என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்ததால் ஆதங்கம் அடைந்த போலீஸ்காரர், விளம்பர பேனரை கிழித்து எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
    தாம்பரம்:

    பள்ளிக்கரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் சரிந்து மொபட்டில் சென்ற பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ மீது விழுந்தது.

    இதில் நிலைதடுமாறி விழுந்த சுபஸ்ரீயின் மீது லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அரசியல் கட்சியினரின் பேனர் கலாச்சாரத்துக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து அதிரடி உத்தரவுகள் பிறப்பித்தது. இதேபோல் பேனர் வைப்பதில்லை என்று அரசியல் கட்சியினரும் அறிவித்து உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்டு உள்ள பேனர்கள் மற்றும் விளம்பர போர்டுகளை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த விளம்பர பேனரை பார்த்ததும் போலீஸ்காரர் ஒருவர் ஆவேசத்தில் கிழித்து எறியும் வீடியோ காட்சி தற்போது சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

    சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கதிரவன். இவர் இரவு பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில்சென்று கொண்டிருந்தார்.

    விளம்பர பலகையை கம்பியுடன் பிடுங்கி எறியும் காட்சி.

    அப்போது சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர போர்டு மற்றும் பேனரை கண்டு கடும் ஆத்திரம் அடைந்தார். ஆவேசம் அடைந்த அவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த விளம்பர பலகையை கம்பியுடன் பிடுங்கி எறிந்தார்.

    பின்னர் அங்கிருந்த மற்றொரு விளம்பர பேனரை கிழித்தார். இதனை கண்டு அவ்வழியே சென்ற இளைஞர்கள் அங்கு திரண்டனர். அவர்களும் போலீஸ்காரர் கதிரவனுடன் சேர்ந்து பேனரை கிழித்து வீசினர்.

    இந்த காட்சிகளை வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார். பேனரை கிழித்து எறிந்த போலீஸ்காரர் கதிரவனை பொதுமக்கள் பாராட்டினர்.

    அப்போது போலீஸ்காரர் கதிரவன் கூறும்போது, ‘‘சமீபத்தில் பேனரால் பலியான சுபஸ்ரீயின் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்தது. அதனால் தான் இப்படி பேனரை அகற்றினேன்’’ என்றார்.
    காஞ்சிபுரத்தில் வழக்கறிஞரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வழக்கறிஞராக இருப்பவர் சந்திரசேகர். இவர் சின்ன காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு வழக்கு சம்பந்தமாக சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் வழக்கறிஞர் சந்திரசேகரை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு தெரிந்தது.

    இதையடுத்து காஞ்சிபுரம் பார் அசோசியேசன், காஞ்சிபுரம் லாயர்ஸ் அசோசியேசன், காஞ்சிபுரம் அட்வகேட் அசோசியேசன் ஆகிய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் கார்த்திகேயன், பார்த்தசாரதி, ரவிக்குமார் மற்றும் சத்தியமூர்த்தி, தாங்கிபழனி, துரைமுருகன், இ.எல்.கண்ணன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
    பிரதமர் மோடியும், சீன அதிபரும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதையடுத்து, திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
    மாமல்லபுரம்:

    பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிஜின்பிங்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

    இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தலைவர்கள் பார்வையிடும் இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். சீன அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் வந்து இடங்களை விரைவில் பார்வையிட உள்ளனர்.

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் ஏற்கனவே ராணுவ கண்காட்சியின்போது அமைக்கப்பட்ட ஹெலிபேடு தளத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜிஜின்பிங்கும் ராணுவ ஹெலிகாப்டரில் வந்து இறங்க உள்ளனர்.

    இதற்காக மீண்டும் அந்த ஹெலிபேடை சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. தலைவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு காரில் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை முதற்கட்டமாக நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க தொடங்கி விட்டனர்.

    ஹெலிபேடு எதிரே இருந்த சாலை தடுப்பு சுவர்கள் 20 மீட்டர் தூரத்திற்கு இடிக்கப்பட்டு பாதுகாப்புபடை அதிகாரிகளின் கார்கள் வேகமாக வந்து திரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகிறார்கள்.

    ஹெலிபேடு சீரமைப்பு பணிகள் முடிந்ததும் இரு நாட்டு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளும் வான்வழி வெள்ளோட்டம் பார்க்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை பற்றி விமர்சனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தாலுக்கா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    காஞ்சிபுரம்:

    காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை பற்றி விமர்சனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தாலுக்கா அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காஞ்சீ ஜீவீ. மதியழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கோ‌ஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் ராம.நீராளன், பிரபாகரன், பச்சையப்பன், லோகநாதன் சுகுமாரன், பவுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    காஞ்சிபுரம் அருகே கோழிப்பண்ணையில் எரிசாராயம் பதுக்கிய உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    மாகறல் அடுத்த மேல் பேரமநல்லூர் கிராமம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.

