என் மலர்
காஞ்சிபுரம்
ஆதம்பாக்கம் ராம கிருஷ்ணாபுரம் 3-வது தெருவில் பிறந்து 5 நாட்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்று சுற்றியது. அதனை தெரு நாய்கள் விரட்டிய வண்ணம் இருந்தன. இதை அவ்வழியே சென்ற மீனம்பாக்கத்தை சேர்ந்த ரோஷ்டா ஜானு (வயது 8) என்ற 4-ம் வகுப்பு மாணவி கண்டு மனம் வருந்தினார், உடனே அவர் சத்தம் போட்டதோடு கற்களை வீசி எறிந்து தெரு நாய்களை விரட்டினார்.
பின்னர் அந்த ஆட்டுக் குட்டியை மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் தனது ஆட்டுக்குட்டி வழி தவறி வந்துவிட்டதாக கூறி போலீஸ் நிலையம் சென்றார். அவரிடம் ஆட்டுக்குட்டியை ஒப்படைத்தனர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குண்டு வெடித்து சிதறியது.
இதில் அதே பகுதியை சேர்ந்த சூர்யா, மானாமதியை சேர்ந்த திலீபன் (23) ஆகிய 2 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் வெடித்த குண்டு ராணுவத்தில் ராக்கெட் லாஞ்சரில் முன் பகுதியில் பயன்படுத்தும் குண்டு என்பது தெரிய வந்தது. கோவில் அருகே திலீபனின் பிறந்தநாளை நண்பர்கள் கொண்டாடிய போது வெடிகுண்டை இரும்பு பொருள் என்று நினைத்து அவர்கள் உடைத்த போது வெடித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து குண்டு வெடித்த இடம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் மீண்டும் ஒரு வெடிகுண்டு அங்கு சிக்கியது.
அதனை போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்து உள்ளனர். இதுதொடர்பாக அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து இருந்த வியாபாரி ஒருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிக்கிய வெடிகுண்டை செயல் இழக்க வைப்பது ஆபத்து என்பதால் அதனை பாதுகாப்பாக வெடிக்க வைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
அதன்படி நேற்று மாலை தமிழக கமாண்டோ படை உதவியுடன் வெடி குண்டு தடுப்பு குழு அதிகாரிகள் மற்றும் போலீசார் வெடிகுண்டை வெடிக்க வைப்பதற்காக மானாமதியில் உள்ள ஏரிக்கு கொண்டு வந்தனர். அப்போது பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.
கோர்ட்டு அனுமதி இன்றி குண்டை வெடிக்க வைக்க முடியாது என்பதால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டை வெடிக்க வைக்க செங்கல்பட்டு கோர்ட்டில் உத்தரவு பெறப்பட்டது. இன்று கமாண்டோ படை உதவியுடன் வெடிகுண்டை வெடிக்க வைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்குமார் அகர்வால் மேற்பார்வையில் அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.தற்போது அந்த வெடிகுண்டு கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒரு கல்குவாரியில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.
அதனை அங்கேயே வெடிக்க வைக்கலாமா? அல்லது ஆறு ஏரி பகுதியில் வைத்து வெடிக்க வைக்கலாமா? என்று ஆலோசித்து வருகின்றனர். இன்று மதியம் அல்லது பிற்பகல் அந்த வெடிகுண்டு வெடிக்க வைத்து செயல் இழக்க செய்யப்படும் என்று தெரிகிறது.
மதுராந்தகத்தை அடுத்த கீழ்புளியரன் கோட்டையில் உள்ள ஆரம்ப பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருபவர் லத்திகா.
இவர் வகுப்பறையின் சாவியை தொலைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை தேவி என்பவர் மாணவி லத்திகாவின் தலைமுடியை இழுத்து தாக்கினார். இதில் மாணவிக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சித்தாமூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாணவியை தாக்கிய ஆசிரியை தேவியை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் கோவில் பின்புறம் உள்ள குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த திலீபன் (25) என்பவரது பிறந்தநாளை நண்பர்கள் சூர்யா உள்பட 6 பேர் கேக் வெட்டி கொண்டாடினர். அவர்கள் புதரில் கிடந்த இரும்பு பொருளை உடைத்தபோது அது பயங்கரமாக வெடித்தது.
இதில் சம்பவ இடத்திலேயே சூர்யா பலியானார். நேற்று காலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி திலீபனும் பரிதாபமாக இறந்தார்.
மேலும் காயம் அடைந்த ஜெயராம், திருமால், யுவராஜ், விசுவநாதன் ஆகிய 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் வெடித்தது ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு என்பது தெரிந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த இடம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
நேற்று காலை சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜ், டி.ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
ஓய்வு பெற்ற ராணுவ வெடிகுண்டு நிபுணர் ஜெயராம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதர் மறைவில் கிடந்த வெடிக்காத மற்றொரு வெடிகுண்டை கண்டுபிடித்தனர். அதனை பாதுகாப்பாக கொண்டு சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
முதலில் வெடித்த குண்டில் 2007 என்ற சீரியல் எண் உள்ளது. நேற்று பறிமுதல் செய்யப்பட்ட குண்டில் 2009- என்ற சீரியல் எண் உள்ளது.
ராணுவத்தில் ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் இந்த குண்டுகள் எப்படி இங்கு வந்தது என்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ராணுவ அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதியில் மேலும் இதேபோன்று குண்டுகள் இருக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று 3-வது நாளாக போலீசார் அந்த இடம் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சம்பவம் நடந்த இடம் முழுவதும் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே பழைய இரும்பு வியாபாரி ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில் குளம் அருகே அவர் இரும்பு குடோன் வைத்து இருந்தார். அதனை அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலி செய்ததாக தெரிகிறது.
எனவே கடையை காலி செய்தபோது அந்த குண்டு பழைய இரும்பு என்று நினைத்து வீசப்பட்டதா? அதனை கொடுத்தவர்கள் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.
மானாமதி கிராமத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள அனுமந்தபுரத்தில் ராணுவ பயிற்சி நிலையம் உள்ளது. அங்கிருந்து யாரேனும் பழைய இரும்பு பொருள் என்று நினைத்து வெடிகுண்டை திருடி வந்தனரா? என்று விசாரிக்கிறார்கள்.
லண்டனிலிருந்து சென்னை திரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று சாதி வெறி பிடித்த கும்பல் தொடர்ச்சியாக முயற்சித்து வந்தனர்.
அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த சிலையை அகற்றக்கூடாது என்ற ஆணை பெற்று யாருக்கும் இடையூறு இல்லாமல் இருக்கிறது.
போக்குவரத்திற்கு இடையூறு என்பது அப்பட்டமான பொய். தேரை இழுத்துச் செல்லும் நேரத்தில் இடைஞ்சலாக இருக்கிறது என்று சொல்லுவது தவறான கருத்து.
வேண்டுமென்றே அந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு முன்கூட்டியே தயாரிப்போடு நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி காவல் நிலையத்திற்கு அருகிலேயே இந்த அநாகரிகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்.

