்றும் ரோகி ணியை அக்கம்பக்கத் தினர் மீட்டு காவேரிப் பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி இறந்தார். இந்த விபத்து பற்றி அறிந்ததும்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினர்.  
    முழு ஊரடங்கு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி:

    கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இன்று கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ் ணகிரி, ஓசூர், பர்கூர், வேப்பனப் பள்ளி, காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, சூளகிரி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, குருபரப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பால், மெடிக்கல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறந்திருந்தன.

    முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே சுற்றாமல் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். மாவட்டம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து கண்காணித்தனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர்கள் சபை சார்பில் ஆய்வு நடத்தியதில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு நடத்திருப்பது தெரியவந்தது.
    கிருஷ்ணகிரி:

    சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி  இந்துசமய அறநிலையத்துறை மற்றும் திருத்தொண்டர்கள் சபை சார்பில் பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு இருப்பின் அவை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி என்னும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற மாரியம்மன் கோவிலில் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்களும் வருவாயும் வரும் நிலையில் கோவில் வளர்ச்சி அடைவதை தடுக்கும் நோக்கில் சில தனி நபர்கள் கோவிலை ஆக்கிரமித்து உள்ளனர். 

    அறநிலையத்துறைக்கு தெரியாமல் அவர்களே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோவிலில்  முறையாக கழிப்பிடங்கள் சுகாதார வளாகங்கள் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. 

    போலி ஆவணங்கள் முத்திரைகள் தயாரித்து அதன்மூலம் தனிநபர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின் முடிவினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தொண்டர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தமிழக-கர்நாடக எல்லையான ஓசூரை அடுத்த அத்திப்பள்ளிக்கு வரும் கர்நாடக மாநில பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
    ஓசூர்:

    ஒமைக்ரான், கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை  தமிழகத்தில்  அதிகரித்து வரும் நிலையில்,  தமிழக அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது.

    இதன்படி, கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு எனவும் அரசு அறிவித்தது.

    இதன்படி நேற்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

    இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வந்த கர்நாடக அரசு பேருந்துகளை, தமிழக மாநில எல்லையான ஒசூர் ஜுஜுவாடி சோதனை சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகள்  கர்நாடகாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். 
    சோதனை சாவடியில்  கர்நாடக மாநில பஸ்கள் திருப்பி அனுப்பப்பட்ட போது எடுத்த படம்.

    இதில் பயணம் செய்த குறைந்த அளவிலான பயணிகள், நடந்தே ஓசூர் நோக்கி வந்தனர்.
    ஓசூரில் கல்லூரி மாணவரை கடத்தி சென்று கத்தியால் குத்தி கொன்ற 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    ஓசூர்: 

    ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தைச் சார்ந்த மகபூப்பாஷா என்பவரின்  மகன் சேக்முகமது அப்சல் (வயது 21). 

    தனது தம்பியுடன் ஒசூர் ராம்நகரில் உள்ள உறவினர் ஒருவருரது  வீட்டில் தங்கி  அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் இரண்டாமாண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்த பிறகு தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணிவரை பகுதிநேர ஊழியராகவும் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி,  ஓசூர் பாரதிதாசன் நகர் அருகேயுள்ள வள்ளுவர் நகரில். அவர் பிணமாக கிடந்தார் அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது.

    இதுதொடர்பாக, ஓசூர் சிவசக்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (24) என்பவரை பிடித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் மீது உத்தனபள்ளி, ராயக்கோட்டை போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கு இருந்தது தெரியவந்தது.

    சம்பவத்தன்று இரவு, ஓசூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஷேக்முகமது அப்சலை, ராஜேசும், அவரது நண்பர் திலீப்குமார் என்பவரும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று சம்பவ இடத்தில் வைத்து வழிப்பறி செய்ய முயன்றனர். 

    ஆனால் ஷேக்முகமது அப்சலிடம் பணம்  எதுவும் இல்லாததால், ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொன்றுவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. திலீப்குமார் மீது ஓசூர் டவுன், ஓசூர் அட்கோ ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 

    இந்த நிலையில்,, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேசையும்,  திலீப்குமாரையும் கைது செய்தனர். கைதான இருவரும்  சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

    கைதான ராஜேஷ், திலீப்குமார்

    இந்த நிலையில், அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டிக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, ராஜேஷ் மற்றும் திலீப்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, நேற்று  உத்தரவு பிறப்பித்தார்.
    ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதால் கர்நாடகாவில் கடுமையான கட்டுபாடுகள் விதித்தது. இதனால் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.
    ஒசூர்:

    ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஊரடங்கை கர்நாடக அரசு அறிவித்தது. இதன்படி நேற்று இரவு 10 மணி முதல்  ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

    இன்று காலை கர்நாடக மாநிலம் முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திபள்ளி பகுதியில் அனைத்து கடைகள், மதுபான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

    இதனால் அப்பகுதி வழக்கம்போல் இல்லாமல் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
    கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. கட்டுபாட்டுகளுடன் கூடிய தளர்வுகளால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பில் பாடங்கள் நடத்தப்பட்டன. தற்போது மீ்ண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்த அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கல்வி வட்டாரத்தில் உள்ள 124 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 14 ஆயிரத்து 411 மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் கிருஷ்ணகிரி வட்டார கல்வி மையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. 

