என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் போதை பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலி யஸ்சீசர், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர், அப்போது பெரிய மூட்டையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மூட்டையில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஆந்திர மாநிலம் குடிமண்டலம், சேக்லாம்பட்டியை சேர்ந்த கந்துலாபாப்பாராவ் என்பது தெரியவந்தது.

    ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கேரளாவுக்கு கடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து கந்துலா பாப்பாராவை போலீசார் கைது செய்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    திருவள்ளூர் தாலுகா போலீசார் பட்டரைப் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்ட வாலிபர் வைத்திருந்த பையில் போதைப் பொருளான கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    படப்பை அருகே மரக்குடோனில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    படப்பை அருகே உள்ள செரப்பனஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரக்கட்டையில் பொருட்களை பேக்கிங் செய்யும் நிறுவனம் உள்ளது.

    இதற்கு தேவையான மரத்தை அருகில் உள்ள குடோனில் வைத்திருந்தனர். நேற்று இரவு திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

    கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பகுதியில் இருந்து 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் குடோனில் இருந்த மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும்.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடப்பாக்கம் அருகே மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    கடப்பாக்கம் அருகே உள்ள ஆலம்பறை குப்பத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு (வயது 33). மீனவர். நேற்று இரவு அவர் கடப்பாக்கம் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே வந்த போது 10 பேர் கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே தேசிங்கு பரிதாபமாக இறந்தார்.

    சூனாம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் சினிமா சூட்டிங்கிற்கு வருபவர்கள் கொடுக்கும் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆலம்பறை குப்பம், கடப்பாக்கம் குப்பம், ஆலம்பறை கோட்டையில் சினிமா சூட்டிங்கிற்கு வந்தவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.

    இந்த பணத்தை பிரிப்பதில் மீனவ கிராமங்களிடையே மோதல் ஏற்பட்டது. எனவே இந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த முன் விரோதத்தில் தேசிங்கை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மீனவர் கொலையால் ஆலம்பறை குப்பம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    லதா ரஜினிகாந்தின் தகவலால் உத்திரமேரூர் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி ஹரினியை போலீசார் மும்பையில் மீட்டனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள பவுஞ்சூரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள். நரிக்குறவர்கள். இவர்களது மகள் 2-வது மகள் ஹரினி கடந்த செப்டம்பர் 15-ந் தேதி கடப்பாக்கத்தில் நடந்த கோவில் தெருவில் வெங்கடேசன் குடும்பத்துடன் அங்கு கடை வைத்திருந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் பவுஞ்சூர் கடை வீதியில் தூங்கினார்.

    மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமி ஹரினியை காணவில்லை. மர்ம நபர்கள் அவளை கடத்தி சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.

    இதற்கிடையே கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, குழந்தையை பறிகொடுத்த நரிக்குறவர் தம்பதியை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் போலீசாரிடம் கூறும்போது, கடத்தப்பட்ட சிறுமியை போல் ஒருவரை மும்பையில் உள்ள ரெயில் நிலையத்தில் கண்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவுப்படி தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்கள் மும்பை சென்று விசாரித்தனர்.

    இந்த நிலையில் உத்திரமேரூர் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி ஹரினி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் அவளை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆனந்த கண்ணீரோடு சிறுமி ஹரினியை கட்டி அணைத்தனர். சிறுமி கடத்தலில் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

    துரைப்பாக்கத்தில் செல்போனை திருடி ரூ.5 ஆயிரம் கேட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    துரைப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள மகளிர் விடுதியில் காவலாளியாக பணியாற்றி வருபவர் காமராஜ்.

    இவர் இரவு அறையில் தூங்கி கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது செல்போன் திருடு போனது தெரியவந்தது.

    இந்நிலையில் காமராஜ் தனது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசியவர் நான்தான் செல்போனை திருடி உள்ளேன். 5000ரூபாய் கொடுத்தால் தான் செல்போனை கொடுக்க முடியும். திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார்.

    இது குறித்து காமராஜ் துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில் திருவான்மியூர் சென்று பணத்தை கொடுத்து விட்டு செல்போனை வாங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் திருச்சி துவரக்குறிச்சியை சேர்ந்த அப்துல் ஹமீம் என்பது தெரியவந்தது.அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியில் கடந்த 31-ந் தேதி இரவு வாலிபர்கள் சிலர் புத்தாண்டு ரகளையில் ஈடுபட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    இதற்கிடையே செங்காடு பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்ற காந்திநகரை சேர்ந்த மாணவர்களை வாலிபர்கள் சிலர் மிரட்டி அனுப்பினர்.