அதுவரையில் காவல் துறை அவர்களை அப்புறப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு சாலை மறியல் செய்தால் கூட உடனடியாக காவல்துறை வந்து அப்புறப்படுத்துகின்றனர்.
ஆனால் ஒரு தேசிய தலைவரின் திருவுருவச்சிலையை பட்டபகலில் காவல் நிலையத்தின் அருகே திரண்டு வந்து மணிக்கணக்கில் அதை தாக்கி தகர்த்து தரைமட்டமாக்கும் வரையில் காவல்துறை என்ன செய்தது? அதற்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக சிலையை தமிழக அரசு நிறுவியது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் சிலையை நிறுவியது மட்டுமே அதற்குரிய தீர்வாகாது.
இந்த அநாகரிகத்தை அரங்கேற்றியவர் அத்தனை பேர் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்த அல்லது உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அநியாயம் கிடையாது. அதனால் இத்தகைய அநாகரீக செயல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு 25 பண்டல் வளையல் அனுப்புவதற்காக இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த பார்சல் அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. 110 கிலோ எடையுள்ள இந்த போதை பொருள் கருப்பு கலர் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் ஆகும்.
இந்த போதை பொருள் சென்னையில் இருந்து இலங்கைக்கு யார் அனுப்பியது என்ற தகவல்களை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல கோலாலம் பூரில் இருந்த சென்னை வந்த விமான பயணிகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியிடம் 7 கிலோ தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


காந்திய பேரவை இயக்க தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்தார். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பிறந்ததினமான செப்டம்பர் 15-ந்தேதி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்க கோரி காந்திய பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
தமிழக முதல்-அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா, திருக்குறளின் வழிகாட்டுதல்படியும், அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் தற்போது அவரது பெயரை கொண்ட தமிழகத்தை ஆளும் கட்சி, வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து மக்களை சீரழித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
போரூர்:
முகப்பேர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் நிர்மல் (வயது 18). மறைமலை நகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் நண்பரான அதே கல்லூரியில் விசுவல் கம்யூனி கேசன் முதலாம் ஆண்டு படித்து வரும் அய்யப்பன் தாங்கலை சேர்ந்த கேலட் பென்னி (18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை நிர்மல் ஓட்டினார். பின்னால் கேலட் பென்னி அமர்ந்து இருந்தார். இருவரும் ஹெல் மெட் அணியவில்லை.
அவர்கள் தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் ஏரி அருகே வந்தபோது முன்னால் கியாஸ் ஏற்றிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென அதிவேகமாக லாரியின் பின்புறத்தில் மோதி சொருகியது. மோதிய வேகத்தில் லாரிக்குள் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நிர்மல் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் அமர்ந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயம்அடைந்த கேலட் பென்னி குரோம் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் குப்பையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் காசிமேடு இந்திரா நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பாரதி (39). தனியார் நிறுவனத்தில் ஊழியராக இருந்தார். நேற்று மாலை மாமியார் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வர புதுவண்ணாரப்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் வந்த போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பாரதி பலியானார்.
காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவர் கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:
பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை 10.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை அழைத்துச் செல்ல வந்த காரையும் விமான நிலைய போலீசார் சோதனை செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அவரை கைது செய்தது கண்டத்துக்குரியது.
ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் அவரது நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த கைது நடவடிக்கை உள்நோக்கத்தோடு பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது. அமித்ஷா கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக ப.சிதம்பரத்தை கைது செய்திருக்கிறார்கள்.

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர். முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவரை எப்படி கைது செய்ய வேண்டும் என்று கடைபிடிக்காமல் அவரை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது அவரை கைது செய்திருப்பது கேவலமான ஒன்றாகும். விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களை கைது செய்ய வக்கற்ற இந்த அரசு ப.சிதம்பரத்தை கைது செய்ததன் மூலம் எதிர்கட்சி தலைவர்களை மிரட்டிப் பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