    இந்த பண்ணையில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மண்டல சி.ஐ.யு.க்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை கோழிப்பண்ணையில் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் 35 லிட்டர்கொள்ளளவு கொண்ட 425 கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் கோழிப்பண்ணை உரிமையாளர் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தை அடுத்த அஞ்பாக்கம் அருகே காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த வேன் டிரைவரின் கட் டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதனை கண்ட அவ்வழியாக வந்தவர்கள் அங்கு திண்டனர். உடனே மினி வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாகனத்தை பொது மக்கள் சோதனையிட்டபோது அதில் எரிசாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து மாகறல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வேனை சோதனை செய்ததில் 35 லிட்டர் அளவு கொண்ட 25-க்கும் மேற்பட்ட கேன்களில் இருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய வேன் டிரைவர் மற்றும் வேன் உரிமையாளரை தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சாலையில் 150 கேனில் எரிசாராயம் கடத்திய லாரி சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து பொது மக்கள் கூறும்போது, ‘இப்பகுதிகளில் சோதனைசாவடிகள் ஏதும் இல்லாததால் எரிசாராயம் கடத்தல் எளிதாக நடை பெறுகிறது. எனவே போலீசார் சோதனை சாவடி அமைத்து இதனை தடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஓசூரை அடுத்த அவள பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் குடவின் ராஜ் குமார் (55). ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் அதிகாரியாக இருந்தார். இவரது மனைவி சொப்னா செல்வகுமாரி (50).

    இவர்கள் இருவரும் நேற்று இரவு ஓசூரில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    நாவலூர் என்ற இடத்தில் வந்தபோது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது திடீரென கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் இருந்த குடவின் ராஜ், அவரது மனைவி சொப்னா செல்வகுமாரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பலியானவர்கள் உடல்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிட்லபாக்கத்தில் சேதமடைந்த மின்கம்பம் திடீரென முறிந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீர் கேன் வியாபாரி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் சாரங்கன் அவென்யூ கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேது (42). அதே பகுதியில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டில் உணவு சாப்பிட்டார். பின்னர் மீதி இருந்த உணவை வீட்டின் வெளியே உள்ள தெரு நாய்களுக்கு வைப்பதற்காக சென்றார்.

    அப்போது தெருவில் இருந்த சேதமடைந்த மின் கம்பம் திடீரென முறிந்து சேதுவின் மீது விழுந்தது. மின்கம்பத்தில் இருந்த வயர்கள் அறுந்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சேதுவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேது பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இந்த பகுதியில் பல வருடங்களாக மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையிலேயே உள்ளன. இதே போல் அதிக அளவு மின் கம்பங்கள் காட்சியளிக்கிறது.

    இந்த மின் கம்பங்களை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சேது உயிரிழப்புக்கு மின் வாரியத்தின் அலட்சியமே காரணம். மேலும் உயிர் பலி ஏற்படாமல் இருக்க சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    முகலிவாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு, பூமிக்கு அடியில் சரிவர மின் கம்பி புதைக்கப்படாததால் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுபஸ்ரீ பலியான இடம் அருகே விளம்பர பலகை சரிந்து படுகாயம் அடைந்த தொழிலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    பள்ளிக்கரணை:

    குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12-ந் தேதி அவர் பணி முடிந்து மொபட்டில் பள்ளிக்கரணை அருகே பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சாலை நடுவே அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெவித்தது.

    இதையடுத்து பேனர் வைத்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் லாரி டிரைவர் முதல் குற்றவாளியாகவும், ஜெயகோபால் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கினர். சுபஸ்ரீ பலியான சுமார் 50 மீட்டர் தூரத்தில் தனியார் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த ராட்சத விளம்பர பலகையை அகற்றும் பணியில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான பெருங்குடியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென விளம்பர பலகை சரிந்து விழுந்தது. இதில் ராஜேஷ் படுகாயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கரணையில் அடுத்தடுத்து பேனர் சரிந்து விழுந்த விபத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    துரைப்பாக்கத்தில் வாலிபர் அடித்துகொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 32). வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவரது உறவினர் மஞ்சள் நீராட்டு விழா துரைப்பாக்கம் கண்ணகி நகரில் நடந்தது. அப்போது வெங்கடேசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செந்தில், குகன் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் அருகில் கிடந்த கட்டையால் வெங்கடேசனை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில், குகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான நிலையை உருவாக்கவே பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பலமொழிகள் பேசும் மக்களை கொண்ட நமது தேசம், பல்வேறு கலாசாரங்களை கொண்டிருந்தாலும் ஒரே தேசம் என்ற பெருமை கொண்டது. இதில் ஒரு மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறுவது எதிர்மறையான நிலையை உருவாக்கும்.

    ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பதை மக்களிடம் புகுத்த பா.ஜனதா முயற்சி செய்கிறது. அதைத்தான் அமித்ஷா கூறி இருக்கிறார். நாடு சுதந்திரம் பெறுவதில் காந்தியிடம் தோற்ற இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அதன் கொள்கை இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.

    120 கோடி மக்களை கொண்ட நாட்டில் மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசுவது எப்படி சாத்தியம்? பரவலாக இந்தி பேசலாம். எல்லோரும் எப்படி ஒரே மொழியை பேச முடியும்? ஒரு மொழியை விரும்பி படிக்கலாம். திணிக்க முயன்றால் எதிர்ப்புதான் வரும்.

    நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான நிலையை உருவாக்கவே பா.ஜனதா முயற்சி செய்கிறது. எல்லா மொழியும், மதமும் மதிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் காந்தியும், நேருவும், காமராஜரும் விரும்பினார்கள். அதை சீர்குலைக்க திட்டமிடுகிறார்கள்.

    வங்கமொழியை மதிக்காமல் பஞ்சாப் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான், பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சென்றது. பா.ஜனதாவும் அமித்ஷாவும் இதை புரிந்துகொள்ள வேண்டும் மக்களை அடிமைகளாக நடத்த முயற்சிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆதம்பாக்கத்தில் காரில் சென்று நகை பறிப்பில் ஈடுபட்ட டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் புஷ்பா (72).

    சம்பவத்தன்று அதிகாலை இவர் வீடு அருகே நடந்து சென்றார். அவ்வழியாக காரில் வந்த மர்ம நபர் ஒருவர் புஷ்பா அருகே காரை நிறுத்தி அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

    இதேபோல் நங்கநல்லூர் பகுதியிலும் ஒரு மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது. அங்குள்ள 22-வது தெருவில் மாலதி (62) என்பவர் வீட்டு வளாகத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த நபர் காரை வீட்டு முன்பு நிறுத்தினார். பின்னர் அந்த நபர் முகவரி கேட்பது போல நடித்து மாலதி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

    இந்த இரு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    நேற்று இரவு ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் ராம் நகர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் காரில் ஏறி தப்பி ஓடினார். சந்தேகமடைந்த போலீசார் ஜீப்பில் அவரை துரத்தினர். சினிமா பாணியில் ‘சேசிங்’ செய்த போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் காரை மடக்கினர்.

    பின்னர் காரில் இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அயனாவரத்தைச் சேர்ந்த பாலாஜி (50) என்பது தெரிய வந்தது. இவர் 2 மூதாட்டிகளிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    டிரைவராக பணியாற்றி வந்த இவர் கல்லூரி படிக்கும் தனது 2 மகள்களின் கல்விச் செலவுக்காக நகை பறிப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
    பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையாட்டி பாதுகாப்பு வசதி மற்றும் அங்குள்ள இடங்களை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மாமல்லபுரம்:

    பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சந்திப்பு அக்டோபர் 11-ந்தேதி முதல் 13-ந்தேதிவரை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. தலைவர்கள் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் பாதுகாப்பு வசதி மற்றும் அங்குள்ள இடங்களை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக உயர் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று மாமல்லபுரத்திற்கு வந்தனர். அவர்கள் பிரதமர் மோடியும் சீன அதிபரும் ஹெலிகாப்டரில் வந்து இறங்க இருக்கும் திருவிடந்தை ஹெலிபேடு பகுதியை ஆய்வு செய்தனர்.

    பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவர்கள் காரில் செல்லும் சாலை எப்படி இருக்கிறது? அவர்கள் தங்குவதற்கு வசதியாக மாமல்லபுரத்தில் ‘ரிசார்ட்’ உள்ளதா? இருவரும் நின்று புகைப்படம் எடுக்க உள்ள கடற்கரை கோவில் பகுதி எப்படி உள்ளது? அங்கு எந்தெந்த இடங்களில் இருநாட்டு நவீன ரேடார்கள் அமைக்க வேண்டும் என்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    இவர்களின் உறுதிக்கு பின்னர் சீனாவில் இருந்து அங்குள்ள அதிபரின் பாதுகாப்பு படையினர் மாமல்லபுரத்திற்கு வந்து ஆய்வு நடத்த உள்ளதாக தெரிகிறது.

    தற்போது மத்திய மாநில அனைத்து துறை உயர் அதிகாரிகளும் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×