    இதுபற்றி அறிந்த காந்திநகர் பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் இன்று காலை மிரட்டல், ரகளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர், மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    செங்கல்பட்டு கல்லூரியில் படித்து வந்த புதுவையை சேர்ந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuducherryMedicalStudent
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் புதுவையை சேர்ந்த தேஸ்வர் அரவிந்தன் என்ற மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். 3-ம் ஆண்டு மாணவர்.

    கல்லூரியில் கடந்த 3 நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் குழுவில் தேஸ்வர் அரவிந்தன் இடம் பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் மாணவர் அரவிந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் படாளம் போலீசார் விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தேஸ்வர் அரவிந்தன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

    அதில் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மாணவர் மரணம் குறித்து புதுவையில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கல்பட்டுக்கு விரைந்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் தேஸ்வர் அரவிந்தனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. #PuducherryMedicalStudent
    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூரில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றனர். அப்போது அவ்வழியாக ரோந்து போலீசார் வாகனத்தில் வந்தனர்.

    உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். சந்தேகமடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து பார்த்த போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

    சரியான நேரத்தில் போலீசார் வந்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது. ஏ.டி.எம்.எந்திரத்தை மர்ம கும்பல் கடப்பாரையால் உடைத்து உள்ளனர். பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

    இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    பீர்க்கன்கரணையில் துப்பாக்கியுடன் ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பீர்க்கன்கரணை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    காரில் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சூர்யா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கைத்துப் பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    சூர்யாவின் கூட்டாளிகளான ராஜசேகர், முத்துக்குமார் ஆகியோரும் பிடிபட்டனர். 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சூர்யா மீது கொலை வழக்குகள் உள்ளன. தனது எதிராளிகளை சுட்டுக் கொல்வதற்காக அவர் கைத்துப்பாக்கியை காரில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறர்கள். துப்பாக்கியின் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

    ரவுடி சூர்யா, எதிர் கோஷ்டியை சேர்ந்த வினோத், தேசிங்குராஜா ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகி உள்ளன.

    திருமணம் செய்து வைக்காததால் மகன் தாக்கியதில் காயம் அடைந்த தாய் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் பால கங்கா தெருவை சேர்ந்தவர் தங்கபாய் (64). இவரது மகன் டார்வின் மனோகர். இவருக்கு திருமணமாக வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக அவர் வீட்டுக்கு வந்து இருந்தார். அப்போது தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தாய் தங்கபாயிடம் தகராறு செய்தார்.

    அப்போது ஆத்திரம் அடைந்த அவர் தங்கபாயை அடித்து உதைத்து தலையை சுவரில் மோத வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கபாய் மயக்கம் அடைந்தார்.

    ஆதம்பாக்கம் போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தங்கபாய் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டார்வின் மனோகர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தாம்பரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தாம்பரம்;

    கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் யுவராஜ் என்கிற பப்லு (வயது 20). கடந்த 31-ந் தேதி இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது யுவராஜூக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர்.

    இந்த நிலையில், யுவராஜை இரும்புலியூர் ஏரிக்கரையில் சிலர் வெட்டிக் கொன்றனர். குற்றவாளிகள் குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கொலைக்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து துப்பு துலங்கியது. இதையடுத்து கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற தேரிமணி, ராஜூ, லெனின் என்கிற பில்லா, பட்டாபி ராமத்தை சேர்ந்த முகேஷ் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் தவிர மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    காஞ்சீபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விபரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் திட்டத்திற்கான புதிய சேவை மையத்தினை மாவட்ட நீதிபதி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
    காஞ்சீபுரம்:

    மத்திய அரசின் இ-கோர்ட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

    இதன் மூலம் வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும் உடனுக்குடன் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதற்கான குறுந்தகவல் சேவை மையங்கள் அந்தந்த மாவட்ட நீதிமன்றகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் வக்கீல்களுக்கு புதிதாக தாக்கல் செய்யப்படும் வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்கள், வாய்தா தேதி முதலானவை குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும்.

    இதனால் வழக்கறிஞர்கள் கோர்ட்டுக்கு நேரில் வந்து வழக்கு குறித்து அறிய வேண்டியதில்லை. இதனால் கால விரயம் தவிர்க்கப்படுகின்றது. மேலும் முக்கியமான வழக்குகளின் தன்மை குறித்த விபரங்களை உலகத்தின் எந்த மூலையிலும் உள்ளவர்கள் அறிந்து கொள்ளலாம்.

    இந்த திட்டத்திற்கான புதிய சேவை மையத்தினை காஞ்சீபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெயவேலு, பாக்கியஜோதி, மீனாட்சி, திருமால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வழக்கறிஞர்கள் சம்பத், கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, துரைமுருகன், தாங்கி பழனி, ஆர்.வி.உதயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×