    அதன்படி அனைத்து பள்ளிகளுக்கும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. 

    கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி, பெத்த தாளாப்பள்ளி, ஆலப்பட்டி, நெக்குந்தி, கே.ஆர்.பி. அணை, அவதானப்பட்டி, மேலேரிகொட்டாய் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் நேற்று அனுப்பப்பட்டன. பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் காட்சி.

    கொரோனா தளர்வுகளுக்குபின் இரண்டாம் பருவ பாடநூல்கள் வினியோகிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படித்து வந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டு நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கும் பணி ஓரிரு தினங்களில் முடிந்தவுடன் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படும் என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
    போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ நேற்று தருமபுரி, திருப்பத்தூர் சாலையில் ரோந்து பணியில் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அரசு அனுமதியின்றி 3.5 யூனிட் எம்.சாண்ட் மணலை கடத்தியது தெரியவந்தது. 

    இதனையடுத்து தாசில்தார் இளங்கோ போச்சம்பள்ளி   போலீஸ் நிலையத்தில் எம்.சாண்ட் கடத்தப்பட்ட டிப்பர் லாரியை ஒப்படைத்தார். 

    இது குறித்து இன்ஸ்பெக்டர் பிரபாவதி  விசாரித்தார். இதில்  லாரி டிரைவர் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சப்பாணிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 25) என்பவர் போச்சம்பள்ளி பகுதிக்கு எம்.சாண்ட் மணலை டிப்பர் லாரியில் அனுமதியின்றி கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து டிரைவர் செல்வராஜை  போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    தளி அருகே கிராமத்திற்குள் புகுந்த யானைகள் விவசாயி நிலங்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்தது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி அடுத்துள்ள தேவரபெட்ட வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

    இந்த யானை கூட்டம் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20-க்கும் மேற்பட்ட யானைகள் தேவகானபள்ளி கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்கள் தின்றும் காலால் மிதித்தும் நாசப்படுத்தி அட்டகாசம் செய்தன. 

    இதில் அனில்குமார், மோட்டப்பா, கிருஷ்ணப்பா, சிக்கன்னாஆச்சாரி, ஆகியோருடைய ராகி, வாழை உள்ளிட்ட பல ஏக்கர் பயிர்கள் நாசமாகின. தொடர்ந்து தேவகானப்பள்ளி விவசாய நிலங்களில் யானைக் கூட்டம் நடமாடிக் கொண்டிருந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.

    இதுபற்றி தகவலறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் தீவிர முயற்சி எடுத்து யானை கூட்டத்தை வனப்பகுதிகள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனைத்தொடர்ந்து பிண்ணமங்கலம், ஏலேசந்திரம், உனிசேநத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    குந்தாரப்பள்ளி சந்தையில் வழக்கமாக 6 ஆயிரம் மாடுகள் வரை விற்பனையாகும். ஆனால் நேற்று நடந்த சந்தையில் 3 ஆயிரம் மாடுகள் மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரி:

    பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வார சந்தையில் மாட்டுச்சந்தை நேற்று நடந்தது.

    இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளை கொண்டு வந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அதிக அளவில் மாடுகள் கொண்டு வரப்பட்டதால் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:- பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து மாடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே மாடுகள் விற்பனை ஆனது. அதிக மாடுகள் வரத்தால், விலை மிகவும் குறைந்தது. முன்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு கேட்கப்பட்ட ஒரு ஜோடி மாடுகள் இங்கு, 60 ஆயிரம் ரூபாய்க்கு கேட்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில், ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், காளை மாடுகளை வாங்க வருகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தும் மாடுகளும், பசு மாடுகளும் விற்பது மிகவும் குறைந்துள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குந்தாரப்பள்ளி சந்தையில் வழக்கமாக 6 ஆயிரம் மாடுகள் வரை விற்பனையாகும். ஆனால் நேற்று நடந்த சந்தையில் 3 ஆயிரம் மாடுகள் மட்டுமே விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதே போல குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் சண்டை சேவல்களும் கொண்டு வரப்பட்டன.

    திண்டுக்கல், ஒட்டன்சந்திரம், பழனி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சண்டை சேவல்கள் கொண்டு வரப்பட்டன. அதை வாங்க ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்தன. இந்த சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது. நேற்று சந்தைக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சண்டை சேவல்கள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
    ×