என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை வந்த விமானத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் பயணி உயிரிழந்தார். இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலந்தூர்:

    மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு இன்று காலை ‘ஓமன் ஏர்’ விமானம் வந்தது.

    இதில் தான்சானியா நாட்டைச்சேர்ந்த செல்மெனி கெனி பாண்ட் (31) பயணம் செய்தார். அவருக்கு திடீர் என்று மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதுகுறித்து விமானி மூலம் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். விமானம் சென்னையில் தரை இறங்கியதும், மருத்துவ குழுவினர் விரைந்து சென்று செல்மெனி கெனி பாண்ட்டை பரிசோதனை செய்தனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காஞ்சிபுரத்தில் ஓட்டல்களில் பயன்படுத்திய வீட்டு சிலிண்டர்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தன.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி தனி தாசில்தார் பிரியா தலைமையில் அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் உள்ள டீ கடைகள், ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் மானிய விலை சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கிருந்த 2 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

    மேலும் சந்தவெளியம்மன் கோயில் தெரு, கைலாசநாதர் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த தலா 300 கிலோ ரே‌ஷன் அரிசியை கைப்பற்றினர். அதனை காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள புள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மன்னன் (வயது 41), கோபி (31).

    இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் இருந்து புள்ளலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கோபி ஓட்டினார்.

    காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் புதுப்பாக்கம் ரெயில்வேகேட் அருகே சென்று கொண்டிருந்தபோது அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென கோபி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை பற்றிய விவரம் தெரியவில்லை.

    இந்த விபத்தில் கோபி, மன்னன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து காஞ்சி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    மதுராந்தகம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு எல்.எண்டத்தூர், உத்திரமேரூர் வழியாக பஸ் சென்றது. அந்த பஸ் தண்டலம் பகுதியில் செல்லும்போது மாடு குறுக்கே வந்தது. அப்போது டிரைவர் பிரேக் பிடித்தார்.

    டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் 30 பேர் படுகாயம் அடைந்து மேல்மருவத்தூர், மதுராந்தகம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மேல்மருவத்தூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    செங்கல்பட்டு அருகே பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய மாணவர் உடல்கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு, சின்னக்கடை திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார், கூடைப்பந்து வீரர்.

    கடந்த 30-ந் தேதி பள்ளி மைதானத்தில் விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இதில் விக்னேஷ் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தியபடி ஓடினார்.

    அப்போது காற்றின் வேகத்தில் தீபத்தில் இருந்த தீ விக்னேஷ் மீது பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீயை அணைத்து விக்னேசை மீட்டனர்.

    இதில் உடல் கருகிய அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு விக்னே சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவர் படித்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    பள்ளி முன்பும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    இஸ்ரோ தலைவர் சிவன் அழுதபோது, பிரதமர் மோடி கட்டிபிடித்து தேற்றினார். இதன் மூலம் மோடி மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
    ஆலந்தூர் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திரயான்-2 மூலமாக இந்தியா உலகஅரங்கில் சிறந்த இடத்தை சென்று இருக்க வேண்டியது. ஆனால் விக்ரம் லேண்டர் கருவி தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்த மகிழ்ச்சி தருணத்தை நூல் இழையில் இழந்து இருக்கிறோம். இஸ்ரோ தலைவர் சிவன் அழுதபோது, பிரதமர் மோடி கட்டிபிடித்து தேற்றினார்.

    இதன் மூலம் மோடி மீது மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. யார் ஒருவர், கலங்கும் போது தாயுள்ளத்துடன் தட்டி கொடுக்கிறாரோ அவர் தான் மிகப்பெரிய தலைவராக இருக்க முடியும். விரைவில் இஸ்ரோ உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிண்டி அண்ணாசாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே விபத்தில் 3 மாணவிகள் பலியான சம்பவம் குறித்து லாரி டிரைவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    ஆலந்தூர்:

    கிண்டி அண்ணாசாலையில் ஒரு தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. சம்பவத்தன்று மாலை அந்த கல்லூரி அருகே மாணவிகள் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு தாறுமாறாக வந்த ஒரு டேங்கர் லாரி மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மாணவிகள் காயத்ரி, சித்ரா, ஆஷா ஸ்ருதி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி நடைபெற்றது.

    கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் டேங்கர் லாரி டிரைவர் ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். அவர் மீது சென்னை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ரூ.25.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
    காஞ்சிபுரம் அருகே கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த காவிதண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி கோமதி (32). இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். அந்த மாடுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் கோமதி அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அழைத்து வருவது வழக்கம்.

    கடந்த 5-ந் தேதி மாலை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற கோமதி இரவு 9 மணிவரை வீடு திரும்பவில்லை. உடனடியாக கணவர் ஜெயபால் மற்றும் உறவினர்கள் தேடினார்கள்.

    அப்போது கிராமத்தில் உள்ள ஏரி வரத்து கால்வாய் அருகே கோமதி நிர்வாண நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை சம்பந்தமாக சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை சம்பந்தமாக கோமதியின் கணவர் ஜெயபால் மற்றும் அவரது அண்ணன், உறவினர்களை நேற்று இரவு முதல் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன்விரோதம் காரணமாக கோமதி கொலை செய்யப்பட்டாரா, சொத்து தகராறா? தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

    இது குறித்து கூறிய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கொலை பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஓரிருநாளில் கொலையாளியை பிடித்து விடுவோம் என தெரிவித்தனர்.

    பள்ளிக்கரணை அருகே ரூ.20 ஆயிரம் கடன் தகராறில் பெண் பூ வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணையை அடுத்த மயிலை, பாலாஜி நகரில் வசித்து வந்தவர் லட்சுமி (வயது45). பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு லட்சுமி என்பவரிடம் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்கான வட்டித் தொகையை கடந்த 2 மாதமாக பூ வியாபாரி லட்சுமி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று பூ வியாபாரி லட்சுமியிடம் கடன் தொகையை திரும்ப கேட்டு லட்சுமியும் அவரது 3 மகன்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது  பூ வியாபாரி லட்சுமியை தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூ வியாபாரி லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அத்தி வரதர் விழாவில் தெரு வாசிகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருந்தது மனித உரிமை மீறலாகும். ஆகையால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் சேதுராயர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆக.17-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனால் கோயிலை சுற்றி உள்ள தெருக்களை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோவிலை சுற்றியுள்ள தெருவாசிகள் வீட்டை விட்டு வெளியே வந்து தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள கூட முடியாமல் மிகுந்த சிரமமடைந்தனர்.

    நானும் அவ்வாறே அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீட்டில் முடங்கி கிடந்தேன். வீட்டு சிறையில் அடைக்கப்பட்டது போல் இருந்தது. இது மனித உரிமை மீறல்.


    இந்த 48 நாட்களும் தெரு வாசிகள் வெளியே செல்ல முடியவில்லை. வேலைக்கும் செல்ல முடியவில்லை. இந்த இழப்புக்கு இந்து அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தான் காரணம். எனவே எனக்கு நஷ்ட ஈடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.


    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாய்ப்பால் வங்கி மூலம் 150-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசால் கடந்த நவம்பர் 2018 முதல் தாய்ப்பால் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. தாய்ப்பால் கொடுக்க இயலாத தாய்மார்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கி உறுதுணையாக உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த தாய்ப்பால் வங்கி மூலம் 150-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். எனவே, தாய்ப்பால் கொடுக்க இயலாத தாய்மார்கள் இதன் மூலம் பயன்பெறலாம். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம் அருகே பெண் கழுத்து அறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த சாலவாக்கம், அருகே உள்ள காவிதண்டலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். தனியார் பள்ளி பஸ்சில் டிரைவராக உள்ளார்.

    இவரது மனைவி கோமதி (வயது 32). இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கோமதி திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே கோமதி ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாலவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மோப்ப நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து காவூர் வரை ஓடி நின்று விட்டது. அங்கிருந்து கொலையாளிகள் வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கோமதியுடன் நெருங்கி பழகியவர்கள் யார்-யார்? அவர் எதற்காக இங்கு வந்தார் என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக கோமதியின் கணவர் ஜெயபாலிடமும் விசாரணை நடக்கிறது.

    இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×