என் மலர்
கிருஷ்ணகிரி
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வீரமலை பகுதியை சேர்ந்தவர் தேக்கன். இவரது மகன் ராஜேஷ் (வயது 20). வாய் பேசாதமுடியாத இவர் சொந்தமாக கோழி பண்ணை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21). இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீரமலையில் இருந்து போச்சம்பள்ளிக்கு சென்று புத்தாடை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது மீண்டும் போச்சம்பள்ளி அருகே உள்ள அனுமகவுண்டனூர் என்னுமிடத்தில் வீரமலைக்கு செல்லும் போது காவேரிப்பட்டணத்தில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி வந்த செப்டிக் டேங்க் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜேஷ், விக்னேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான ராஜேஷ், விக்னேஷ் உடல்களை கைப்பற்றி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் பகுதியில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கோவில் அருகே குழந்தை அழுகை சத்தம் நீண்ட நேரமாக கேட்டுள்ளது. இதையறிந்த பொதுமக்கள் கோவிலில் சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து பொதுமக்கள் பாருர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து பச்சிளம் பெண் குழந்தையை கைபற்றி போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் கிருஷ்ணகிரி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் குழந்தையை வீசிசென்ற கல்மனம் படைத்த தாய் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
கோவிலில் பச்சிளம் பெண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தூர்:
சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியாக தருமபுரி நோக்கி டாஸ்மாக் மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 42), என்பவர் ஓட்டினார். கிளீனராக இளையராஜா (38) என்பவர் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி ரோட்டில் கவிழ்ந்தது
இதில் லாரியில் இருந்த பீர்பாட்டில்களில் பெரும்பாலானவை உடைந்து சேதமடைந்தது. இதனால் அங்கு பீர்பாட்டில்கள் உடைந்து ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாக சென்ற சிலர், லாரியில் மீதமிருந்த பீர்பாட்டில்களை வேக வேகமாக அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் அங்கிருந்த குடிமகன்கள் சிலர், இதனை சாதகமாக பயன்படுத்தி பீர்பாட்டில்களை எடுத்து கொண்டு தங்களது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை பார்த்து அங்கு நின்ற சிலர் திகைத்து போய் நின்றனர்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் லாரியில் இருந்த பீர்பாட்டில்களை அள்ளியவர்களை விரட்டியடித்தனர்.
இதில் லாரியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பீர்பாட்டில்கள் உடைத்து சேதமானதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுக்கா பாகலூர் பக்கமுள்ள அடவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லகுமய்யா என்பவரது மகன் முனிராஜ் (30).
விவசாயியான இவரும், அதே பகுதியை சேர்ந்த கோனப்பா என்பவரது மகன் மற்றொரு முனிராஜும் உறவினர்கள் ஆவர்.
இவரது மனைவி ஜோதிக்கும், லகுமய்யா மகன் முனிராஜிற்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை பலமுறை கண்டித்தும் கைவிட மறுத்து கள்ளத்தொடர்பு தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த முனிராஜ், நேற்று லகுமய்யா மகன் முனிராஜை அரிவாளால் வெட்டினார்.
இதில் அவரது தலையின் பின்புறம் வெட்டு விழுந்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






