search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் குறட்டை நோய்க்கு 3 பேருக்கு அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் பெருமிதம்
    X

     கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் உஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் குறட்டை நோய்க்கு 3 பேருக்கு அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் பெருமிதம்

    • ராஜேஷ்க்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.
    • மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராஜேஷ் (வயது 7) இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கணேஷ் ராஜா, வாசவி, ஞானவேல் மற்றும் மயக்கமருந்து மருத்துவர்கள் மகேந்திரவர்மன், தினேஷ், சிலம்பரசன், முத்துக்குமார், சாந்தி, சரண்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் அவரது மூக்கில் சிறிய அளவிலான 3 பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூக்கில் இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

    தொடர்ந்து இதே மருத்துவ குழுவினர் எலவனாசூர் கோட்டை கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அருண்குமார் (27) பொறியியல் படித்துள்ளார். இவருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் தலைவலி கண் பார்வைத் திறன் குறைபாடு இருந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்தொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் இளையராஜா (29), சங்கராபுரம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜிந்தா குமார் மகன் ஹரிதாஸ் (11) மற்றும் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சியை சேர்ந்த சரவணன் (35) ஆகியோருக்கு குறட்டை வியாதி இருந்துள்ளது. இதையொட்டி இவர்கள் 3- பேரும் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் உஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எண்டோஸ்கோபி, பூஞ்சை நோய், குறட்டை வியாதி ஆகியவற்றிற்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறட்டை வியாதிக்கு 8 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் அதிக பிரசவம் நமது கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது என கூறினார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, துணை முதல்வர் ஷமீம், நிலைய மருத்துவர் அனுபமா, உதவி நிலைய மருத்துவர்கள் பழமலை, பொற்செல்வி மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×