என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார்.
    • பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 57). இவர் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து இளையாங்கன்னி செல்ல வேறு ஒரு பஸ்சில் ஏறினார். அப்போது கையில் வைத்திருந்த பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்கினார்.
    • கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தில் ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டை வாசுதேவனூர் கிராமத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது31) என்பவர் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டிற்க்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அரிசி, மளிகை பொருட்கள் வாங்குவது போல் பொருட்களின் விலையை கேட்டு, சில வகை பொருட்களை எடுத்து வைக்கக் கூறியுள்ளார். பின்பு கடை உரிமையாளர் மங்கையர்க்கரசி அந்த நபர் கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துள்ளார்.

    பிறகு அந்த நபர் 1400 ரூபாய் விலையில் ஒரு அரிசி சிப்பத்தை எடுத்துக்கொண்டு, உரிமையாளர் மங்கை யர்க்கரசியிடமே ரூ. 2000 பணம் கேட்டுள்ளார். மங்கையர்க்கரசி 2000 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொடுத்துள்ளார். இதன் பிறகு அந்த நபர் ஒரு சிப்பம் அரிசி ரூ. 2000 பணம் ஆகியவற்றுடன் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது கடையின் உரிமையாளர் மங்கையர்க்கரசி தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என கூறியிருக்கிறார்.

    வெகுநேரம் கழித்து மங்கை யர்க்கரசிக்கு சுயநினைவு வந்ததாகவும் அதன் பிறகே கடைக்கு வந்த நபர் தன்னை ஏமாற்றி விட்டு சென்றதாக அக்கம்பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார். இதன்பிறகு மங்கையர்க்கரசி அருகில் உள்ள கீழ்குப்பம் ேபாலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மங்கையர்க்கரசியின் சூப்பர் மார்க்கெட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் வந்து போன சம்பவம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் அந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்தவர் நரசன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 70). சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணம்மாள் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது, 

    புதுமைப் பெண் திட்டம் மாவட்ட சமூக நலத்துறை மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 6- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தகுதியான முதலாம் ஆண்டு மாணவிகளின் விவரங்களைச் சேகரித்து அவர்களை புதுமைப் பெண் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கூறினார். மேலும் அந்தந்த கல்வி நிறுவன வளாகங்களில் புதுமைப்பெண் திட்டம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும். கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்க்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.
    • மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராஜேஷ் (வயது 7) இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கணேஷ் ராஜா, வாசவி, ஞானவேல் மற்றும் மயக்கமருந்து மருத்துவர்கள் மகேந்திரவர்மன், தினேஷ், சிலம்பரசன், முத்துக்குமார், சாந்தி, சரண்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் அவரது மூக்கில் சிறிய அளவிலான 3 பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூக்கில் இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

    தொடர்ந்து இதே மருத்துவ குழுவினர் எலவனாசூர் கோட்டை கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அருண்குமார் (27) பொறியியல் படித்துள்ளார். இவருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் தலைவலி கண் பார்வைத் திறன் குறைபாடு இருந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்தொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் இளையராஜா (29), சங்கராபுரம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜிந்தா குமார் மகன் ஹரிதாஸ் (11) மற்றும் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சியை சேர்ந்த சரவணன் (35) ஆகியோருக்கு குறட்டை வியாதி இருந்துள்ளது. இதையொட்டி இவர்கள் 3- பேரும் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் உஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எண்டோஸ்கோபி, பூஞ்சை நோய், குறட்டை வியாதி ஆகியவற்றிற்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறட்டை வியாதிக்கு 8 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் அதிக பிரசவம் நமது கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது என கூறினார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, துணை முதல்வர் ஷமீம், நிலைய மருத்துவர் அனுபமா, உதவி நிலைய மருத்துவர்கள் பழமலை, பொற்செல்வி மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது.
    • 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகேயுள்ள புகைப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாகை வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது இரு தரப்பு இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் இளையராஜா, அசோக், கல்வி, மணிகண்டன், சக்தி, நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இளையராஜா, அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்கு புகைப்பட்டி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவானாசூர்கோட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எறையூரில் இருந்து அதையூர் செல்லும் சாலையில் காட்டு கோவில் அருகே போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் எறையூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் லியோ பிரகாஷ் (வயது 26) என்பதும் அரசு அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    • போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் விரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த ஜோசப்(40) ர் தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2024 ஜனவரி 1-ந்தேதி தகுதியேற்பு நாளாகக் கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனையொட்டி முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும், முதற்கட்ட பணியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரி பார்க்க உள்ளனர். இப்பணி வருகிற ஆகஸ்ட் மாதம் 21- ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் மற்றும் 100 சதவீத தூய்மையாகவும் முடிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்களை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கலெக்டர் ஷ்ரவன் குமார் கூறியுள்ளார்.

    • சஞ்சனா ஒரு தனியார் பள்ளி படித்து வந்தார்.
    • பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கோமுகி டேம் காணங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மனைவி மலர். இவர்களுக்கு சத்தியா (வயது 10) சஞ்சனா( வயது 4 )என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இருவரும் கச்சிராயப்பாளையம் மாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி படித்து வந்தனர்.இதில் சஞ்சனா எல்.கே.ஜி.படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோது பள்ளியில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது பள்ளியின் பஸ் முன் பக்கம் மோதியதில் சஞ்சனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்துவிட்டார். இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன சஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மணிப்பூர் மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில அரசு தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என வக்கீல்கள் கோஷமிட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க தவறிய ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல்கள் சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் ராமசாமி வரவேற்றார். இதில் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமையை தடுக்க தவறிய ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசு தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என வக்கீல்கள் கோஷமிட்டனர். இதில் மூத்த வக்கீல்கள் பரம குரு, அன்பழகன், சரவணன், திருநாவுக்கரசு, வக்கீல்கள் பாலா, அண்ணாமலை, பிரபாகரன், சுரேஷ் பாபு, இள மாறன், பாரி, சத்தியமூர்த்தி, குமார், முகமது பாஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
    • நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகே வாரி புறம்போக்கு உள்ளது. இந்த இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அந்த வாரியின் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து செல்கின்றன. இந்நிலையில் வாரி புறம்போக்கில் உள்ள ஆக்கிரமி ப்புகளை அகற்ற கோரி தனிநபர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்ப டுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பு அகற்றம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் மீண்டும் ஆக்கிரமிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற எஸ்.ஒகையூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். 

    தகவல் அறிந்து விரைந்து வந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் (பொறுப்பு) பாலகுரு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிகாரிகள் வருகிற 28- ந் தேதி வாரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, தனிப்பிரிவு போலீசார் கொளஞ்சி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×