என் மலர்
கள்ளக்குறிச்சி
- தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
- அய்யாசாமி மற்றும் செல்வி ஆகி யோர் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 67) விவசாயி, இவர் சம்ப வத்தன்று தனது மனைவி செல்வி (45) என்பவருடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் பொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பல்லகச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் இவரது பொபட் மீது மோதியது. இதில் அய்யாசாமி மற்றும் செல்வி ஆகி யோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தி னர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அய்யாசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் வக்கீல்.
- மணிமாறனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31). வக்கீல். இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன்கள் சிட்டிபாபு (21), பிரகாஷ் (23), பிரபு (24) ஆகியோர் மணிமாறனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வக்கீல் மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் சிட்டிபாபு, பிரகாஷ், பிரபு ஆகிய 3 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- தினேஷ் வேலை தேடி கோயம்புத்தூருக்கு சென்றார்.
- உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மகாசக்தி நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 32). இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, தினேஷ் வேலை தேடி கோயம்புத்தூருக்கு சென்றார். இதனால் பிரியா மற்றும் அவரது குழந்தைகள், பக்கத்து தெருவில் வசிக்கும் தாயார் வீட்டிற்கு இரவில் தூங்கச் சென்று விடுவார்கள். காலையில் எழுந்து வீட்டிற்கு வந்து விடுவார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பிரியா தனது தாயார் வீட்டுக்கு தூங்கச் சென்றார். இன்று காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 5 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக சின்னசேலம் போலீசாருக்கு தனது பெற்றோர் உதவியுடன் பிரியா தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் தேடி வருகின்றனர்.
- கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர்.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு இக்கோவிலில் நேற்று சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) நடைபெற்றது. அப்போது ஐதீகப்படி ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு கோவிலுக்கு வந்தார். கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர். இதனை அங்கிருந்தவர்கள் தட்டி கேட்டனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன், கோவில் அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பிரிவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் கோவில் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
புதுவை மாநி லத்தில் இருந்து உளுந்தூர் பேட்டைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கலால் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை கலால் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் உளுந்தூர் பேட்டை பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் ஒரு பையுடன் பஸ்சில் இருந்து இறங்கினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மகளிர் போலீசாரை வைத்து விசாரணை நடத்தி, அவரை சோதனையிட்டனர்.
இதில் அவர் எடுத்த வந்த பையில் புதுவை மாநிலத்தில் வாங்கப்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது. மேலும், பெண் அணிந்திருந்த ஆடைக்குள்ளும் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தார். விசார ணையில் உளுந்தூர் பேட்டை அருகேயுள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்த மச்சக்காளி என்கிற நம்பிக்கைமேரி (வயது 48), என்பதும், புதுவை மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த உளுந்தூர்பேட்டை கலால் போலீசார், அவரிடமிருந்து 120 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மரூர் பகுதியில் பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 44) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார்.
- அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி னார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், கருணாநிதி சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் உதயசூரின் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் அரவிந்தன், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சங்கராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசாரணையின்றி தூக்கிலிட வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் தலிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சிந்தனைவளவன், ஒன்றிய பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் சிலம்பன், வணிகரணி மாநில செயலாளர் திராவிட சந்திரன் ஆகியோர் பேசினர். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விசார ணையின்றி தூக்கிலிட கோரியும் இந்த ஆர்ப்பாட் டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சுந்தரமூர்த்தி கோவில் அர்ச்சகர், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
- சசிகலா, ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே க.அலம்பலம் கிராமத்வதை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 70). கோவில் அர்ச்சகர், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுந்தரமூர்த்தி, அவரது மனைவி சசிகலா ஆகியோர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கடந்த 17-ந் தேதி சென்றனர். அங்கு சுந்தரமூர்த்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்த டாக்டர்கள், சுந்தரமூர்த்தியின் ஆதார் கார்டு மற்றும் காப்பீட்டு உதவி திட்ட அடையாள அட்டையை 20-ந்தேதி கேட்டுள்ளனர். இதையடுத்து சசிகலா, ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்தார். வீட்டின் சாவி மற்றும் ஆதார் கார்டு உள்ள இடத்தை கூறினார்.
அதனை எடுத்து உள்ளே சென்று ஆதார் கார்டு மற்றும் காப்பீட்டு அட்டையை போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் போடுமாறு கூறினார். இதனைத் தொடர்ந்து சசிகலாவின் உறவினர் வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றார். வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து உடனடியாக சசிகலாவிடம் கூறினார். உடனடியாக சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த சசிகலா, பீரோவில் இருந்த 7 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி, ரூ.20 ஆயிரம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கச்சிராயபாளையம் போலீசாரிடம் நேற்று (21-ந் தேதி) புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கச்சிராயபாளையம் போலீசார், கோவில் அர்ச்சகர் வீட்டில் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- பூபதிக்கு அடிக்கடி தீராத வயிறு வலி பிரசினை இருந்துள்ளது.
- பூபதியை சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வீர பயங்கரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (வயது 60) விவசாயி. இவரது மகன் சக்தி. பூபதிக்கு அடிக்கடி தீராத வயிறு வலி பிரசினை இருந்துள்ளது. இதனால் மது குடிக்கும்பழக்கத்திற்கு ஆளானார். இதனையடுத்து கடந்த 12-ம் தேதி சக்தி வேலைக்குச் சென்று விடடார். பின்னர் வீட்டிலிருந்த பூபதி வயிறு வலி அதிகமானதால் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மாலை சக்தி வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து தந்தை பூபதியை சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பூபதி நேற்று இறந்தார். இதுகுறித்து சக்தி கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
- வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வேங்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, விவசாயி. இவருக்கு ரோகிணி (வயது 19) என்ற மகள் உள்ளனர். ரோகினி சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி ரோகிணி கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரோகிணியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரோகிணியின் சகோதரர் ராஜகுரு சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் மாணவி ரோகிணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மணிகண்டன் மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
- மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே சுத்தமலையை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன் (வயது 24) மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மது பழக்கத்தை நிறுத்துமாறு அவரது பெற்றோர் கூறியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.






