search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை பெற்று வரும் தொழிலாளி
    X
    சிகிச்சை பெற்று வரும் தொழிலாளி

    சுபஸ்ரீ பலியான இடம் அருகே விபத்து - விளம்பர பலகை சரிந்து காயம் அடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை

    சுபஸ்ரீ பலியான இடம் அருகே விளம்பர பலகை சரிந்து படுகாயம் அடைந்த தொழிலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    பள்ளிக்கரணை:

    குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12-ந் தேதி அவர் பணி முடிந்து மொபட்டில் பள்ளிக்கரணை அருகே பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சாலை நடுவே அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் குரல் கொடுத்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெவித்தது.

    இதையடுத்து பேனர் வைத்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் லாரி டிரைவர் முதல் குற்றவாளியாகவும், ஜெயகோபால் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இறங்கினர். சுபஸ்ரீ பலியான சுமார் 50 மீட்டர் தூரத்தில் தனியார் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த ராட்சத விளம்பர பலகையை அகற்றும் பணியில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான பெருங்குடியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென விளம்பர பலகை சரிந்து விழுந்தது. இதில் ராஜேஷ் படுகாயம் அடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கரணையில் அடுத்தடுத்து பேனர் சரிந்து விழுந்த விபத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×