என் மலர்
காஞ்சிபுரம்
அசாம் மாநிலத்தில் மதிய உணவுக்கு சென்ற டாக்டர் வருவதற்குள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சக தொழிலாளர்கள் டாக்டர் தீபன்தத்தா என்பவரை தாக்கியதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில் டாக்டர் யோகானந்தன், சங்க தலைவர் பி.டி. சரவணன், டாக்டர்கள் விக்டோரியா, பூபதி தன்யகுமார் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம். மடம் தெரு அருகே உள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் சந்தேகத்திற்கிடமாக நின்ற 5 பேரை விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் இன்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்தார். விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறினர்.
இது தொடர்பாக பிரவீன், கார்த்திகேயன், மகேஷ், விசுவநாதன், புல்லட் தீபக் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்தி, 4 உருட்டு கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த பின்னப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா. வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்த அவரை திருக்கழுக்குன்றம் போலீசார் கைது செய்தனர். சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்போரூரை அடுத்த சிறுங்குன்றம் காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் ரூ.50 மதிப்புள்ள 1½ கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த தாட்சாயினி (32). இவரது தம்பி பகவதி (20). அக்காள்-தம்பி இருவரும் செய்யூர் அடுத்த தழுதாளி குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருவரும் பைக்கில் சென்றனர்.
நேற்று இரவு வீடு திரும்பினர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மழை பெய்தது.
அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர சுவற்றில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிய பகவதி தலையில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாட்சாயிணி மாமல்லபுரம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தம்புநாயுடுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபு(45). தொழிலாளி.
இவர் பெரியபாளையம் நோக்கி தண்டலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தண்டலம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது பெரியபாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த டிராக்டரின் டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால் டிராக்டரின் பின்பக்கம் ஹரிபாபுவின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில்,பலத்த காயமடைந்த ஹரிபாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த மாகரல் அருகே உள்ள சித்தாலப்பாக்கத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு பாறைகளை உடைக்க ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வெடி பொருட்கள் அனைத்தும் கல்குவாரியில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த குவாரியில் திருச்சியைச் சேர்ந்த மோகன் என்பவர் பழையசீவரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று மதியம் குடோனில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த அறை முழுவதும் சிதறி தரை மட்டமானது.
இந்த வெடி விபத்தில் வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரைச் சேர்ந்த விஜயன், ஆற்பாக்கத்தைச் சேர்ந்த சூப்பர்வைசர் வினோத், மாகரல் பகுதியைச் சேர்ந்த காவலாளி லோகநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் தொழிலாளி மோகன் என்பவர் மாயமாகி விட்டார். குடோனில் இருந்த கூரைகள், கற்கள் உடைந்து சிதறியதில் கல்குவாரி குட்டை மற்றும் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான 42 ஆடுகள் இறந்தன.
குடோன் வெடித்து சிதறிய சத்தம் 4 கிலோ மீட்டர் தூத்துக்கு கேட்டது. தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.எஸ்.பி. கலைச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் அங்கு சிதறி கிடந்த கற்குவியலை அகற்றினர். அப்போது தொழிலாளி ஒருவரின் உடல் பாகங்கள் தனித்தனியாக கிடைத்தது.
எனவே இறந்து போனது மாயமான தொழிலாளி மோகன் என்பவரது உடலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மீட்கப்பட்ட உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து இருப்பதால் அது மோகன் உடல்தானா? என்பதை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளனர். அதன் பின்னரே உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
கல்குவாரி குடோனில் அனுமதி பெற்ற அளவு வெடி பொருட்கள் வைக்கப்பட்டதா? போதிய பாதுகாப்பு இருந்ததா? என்பது குறித்து மாகரல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடி விபத்து குறித்து போலீசார் கூறும்போது, “வெடி பொருட்கள் வைத்திருந்த அறை அருகே யாரோ ஒருவர் மொபைல் செல்போனில் பேசியபடி சென்றதால் விபத்து நடந்து உள்ளது” என்று தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் நகரில் காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் மாலையாக அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
டி.கே.நம்பி தெருவில் உள்ள செல்வ விநாயகர், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 கோயில்களில் உள்ள விநாயகருக்கு எருக்கம்பூ மாலை, சுண்டல், பழங்கள், கரும்பு உள்ளிட்டவைகளை படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் 843 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
இந்த ஆண்டு 1326 இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றது. இந்த சிலைகள் போலீசார் அறிவுறுத்தியுள்ள இடங்களில் கரைக்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை, சர்வதீர்த்த குளம், மதுராந்தகம் ஏரி, ஆலம்பரை குப்பம் (கடப்பாக்கம்), வடபட்டினம் குப்பம், சதுரங்கபட்டினம் குப்பம், மாமல்லபுரம் கடற்கரை, கோவளம் கடற்கரை, பல்கலைக்கழக கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, கடலூர் குப்பம், தழுதாலிகுப்பம், பரமண்கேணி குப்பம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வேறு இடங்களில் கரைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (வயது 45). கொத்தனார். இவர் கிளாப்பாக்கத்தில் உள்ள தந்தையை பார்த்து விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புதுப்பட்டினம் சாலை, தாங்கல் நகர் வளைவில் வந்த போது எதிரே வந்த மணல் ஏற்றிய லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே எம்.ஜி.ஆர். உடல் நசுங்கி இறந்தார்.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
சிட்லப்பாக்கம், ராமகிருஷணாநகரில் வசித்து வருபவர் சிவா (வயது 29). கால்டாக்சி டிரைவர். இவர் கடந்த 31-ந் தேதி இரவு வீட்டு முன்பு காரை நிறுத்திவிட்டு நடந்து சென்றார்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் திடீரென சிவாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதால் 3 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சிவாவுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது 2 ஆண்டுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை முயற்சி நடந்திருப்பது தெரிந்தது. சிவாவின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், அப்புபட்டி கிராமம். கடந்த 2017-ம் ஆண்டு கிராமத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டின் போது சிவாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கார்த்தியை சிவா தாக்கியதாக தெரிகிறது. இதற்கிடையே சிட்லப்பாக்கத்தில் தங்கி சிவா கால்டாக்சி ஓட்டி வந்தார். இதே போல் கார்த்திக்கும் துரைபாக்கத்தில் தங்கி கால்டாக்சி ஓட்டி வந்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் சந்தித்து உள்ளனர். பழைய பகையை மனதில் வைத்த கார்த்திக் நண்பர்களுடன் சேர்ந்து சிவாவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக கார்த்திக், அவரது நண்பர் முத்து ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவான தாமோதரனை தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகே வாலிபர் ஒருவர் நண்பர்கள் 5 பேருடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வீடியோவில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக காவலாளி ராஜேந்திரன் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பட்டா கத்தியால் கேக் வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
அன்பேரில் போலீசார் பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்து கல்லூரி மாணவர்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில், பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்வாணன், அவரது நண்பர்களான ரோகித், தீபக், சரவணன், சக்தி, சுஜய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பல்லாவரம் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து தெற்கு இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நாகல்கேனி பெரியார் நகர் செங்குவேல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று காலை அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அங்கிருந்து 2 டன் குட்கா, சொகுசு கார் மற்றும் ரூ. 2 லட்சத்து 37ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளர்களான ராஜேந்திரன் அவரது மனைவி ராணி, மகன் ராதாகிருஷ்ணன், ஊழியர் விஜயராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் ராஜேந்திரனின் மற்றொரு மகன் மகேந்திரன் பல்லாவரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதும் பெங்களூரில் இருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி வந்து அதை வீட்டில் பதுக்கி வைத்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கார் மூலம் சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. தலைமறைவான மகேந்திரனை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் இந்திரா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் மணி (60). இவர் மரம் காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தார்.
மரம் வெட்டுவதற்காக வந்தவாசி, மதுராந்தகம் பகுதிகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்து குறைவான கூலி கொடுத்து கொத்தடிமைகளாக நடத்துவதாக செல்போன் மூலம் அரசுக்கு ரகசிய தகவல் வந்தது.
அதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் காஞ்சனமாலா, துணை தாசில்தார் பூபாலன், வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அலுவலர் விமலா ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது காண்டிராக்டர் மணியின் வீட்டின் அருகே கொட்டகை போடப்பட்டிருந்தது. அதில் அதிக அளவில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அனைவரும் அங்கு கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அங்கு இருந்த 18 பேர் மீட்கப்பட்டனர்.
குமார் (65), சாந்தி (50), சின்னராசு (18), செல்வம் (10), வெங்கடேசன் (22), பச்சையப்பன் (22), ஜெயந்தி (18), ரித்தீஷ் (10) இவர்கள் அனைவரும் வந்தவாசியை அடுத்த காலவிடுகிராமத்தை சேர்ந்தவர்கள். மேலும் குமார், சாந்தி, சின்னராசு, செல்வம் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
மேலும் மற்றொரு செல்வம் (23), அமுல் (22), வசந்தி (8), முத்து (3), மயிலம் (65), மல்லிகா (55), நாகவல்லி (13), வேதம்மாள் (10), வேங்கப்பன் (12) மற்றும் 10 மாத குழந்தையும் அடங்குவர். இவர்கள் அனைவரும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர்கள்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்கள் தலா ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் கொடுத்து அழைத்து வந்து மரம் வெட்டும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் கிடையாது. சாப்பாடு மட்டும் வழங்கியுள்ளனர்.
வேலை முடிந்ததும் மணி வீட்டின் அருகேயுள்ள கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டு வந்தனர். தப்பிச் செல்லாமல் இருக்க கொட்டகையை சுற்றி அடியாட்களை நிறுத்தி கண்காணித்து வந்ததும் தெரிய வந்தது. வந்தவாசி காலவிடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி சினேகா என்பவர் 3 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இவர்களை காண்டிராக்டர் மணி 3 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட 18 பேரும் சோமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
காண்டிராக்டர் மணியிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் வசித்து வந்தவர் ரமேஷ் ஜெய்துலானி (வயது 74) தொழில் அதிபர். இவர் நண்பரான போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்த மிர்துன் ஜெயசிங் (74) என்பவருடன் கிண்டி 100 அடி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.
அவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் இருவரும் பேசியபடி ஓட்டலில் உள்ள ‘எஸ்கலேட்டரில்’’ ஏறிச் சென்றனர்.
அப்போது மிர்துன் ஜெயசிங் நிலைதடுமாறினார். உடனே அவருக்கு உதவ ரமேஷ் ஜெய்துலானி முயன்றார். இதில் இருவரும் எஸ்கலேட்டரில் சிக்கி கீழே விழுந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தலையில் பலத்த காயம் அடைந்து இருந்த ரமேஷ் ஜெய்துலானி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மிர்துன் ஜெயசிங்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






